2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 16 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது.

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது.
இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக உள்ளூர் ஊடகங்கள், அணியின் பெறுபேறுகளைக் காட்டமாக விமர்சித்தன.

இந்நிலையில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், கொலம்பிய அணிக்கெதிராக 3-0 என்ற கோல் கணக்கில், ஆர்ஜென்டீன அணி வெற்றிபெற்றது. இதில் அணித்தலைவர் லியனல் மெஸ்ஸி, 10ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் பெற்று, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

ஆனால் வெற்றியின் பின்னர் அவர், ஊடகச் சந்திப்புக்கு, ஆர்ஜென்டீன குழாமில் காணப்பட்ட ஏனைய 25 பேரையும் அழைத்துக் கொண்டு வந்து, "ஊடகங்களுடன் இனிமேல் கதைப்பதில்லை என நாம் முடிவெடுத்துள்ளோம். ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, எங்கள் மீது மதிப்புக் குறைவு காணப்படுகிறது. நாங்கள் எதையுமே இதுவரை தெரிவித்ததில்லை. இது போன்று நடப்பமைக்கு மன்னிக்க வேண்டும், ஆனால் எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

திறமை வெளிப்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஆர்ஜென்டீன வீரரான எஸகி லவெஸ்கி, பயிற்சியின் பின்னர் மரிஹுவானா போதைப் பொருளைப் புகைத்தார் என வெளியான வானொலியொன்றில் வெளியான செய்தியே, அவ்வணியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"எங்களுக்கு மதிப்புக் கொடுத்தல் என்ற விடயத்தில், உங்களில் பலர் இல்லையென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் நுழைவது, மிகவும் மோசமானது. அதன் காரணமாகத் தான் நாங்கள், இதை அறிவிக்கிறோம்" என்று மெஸ்ஸி தெரிவித்ததோடு, அவ்விடயத்தை விட்டு, தனது அணியுடன் வெளியேறினார்.

ஊடகங்கள் மீதான இந்தப் புறக்கணிப்பு, மறு அறிவித்தல் வரை தொடருமென அறிவிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட வானொலியின் செய்தியாளர் மீது, வழக்குத் தொடரப்படவுள்ளதாகவும், இதன்போது வெளிப்படுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X