2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 07 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது.  

லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர், முதற்பாதி முடிவடைய இரண்டு நிமிடங்கள் இருக்கையில், எம்ரே கானிடமிருந்து பந்தைப் பெற்ற அடம் லலானா பெற்ற கோலின் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற லிவர்பூல், இரண்டாவது பாதியிலும் சிறப்பான பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தது.

இரண்டாவது பாதியின் 57ஆவது நிமிடத்தில், லலானாவிடமிருந்து பந்தைப் பெற்ற ரொபேர்டோ பெர்மிங்கோ, லிவர்பூலின் நான்காவது கோலைப் பெற்றதோடு, அவ்வணியின் ஐந்தாவது கோலுக்கான பந்தை மனேயிடம் கொடுக்க, அவர் அதைக் கோலாக்கினார். பின்னர் போட்டியின் 91ஆவது நிமிடத்தில், ஜோர்ஜினியோ வெனோலும், லிவர்பூலுக்காக தனது முதலாவது கோலைப் பெற்றார். இக்கோலுடன், 6-1 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை லிவர்பூல் பெற்றது.

இதேவேளை, ஆர்சனல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில் ஆர்சனல் வெற்றி பெற்றிருந்தால், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலாம் இடத்துக்கு முன்னேறியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் 42ஆவது நிமிடத்தில் டொட்டென்ஹாமின் கெவின் விம்மரின் “ஓவ்ண் கோல்” இனால் ஆர்சனல் முன்னிலை பெற்றபோதும், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியை ஹரி கேன் கோலாக்கியதன் மூலம் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

மன்செஸ்டர் யுனைட்டெட், சுவான்சீ சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் யுனைட்டெட் வெற்றி பெற்றது. யுனைட்டெட் சார்பாக, ஸல்டான் இப்ராஹிமோவிக் இரண்டு கோல்களையும் போல் பொக்பா ஒரு கோலினையும் பெற்றனர்.

இந்நிலையில், தற்போதைய சம்பியன்களான லெய்செஸ்டர் சிற்றி, 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனிடம் தோல்வியடைந்தது.

இவ்வாரயிறுதி போட்டிகளின் முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், 26 புள்ளிகளுடன் லிவர்பூல் முதலிடம் வகிக்கையில், 25 புள்ளிகளுடன் செல்சி இரண்டாமிடத்திலும், 24 புள்ளிகளுடன், கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் மன்செஸ்டர் சிற்றி மூன்றாமிடத்திலும் ஆர்சனல் நான்காமிடத்திலும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X