Gavitha / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்குக் குறைவில்லை என்றும், இந்த விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில், சித்திரவதைகள் தொடர்பிலான ஐ.நாவின் குழுவில் அறிக்கையிடவுள்ளதாகவும், வாழ்வதற்கான உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சித்திரவதை என்பது கடுமையான குற்றமாகும் என்று ஏற்றுக்கொண்டுள்ள இலங்கையானது, அது தொடர்பில் சட்டமானது நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டமானது உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சித்திரவதை, இதர கொடூரமான மனிதநேயமற்ற அல்லது இழிவுபடுத்தும் விதமாக நடத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான மாநாடு, நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை ஜெனீவாவில் நடைபெறும்.
2016ஆம் ஆண்டுக்கான மாநாடு, நவம்பர் 7ஆம் திகதி ஆரம்பமானதுடன் அந்த மாநாடு, டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி நிறைவடையவிருகின்றது. இந்நிலையில், நாட்டுக்குள் சித்திரவதைகளைக் குறைப்பது தொடர்பில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட மற்றும் கடந்த மாநாட்டின் போது, வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய விதம் தொடர்பில், உறுப்பு நாடுகள் என்றவகையில், இலங்கை அரசாங்கமும், அறிக்கையொன்றைக் கையளிக்கவேண்டும்.
இதேவேளை, இந்த மாநாட்டில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியாக, வாழ்வதற்கான உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிலிப் திஸாநாயக்க பங்கேற்கவுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“என்னதான் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் சித்திரவதைகளுக்குக் குறைவில்லை. நாட்டில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் சிவில் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, ஐ.நா குழுவில் கையளிப்பேன். அதன் பிரதியை, இலங்கை அரசாங்கத்துக்கும் கையளிப்பேன்” என்றார்.
“குற்றவாளிகளின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, சந்தேகநபர்களை பொலிஸார், சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர். இது சகல பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெறுகின்றது. இவ்வாறான சித்திரவதைகளை இல்லாமற் செய்வதற்கு, தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான சட்டங்கள் இலங்கையில் நடைமுறையில் இருந்தாலும், நாட்டுக்குள் இடம்பெறுகின்ற சித்திரவதைகளுக்கு குறைவே இல்லை என்றும் அவை தொடர்பிலேயே அறிக்கையிடவுள்ளேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .