2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பயங்கரவாத தடுப்புச் சட்டம்

Thipaan   / 2016 நவம்பர் 22 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே.அஷோக்பரன் LLB (Hons)  

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 67)

அறிமுகமாகியது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்  

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சி ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக மாறிக்கொண்டிருந்தது. 1977 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த ஆயுதக் குழுக்களின் தாக்குதல் நடவடிக்கைகள் பரவலாக இடம்பெற்றன.  

குறிப்பாக, வடக்கில் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் மீது கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறின. இவற்றில் பல தாக்குதல்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்ற அறிக்கை 1978 ஏப்ரல் 25 ஆம் திகதி வெளியானதன் பின்னர், ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதனையொத்த ஆயுதக் குழுக்களையும் தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் 1978 மே மாதம் நிறைவேற்றியது. அத்துடன், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 38 பேரை பொலிஸாரால் தேடப்படுவோர் பட்டியலில் வெளியிட்டிருந்தது.  

இதன் பின்னர், பொலிஸாரும் இராணுவத்தினரும் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டபோதும், இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளைக் குறைக்க முடியவில்லை. 1978 செப்டெம்பர் ஏழாம் திகதி, இரத்மலானையில் உள்ள கொழும்பு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் தேசிய விமானசேவையான ‘எயார் சிலோன்’ க்குச் சொந்தமான அவ்ரோ விமானமொன்று விடுதலைப்புலிகளால் வெடிக்கவைக்கப்பட்டது.  

இந்தத் தாக்குதல் அரசாங்கத்தைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியதுடன், ஆயுதக் குழுக்களுக்கு எதிராக, உடனடி அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாகப் பொலிஸ் மற்றும் இராணுவக் கெடுபிடிகள் நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது.  

இதன் தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யும் சட்டத்துக்கு மாற்றாக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 1979 ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.  

எதேச்சாதிகாரக் கைது, தடுத்து வைத்தலுக்கு எதிரான சுதந்திரம்  

பல இளைஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், அரசியல் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட்டப் பலரும் சந்தேகம் என்ற ஒரே காரண நிமித்தம், வேறு எந்த அடிப்படைச் சாட்சிகளினது தேவையின்றிக் கைது செய்யப்படவும் காலஎல்லையின்றித் தடுத்து வைக்கப்படவும் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் ஏறத்தாழ மூன்று தசாப்தகாலத்துக்கும் மேலாக  எதேச்சாதிகாரத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியது.  

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் 13 ஆவது சரத்தானது எதேச்சாதிகாரமான கைது, தடுத்துவைத்தல் மற்றும் தண்டனை என்பவற்றுக்கு எதிரான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. சுருங்கக் கூறின், ஒருவர் சட்டப்படியன்றி வேறு எக்காரணம் நிமித்தமும் கைது செய்யப்படவோ, தடுத்துவைக்கப்படவோ, தண்டனைக்குள்ளாக்கப்படவோ முடியாது. அப்படிச் செய்வதானது அந்நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.  

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் மனித உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில் இந்தச் சரத்து உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அதே அத்தியாயத்தின் 15(7) சரத்தானது தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம் மற்றும் ஒழுக்கம், மற்றவர்களது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல், ஒரு ஜனநாயக சமூகத்தில் பொதுநலன் நோக்கிலான, நியாயமான தேவைப்பாடுகள் ஆகிய காரணங்களுக்காக 13 ஆம் சரத்து வழங்கிய அடிப்படை உரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்கிறது. இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நோக்க வேண்டும்.  

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் உருவாக்கத்தின் காரணகாரியத்தை விளக்கும் முன்னுரையில், ‘இலங்கையில் அரசாங்கத்தை மாற்றுவதற்கு முனையும் சில தரப்புகள் அல்லது தனிநபர் குழுக்கள் அல்லது அமைப்புகள் வன்முறையை அல்லது குற்றமிழைத்தலை, அதற்கான வழிமுறையாகக் கைக்கொள்கின்றன’ என்று குறிப்பிடுவதுடன், குறித்த மனக்குறைகள் அரசியலமைப்பு ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. ஆகவே, அரசியல் காரணங்களுக்காக வன்முறை வழியைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வருவதாக வியாக்கியானம் தந்தது.  

பல பயங்கரமான எதேச்சாதிகார பலத்தை ஆளும் அரசாங்கத்துக்கு வழங்கிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் முக்கிய கூறுகள் சிலவற்றைப் பற்றி ஆராய்தல் அவசியமாகிறது.  

நிர்வாகத்துறையின் கையில் எதேச்சாதிகாரம்  

இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது, நபரொருவரைக் கைது செய்யும் நடைமுறை, கைது செய்த பின் நீதிமன்றில் ஆஜர் செய்யவேண்டிய நடைமுறை என்பன பற்றிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.  

இதன்படி கைதுசெய்யப்படும் நபரொருவரை 24 மணிநேரத்துக்குள் பொலிஸார் நீதவான் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். மேலும், விசாரணை செய்யக் காலம் வேண்டுமெனில் நீதிவான் உத்தரவுக்கமைய மேலும் 24 மணிநேரம் தடுத்து வைக்கப்படலாம்.  

ஆகவே, கைது செய்யப்படும் நபரொருவர் எக்காரணம் கொண்டும் எதுவித குற்றச்சாட்டக்களுமின்றி 48 மணிநேரத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட முடியாது. இதற்கு விலக்காகக் குறித்த நபரொருவர் குற்றமொன்றோடு சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்க அல்லது நம்ப அமைச்சருக்கு உரிய காரணங்கள் உண்டெனின், அந்நபரைக் கைது செய்யவும் அமைச்சரின் உத்தரவுப்படி ஒரு முறைக்கு அதிகபட்சம் 3 மாதம் என்ற அடிப்படையில் அதிக பட்சம் 18 மாதங்கள் வரை தொடர்ந்து தடுத்து வைக்க முடியும் என்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஒன்பதாவது சரத்து அமைச்சருக்கு (அதாவது நிர்வாகத்துறைக்கு) அதிகாரத்தை வழங்கியது.  

அதுமட்டுமல்ல, அந்நபரை எங்கு, எந்தச் சூழலின் கீழ் தடுத்து வைப்பது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அமைச்சருக்கு அதே சரத்து வழங்கியது. அத்தோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 10 ஆவது சரத்தானது, ஒன்பதாவது சரத்தின் கீழமைந்த அமைச்சரொருவரின் உத்தரவானது, எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்விக்குட்படுத்தப்பட முடியாது என்று குறிப்பிட்டது. ஆகவே, நீதித் துறையின் தலையீடின்றி நபரொருவரை அமைச்சரின் எண்ணத்தின்படி கைது செய்யவும், அதிக பட்சம் 18 மாதங்கள் வரை அமைச்சர் எண்ணும் இடமொன்றில் தடுத்து வைக்கவும் கூடிய பயங்கரமானதொரு எதேச்சாதிகாரத்தை நிர்வாகத்துறைக்கு, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வழங்கியது.  

இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் இணைந்தபின் நிலைமை இன்னும் மோசமடைந்தது. அவசர காலச் சட்டத்தின் கீழ், அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போது, நபரொருவரைக் கைது செய்து எல்லையின்றிய காலம் தடுத்து வைக்கும் அதிகாரமானது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டது.  

 அத்தோடு அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் கைது செய்யப்படும் நபரொருவரைப் பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்கும் இடமொன்றில், அவரது வழிகாட்டலின் படி தடுத்து வைக்க முடியும் என்ற ஏற்பாடும் காணப்பட்டது. ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசர காலச்சட்டமும் தனிநபர்களைக் கைது செய்து, தடுத்து வைக்கும் அதிகாரத்தை நிர்வாகத் துறைக்கு வழங்கியது.  

 தடுத்து வைக்கும் இடங்களையும் தீர்மானிக்கும் பலம் அமைச்சருக்கு இருந்தமையினால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலரும், தடுப்புக் காவல் சிறைகளில் அல்லாமல், இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.  

பொலிஸாரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம்   

இலங்கையின் சான்றுக் கட்டளைச் சட்டமானது பிரித்தானியரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முக்கிய சட்டங்களுள் குறிப்பிடத்தக்கதாகும். இன்றுவரை, சில புதிய சேர்க்கைகளுடனும் மாற்றங்களுடனும் ஆனால், அடிப்படைகளில் மாற்றமின்றிச் சான்றுக் கட்டளைச் சட்டம் நடைமுறையிலிருக்கிறது.  

இந்தச் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25(1) சரத்தானது நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை அந்நபருக்கு எதிராகப் பயன்படுத்த முடியாது என்றும், 26 ஆம் சரத்தானது, பொலிஸாரின் காவலில் உள்ள நபரொருவர், நீதிவானின் முன்னிலையில் அன்றி, பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலமொன்றை அந்நபருக்கெதிராகப் பயன்படுத்த முடியாது என்றும் வழங்குகிறது. இதன் சுருக்கம், நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி அவருக்கெதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது.  

ஒப்புதல் வாக்குமூலமானது, நீதிவானின் முன்பு வழங்கப்படின் மட்டுமே அதனை வழங்கிய நபருக்கெதிராகப் பயன்படுத்த முடியும். பொலிஸார் முறையற்ற வழிகளில் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; அதனைப் பயன்படுத்தி அந்த ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவரைக் குற்றவாளியாகக் காண்பது பாதுகாப்பானதல்ல என்பது சான்றுக் கட்டளைச் சட்டத்தின், இந்த ஏற்பாடுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.  

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் இந்த ஏற்பாடுகளுக்கும் விதிவிலக்கினை ஏற்படுத்தியது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 17 ஆம் சரத்து, சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 25, 26 மற்றும் 30 ஆவது சரத்துக்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பற்றிய விடயங்களில் செல்லுபடியாகாது என்று வழங்கியதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 16 ஆம் சரத்தானது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடைய ஒரு பொலிஸ் அதிகாரியிடம் நபரொருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகும் என்ற வகையிலான ஏற்பாட்டை வழங்கியது.  

இதையொத்த ஏற்பாடொன்று, அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழும் காணப்பட்டது. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட ஒழுங்குகளின் கீழ் நபரொருவரை அவர் உதவிப் பொலிஸ் அத்யட்சகர் அல்லது அதற்கு மேற்பட்ட தரமுடைய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளியாகக் காணப்பட முடியும்.  

மேலும், குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது ஏதேனும் தூண்டுதல், அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டதெனில், பொதுவாகச் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் 24 ஆம் சரத்தின் கீழ் அத்தகைய ரீதியில் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின் படி பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பை குறித்த நபரிடம் சாற்றுகிறது.  

ஆகவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த ஒப்புதல் வாக்குமூலமானது தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியின் படி பெறப்படவில்லை என நிரூபிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கில்லை. மாறாக, அப்படிப் பெறப்பட்டதென்று குறித்த நபர் தெரிவிப்பாராயின், அதனை நிரூபிக்கும் பொறுப்பு அவர் வசம் சாற்றப்பட்டது.  

‘ட்ரேகோனியன்’ சட்டம்  

 மிகக் கொடுமையான சட்டங்களைச் சுட்ட ஆங்கிலத்தின் ‘ட்ரேகோனியன் லோ’ (Draconian Law   ) என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுவது வழமை. கிரேக்கத்தில் வாழ்ந்த ‘ட்ரேகோ’ என்ற நபர், எதென்ஸ் நகரின் சட்டங்களைக் கோவைப்படுத்தப் பணிக்கப்பட்டார். வழக்கத்தில் மட்டுமிருந்த பழைய சட்டங்களையெல்லாம் அவர் கோவைப்படுத்தியதில், மிகச் சிறு குற்றங்களுக்கெல்லாம் கடும் தண்டனையான மரணதண்டனை விதிக்கப்பட்டது. உதாரணமாக, ஓர் அப்பிளைத் திருடியவனுக்கும் மரண தண்டனை என்றவாறு அமைந்தது. அவர் கோவைப்படுத்திய சட்டங்கள் மிகக் கடுமையாக, கொடுமையாக இருந்ததால், அதனை ‘இரத்தத்தில் எழுதிய சட்டங்கள்’ என்று குறிப்பிடுவதுமுண்டு.  

ஆகவே, கொடுமையான சட்டங்களை ‘ட்ரேகோனியன்’ சட்டங்கள் என விளிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது சர்வ நிச்சயமாக ‘ட்ரேகோனியன்’ சட்டம் தான். அதனால்தான், கால தசாப்தங்களாகவே சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சிவில் ஆர்வலர்களும் புத்திசீவிகளும் இந்தக் கொடுமையான, மனித உரிமைகளை மீறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது, இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், எந்நபரையும் நீதிமன்றின் தலையீடின்றியே பலகாலம் தடுத்து வைக்கக்கூடிய பெரும்பலத்தைத் தரும் இச்சட்டத்தை, இல்லாதொழிக்கும் விருப்பம் இதுவரை எந்த அரசாங்கத்துக்கும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.  

மரண தண்டனை கிடையாது  

இத்தனை கொடுமைகள் நிறைந்த இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் உண்டு. அதாவது, பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரொருவருக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மரணதண்டனைதான் வழங்கப்பட வேண்டுமெனினும் அவருக்கு ஆயுள் தண்டனையே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூன்றாம் சரத்து குறிப்பிடுகிறது. அதாவது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எத்தகைய பாரிய குற்றத்துக்கும் மரண தண்டனை கிடையாது; உச்சபட்ச தண்டனை ஆயுள் தண்டனையாகும். இதன் கீழ் தண்டனை பெறும் யாரும் அரசியல் ரீதியாகத் ‘தியாகி’களாகக் காணப்பட்டு விடக்கூடாது என்பதே இந்த ஏற்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிறைவேற்றுக் குழுவின் தவிசாளராக இருந்த சூரிய விக்ரமசிங்ஹ தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்க அதிககாலம் தேவைப்படவில்லை.  

(அடுத்த வாரம் தொடரும்)      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .