2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘ஆவாவுக்கு பிரேஸிலிருந்தே கன்னி வாள் வந்துள்ளது’

Princiya Dixci   / 2016 நவம்பர் 16 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஆவா குழுவின் ஆரம்பத் தலைவன் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, அக்குழுவுக்கான முதலாவது வாள், பிரேஸிலிலிருந்தே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, 

ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கேட்டிருந்த, ஆவா குழு தொடர்பிலான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில்,  

“யாழ்பாணம், இணுவில் பகுதியில் அம்மன் கோவிலில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலொன்றின் பின்னர் தரப்பொன்று, தமது எதிர்த்தரப்பு அணி மீது தாக்குதல் நடத்துவதற்காகக் குழுவொன்றாக கூடியுள்ளனர். அதன் பின்னர் அந்த இளைஞர் குழுவினர், யாழ்ப்பாணம் பகுதியில் குண்டர் செயற்பாடுகளில் ஈடுபட முற்பட்டுள்ளதுடன், அவர்களை ‘ஆவா’ குழு என்றும் அடையாளப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.  

“இக்குழுவின் தலைவராக, கண்ணியம்மாள் கோவில் அருகில் இணுவில் மேற்கு, இணுவில் பகுதியில் வசிக்கும் குமரேஸ் ரத்தினம் வினோதன் எனும் ஆவா என்பவர் செயற்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

“இந்தக் குழுவில் பெரும்பான்மையானோர் 18 - 25 வயதுக்கு இடைப்பாட்டோராகும். இந்த குழுவின் இளைஞர் அணியினால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களிலும் பல்கலைக்கழக மாணவர்களை பயமுறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், வர்த்தகர்களை அச்சுறுத்திக் கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.   

“இக்குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள், பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நீதிமன்றத்தின் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தினால் அவர்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

“இதேநேரம், சிறையில் இருக்கும் போது அங்குள்ள பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வெளியில் வந்து அவர்களின் தொடர்புகளுடன் வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ள சம்பவங்களும் இருக்கின்றன.  

“இந்த குழுவில் சுமார் 62 பேர் இருக்கின்றனர் என்றே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 38 பேர் கைதுசெய்யப்பட்டு 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏனைய 32 பேர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

“அதுமட்டுமல்லாது, தற்போது பிரதான தலைவர்கள் என்று பாரதூரமான 8 பேர் பற்றியும் தேடி வருகிறோம். அதில் புதிய தலைவரும் இருக்கிறார் என்று கருதப்படுகிறது. ஏனெனில், ஆரம்பத் தலைவர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தான் தற்போதைய நிலைமை.  

எனினும், இவர்கள் சமூகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகான முஸ்தீபு கிடையாது. இந்த சகல இளைஞர்களிடமும் நவீன ரக மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன.  

“இதேநேரம், தென்னிந்தியாவில் இருந்து வந்த உறுப்பினர் ஒருவர் மூலமே இந்த குழுவினருக்கான முதலாவது வாள் வந்துள்ளது. பிரேசிலில் இருந்தே அந்த வாள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது போன்ற பல வாள்கள் இங்குள்ள ஆயுத பட்டறைகளிலும் உருவாக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறான வாளைத் தயாரிக்க முடியாதென கூறி ஆயுத பட்டறை உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் பதவாகியுள்ளது.  

“ஆகவே, இவ்வாறு இந்த விசாரணைகளை நாம் நடத்திச் செல்கிறோம். இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்ட இராணுவ உறுப்பினர் பற்றி, அவர் இராணுவத்தின் சுயேட்சை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை ரெஜிமென்ட்டில் பணியாற்றிய ஒருவர். பல மாதங்களாக அவர் கடமைக்கு சமுகமளித்திருக்கவில்லை. ஆகவே, தப்பிச்சென்றவராகவே அவர் இராணுவத்தினால் கருதப்படுகிறார். இதுதான் நிலைமை. நாம் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X