2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் சிறிமாவைத் தள்ளிய ஜே.ஆர்

Thipaan   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 64)

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 81 ஆம் சரத்தானது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குதல் மற்றும் அவர்களது சிவில் உரிமைகளைக் களைதல் பற்றிக் கூறியது. நீதிபதிகளைக் கொண்டமைந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று எவரேனுமொருவர் இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வர முன்பு அல்லது வந்த பின்பு செய்த அல்லது செய்யாது விட்ட விடயங்களுக்காக சிவில் உரிமைகளை இழக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்படலாம். அத்துடன், அத்தகையவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராயின் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கிகாரத்துடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம் என்று 81 ஆம் சரத்து கூறியது. ஏற்கெனவே 1978 மார்ச் மாதத்திலே, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவைக் குறிவைத்து, முன்னைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ, குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவானது நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைக்கு இசைந்தாற் போல 1978 மார்ச் 20 ஆம் திகதி நீதியரசர் ஜே.ஜீ.ரீ.வீரரட்ண தலைமையில் நீதியரசர் எஸ்.சர்வானந்தா மற்றும் நீதியரசர் கே.ஸீ.ஈ.டி அல்விஸ் ஆகிய இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்களையும் மேலும் ஒரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரையும் அங்கத்தவர்களாகக் கொண்ட, மே 1970 முதல் ஜூலை 1977 வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த அதிகாரத் துஷ்பிரயோகங்கள் பற்றிக் கண்டறிவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 1978 ஓகஸ்ட் முதலாம் திகதி விசாரணைகளை ஆரம்பித்த இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கத் தொடங்கியது. இதன்படி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் விசாரணைக்குழு அமைக்கப்படுவதை வரவேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, குறித்த அழைப்பாணைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தடையுத்தரவு வேண்டி றிட் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.  

திருத்தத்தின் மேல் திருத்தம்  

மேன்முறையீட்டு நீதிமன்றமானது குறித்த றிட் மனுவை ஏற்றுக்கொண்டது. இதற்கான காரணம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டத்தில் ஒரு தொழில்நுட்ப வழு இருந்தமையாகும். குறித்த சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றியிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது, அச்சட்டம் நிறைவேறிய 1978 பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு குறித்த சட்டம் வழங்கியிருக்கவில்லை. இந்தத் தொழில்நுட்ப வழு காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றமானது சிறிமாவின் குறித்த றிட் மனுவை ஏற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் குறித்த தொழில்நுட்ப வழுவை ஏற்றுக்கொண்டதுடன் துரித கதியில் அதனைச் சரிசெய்வதற்கும் தயாரானது. இதன்படி 1978 நவம்பர் 10 ஆம் திகதி பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் இரண்டு சட்டத் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. முதலாவது அரசியலமைப்பின் 140 சரத்துக்கு திருத்தமொன்றை முன்வைத்தது.

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் 140 ஆவது சரத்தானது மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு றிட் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை வழங்கியது. இந்த அதிகாரத்தில் சில மட்டுப்பாடுகளை இந்தத் திருத்தத்தினூடாகக் கொண்டுவர அரசாங்கம் எண்ணியது. அதாவது 140 ஆவது சரத்தானது றிட் உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வழங்கியிருந்த நிலையில், சில சந்தர்ப்பங்களில் அவ்வதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிடமன்றி, நாட்டின் மீயுயர் நீதிமன்றமான உயர் நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்பியது. இதற்கு அரசாங்கம் சொன்ன காரணம், உயர் நீதிமன்ற நீதியரசர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட ஜனாதிபதி விசாரணைக்குழுக்களுக்கு எதிரான றிட் உத்தரவுகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிப்பது முறையல்ல என்பதாகும். இது எத்தனை தூரம் பொருத்தமான கருத்து என்பது விவாதத்துக்குரியது. ஆனால், எதனையும் நிறைவேற்றத்தக்க பெரும்பான்மைப் பலம் ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடம் அன்று இருந்தது. அடுத்ததாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பதற்கான சட்டத்தில், 10 பெப்ரவரி 1978 இற்கு முன்னதான காலப்பகுதியில் நடந்தவை தொடர்பிலும் விசாரிப்பதற்கான அதிகாரத்தை வழங்கும் திருத்தத்தையும் பிரதமர் பிரேமதாஸ முன்வைத்தார். இத்திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சிறிமாவோ பண்டாரநாயக்க, “ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது அவசரகதியில் இத்திருத்தங்களை முன்வைக்கிறது. ஒரு நீதிமன்றத்தால் சட்டவிரோமானது என்று அறிவிக்கப்பட்ட ஒரு விசாரணைச் செயற்பாட்டை, சட்டபூர்வமாக்குவதற்காகவே இந்த அவசரம்” என்று கண்டித்துப் பேசியதுடன் இரண்டு மசோதாக்களுக்கும் எதிராக வாக்களித்தார். ஆனால் அவரது பேச்சும் எதிர்ப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் 5/6 பெரும்பான்மைப் பலத்துக்கு முன்னால் அர்த்தமற்றதாகவே இருந்தது.  

தொடர்ந்தது விசாரணை  

குறித்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதுடன், குறித்த ஜனாதிபதி விசாரணைக்குழு நடவடிக்கைகள் மீளத் தொடர்ந்தன. 1980 மே ஏழாம் திகதி சிறிமாவோ, தான் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகப் போவதில்லை என்று அறிவித்தார். சிறிமாவோ ஆஜராகாத காரணத்தினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது தனது விசாரணையை ஒருதலைப்பட்சமாக கொண்டு நடத்தியது. 1980 ஓகஸ்ட் 25 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது அறிக்கையை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பித்தது. குறித்த அறிக்கையில் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் முன்னாள் அமைச்சரும் சிறிமாவின் உறவினரும் சிறிமாவின் வலதுகரமாகத் திகழ்ந்தவருமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும் குற்றமிழைத்தவர்களாகக் காணப்பட்டார்கள்.  

சிறிமாவோவுக்காகப் பரிந்துரை  

குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, 1980 செப்டம்பர் 24 ஆம் திகதி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, குறித்த அறிக்கையில் கண்டறியப்பட்ட விடயங்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

இதன் அடுத்தபடி புதிய அரசியல் யாப்பின் 81 ஆம் சரத்தின் கீழான நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாகிய சூழலில், குறித்த நடவடிக்கைகளைத் தடுக்க பலதரப்புக்களும் ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்தன. இந்தச் சந்திப்புக்களில் பல முக்கியஸ்தர்களும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக 81 ஆம் சரத்தின் கீழான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்க்குமாறு ஜனாதிபதி ஜே.ஆரிடம் வேண்டினர். இப்படி வேண்டியவர்களில் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவருமான சேர்.ஜோன் கொத்தலாவல குறிப்பிடத்தக்கவர். சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்காக ஜே.ஆரிடம் அவர் பரிந்து பேசியிருந்தார். ஆனால் அக்கருமத்தை அவர் நிறைவு செய்ய முன்பே 1980 ஒக்டோபர் இரண்டாம் திகதி இயற்கை எய்தினார். 81 ஆம் சரத்தின் கீழான நடவடிக்கையைத் தடுக்கும் வலிமை சிறிமாவோவுக்காகப் பரிந்து பேசிய எவருக்கும் இருக்கவில்லை. ஜே.ஆர் தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்ததன் படி 1980 ஒக்டோபர் ஆறாம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸ குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க ஆகியோரது குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.  

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு  

சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம், 1970 - 1977 காலப்பகுதியிலும் அதற்கு முன்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்த ஒவ்வொரு பொழுதிலும் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘தனிச்சிங்கள’ச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் எனும் ‘குதிரைப் பேரத்தை’க் கொண்டு வந்ததும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; தரப்படுத்தல் எனும் அநீதியை இழைத்ததும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; பௌத்தத்துக்கு முதலிடம் என முதலில் அறிவித்ததும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி; ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் ‘இனவாத, இன-மைய’ அரசியலைக் கட்டியெழுப்பியதிலும் தமிழர்களுக்கு அநீதியிழைத்தமையிலும் பண்டாரநாயக்க குடும்பத்தினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் பங்கு முக்கியமானது.

இதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குரியது என்பதும் மறுக்க முடியாதது. சிறிமாவோ பண்டாரநாயக்கவை பழிதீர்க்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த நியாயங்களை விடத் தமிழர் தரப்புக்கு இருந்த, இருக்கின்ற நியாயங்கள் அதிகம். ஆகவே இந்தச் சூழலில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சிறிமாவினதும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினதும் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஆதரவளித்திருக்கலாம். ஆனால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அதனைச் செய்யவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்துக்கு எதிராகத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவரும் இலங்கைப் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சபையில் பேசினார். தாம் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக அறிவித்த அவர், வெறுப்பையும் கசப்புணர்வையும் கைவிடுமாறு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வேண்டினார். முன்னாள் பிரதமர் சிறிமாவோவின் ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியினரைவிட அதிக துன்பத்தை அனுபவித்தவர்கள் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரே என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஆனால் தாம் அதற்காகப் பழிவாங்கும் சந்தர்ப்பமாக இதனைக் கருதப்போவதில்லை என்றும், தாம் நியாயத்தின்படி நடக்கவே விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.  

நினைத்ததை நடத்திய ஜே.ஆர்  

இந்தப்பேச்சு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நியாயமான நிலைப்பாட்டை எடுத்துக் காட்டியதேயன்றி இந்தக் கைங்கரியம் நிறைவேறுவதை எவ்வகையிலும் மாற்றக்கூடியதாக இருக்கவில்லை. தமது பெரும்பான்மையைக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 139 ற்குப் 19 என்ற வாக்குகளின் அடிப்படையில் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்திருந்தன. குறித்த தீர்மானத்தின் படி சிறிமாவோ பண்டாரநாயக்கவினதும், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவினதும் குடியியல் உரிமைகள் ஏழு வருடங்களுக்கு பறிக்கப்பட்டன. தன்னுடைய அரசியல் எதிரிகளை மிக நுட்பமாக ஜே.ஆர் அரசியல் அஞ்ஞாதவாசத்துக்கு அனுப்பிவைத்தார். இத்தோடு இந்தக் கைங்கரியம் நின்றுவிடவில்லை. தேர்தல் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, இவ்வாறு குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டவர் வேறொரு வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரம் செய்வது கூட தடைசெய்யப்பட்டது. அவ்வாறு யாதேனும் வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்தால், குறித்த வேட்பாளர் தகுதியிழப்பார் என்றவாறு சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. முற்றாக சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலிலிருந்து அந்நியப்படுத்துவதை சட்டரீதியாக ஜே.ஆர் செய்து முடித்தார். இதுபற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ரஜீவ விஜேசிங்ஹ சிறிமாவுக்கிருந்த ஆளுமையும் ஜனவசியமும் ஜே.ஆருக்கு இருக்கவில்லை எனவும், அடுத்த தேர்தலில் சிறிமாவோ ஆட்சியைப் பிடிப்பதை எப்படியாவது தடுத்துவிடவே ஜே.ஆர் அவரது குடியியல் உரிமைகளைப் பறித்தார் என்றும் சாடுகிறார். இது எத்தனை தூரம் ஏற்புடைய கருத்து என்ற வாதம் ஒருபுறமிருக்க, நிச்சயமாக சிறிமாவோவுக்கு மக்களபிமானம் இருக்கவே செய்தது என்பதை மறுக்கமுடியாது. அதுவும் அனுதாப அலையில் வெற்றிபெறும் வல்லமை அவருக்கு இருந்தது. இதே அனுதாப அலை அரசியல் அவரது மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குப் பின்னர் உதவியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, சிறிமாவோ மீண்டும் தலையெடுப்பதை முற்றாகத் தவிர்ப்பதற்காகவே ஜே.ஆர் இதனைச் செய்திருக்கலாம். சிறிமாவோவின் குடியியல் உரிமைகளைப் பறித்தமை பற்றி சர்வதேச ஊடகங்கள் ஜே.ஆரிடம் கேள்வி கேட்ட போது, “அது எனது முடிவல்ல; இரவானது பகலைப் பின்பற்றி வருவதைப் போல, நாங்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முடிவைப் பின்பற்றினோம். ஒருவருக்கு மரணதண்டனை வழங்கியமைக்காக நீங்கள் நீதிபதியைச் சாடுவீர்களா?” என்று பதிலளித்தார். தொடர்ந்தும் சிறிமாவோவுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது பற்றி கேட்டபோது, “அதை உங்களுக்கு, ஏன் வேறு எவருக்கும் சொல்ல மாட்டேன், இந்தச் சந்தர்ப்பத்தில், அவ்வாறு செய்வதற்கான எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. எனக்குத் தெரியாது, நாளை அல்லது மறுநாள் இந்த நிலைமை மாறலாம். யாருக்குத் தெரியும்? இது அரசியல் அல்ல; திருமதி. பண்டாரநாயக்கவுக்கு  எதிராக விசேடமாக விசாரணைக்குழு அமைக்கப்படவில்லை. இந்த விசாரணைக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட ஏனையவர்களதும் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்கும் போது புனித பசு மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்”? என்று அவரது வழக்கமான திமிருடன் பதிலளித்தார்.  

ஆனால், இந்தச் சூழலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எடுத்த நிலைப்பாடும் அவர்களது செயற்பாடும் பெரிதும் பாராட்டுக்குரியது. தமிழ் மக்களின் அரசியல் எவ்வளவு தூரம் உணர்ச்சிகளுக்கப்பால் கொள்கைவழி ஒழுங்கமைந்திருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.  

( அடுத்த வாரம் தொடரும்)    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .