2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் குக்?

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 08 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான அலஸ்டெயர் குக், இந்திய அணிக்கெதிராக இன்று ஆரம்பிக்கவுள்ள தொடருக்குப் பின்னர், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

31 வயதான குக், இதுவரை 135 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 54 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அலஸ்டெயர் குக், "ஆழ் மனதில், எவ்வளவு காலம் நான் நீடிப்பேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது, இரண்டு மாதங்களாக இருக்கலாம், ஓராண்டாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
தனியே ஒரு துடுப்பாட்ட வீரராகப் போட்டிகளில் பங்குபற்றும் நாளை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்த குக், அது நடக்குமாயின், முதலாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டு, அணித்தலைவராக யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார் எனவும் குறிப்பிட்டார்.

2010ஆம் ஆண்டு முதல் அணித்தலைவராகச் செயற்பட்டுள்ள குக், அவ்வளவு நீண்ட காலத்துக்கு, தன்னால் அணித்தலைவராகச் செயற்பட முயன்றமை குறித்துத் திருப்தியடைவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தத் தொடரின் பின்னர், தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் நேரடியாகத் தெரிவிக்காத போதிலும், முக்கியமான தொடருக்கு முன்னர் அவர் வெளியிட்டுள்ள கருத்து, இந்தத் தொடருக்குப் பின்னர் அவர் பதவி விலகுவதற்கான சமிக்ஞையாகவே கருதப்படுகிறது.

அவ்வாறான கருத்தைப் பிரதிபலித்த இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் மைக்கல் வோண், இந்தத் தொடரின் முடிவில் அல்லது அடுத்த ஆஷஸ் தொடரின் முடிவில், அணித்தலைமைப் பொறுப்பிலிருந்து குக் விலகுவார் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .