2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாவீரர் வார அரசியல்

Thipaan   / 2016 நவம்பர் 22 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெய்வீகன்

தமிழர் தாயகமெங்கும் ஆண்டுதோறும் மிகமுக்கிய வாரமாக அனுஷ்டிக்கப்படும் நவம்பர் 21 முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியை இப்போது மட்டுமல்ல எப்போதும் மாவீரர்களின் வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  

அதனை எதிர்த்து, மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்கப்போவதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார். 

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டங்களில், முக்கியமாக இந்திய இராணுவக் காலகட்டங்களில்தான் ‘மாவீரர் வாரம்’ என்ற இறந்த வீரர்களை நினைவு கூரும் முறையை விடுதலைப்புலிகள் அறிமுகம் செய்தார்கள். இறந்தவர்களை நினைவு கூருவது, அவர்களின் தியாகத்தை மதிப்பது, வரலாற்றில் அவர்களது மாண்பினைப் போற்றுவது போன்றவற்றுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதற்கு அப்பால், இந்த மாவீரர் வாரம் தொடர்பில் ஓர் அரசியல் காரணமும் இருந்தது. 

அதாவது, ஒரு கெரில்லா அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்ட இயக்கம், எதிரியுடனான சமரில் தொடர்ச்சியாக இழப்புகளைச் சந்தித்துக்கொண்டிருந்தால், அங்கு மரணங்கள் மலிந்துகொண்டேயிருந்தால், இயல்பாகவே ஒரு சலிப்புத் தோன்றிவிடும். போராட்டத்துக்கான மக்களின் பங்கு, பணி, ஈர்ப்பு என்று அனைத்தும் அருகிவிடும். 

ஆகவே, இவற்றிலிருந்து போராட்டத்தினை எழுச்சிமிக்கதாக மாற்றி, மரணத்தையும் நேசித்து, அந்த நிரந்தர இழப்புகள் போராட்டத்தின் வழமையே என்ற யதார்த்தத்தினை பொதுக்கோட்பாடாக மக்களுக்கு உணர்த்தி, அதுவே காலத்தின் கடமை என்பதைத் தோற்றுவிப்பதற்கும் இந்த மாவீரர் வாரம் விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது.  

இலங்கையில் விடுதலைப் போராட்டம் எனப்படுவது உடனடியாக முடிந்து போவதல்ல; தொடர்ச்சியாகப் பயணிக்கப்போகும் ஒன்று என்பதைத் தெரிந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தலைமை, எதிர்காலத்தின் இழப்புகளையும் அந்த இழப்புக்களின் வலிகளையும் அறிந்து, அதற்குரிய உயரிய பெறுமதியை மக்களுக்கு விளங்கச் செய்யவேண்டும் என்பதற்காகவும் இந்த மாவீரர் வாரத்தைப் பிரகடனப்படுத்தியது.  

இதன் வழியாக விடுதலைப் போராட்டத்தின் பாதையில், பிற்காலத்தில் மரணம் என்பது யாசிக்கப்பட்டது. மரணத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் என்பது மரபாகிறது. கரும்புலிகள் என்ற கோட்பாடு, விடுதலைப்புலிகள் மத்தியில் மிகப்பெரிய ஆயுதமாக அவதரித்தது.  அதற்காத் தங்கள் உயிர்களைக் கொடுத்தல் என்பது பெருமையாகக் கருதப்பட்டது. அந்தச் சாவுகளும் சாவுகளை நோக்கிய விருப்பங்களும் ஒட்டுமொத்த உலகத்தாலேயே ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. சமாந்தரமாக அந்த ஆயுதங்களினால் உலகமே அச்சமடைகிறது. அதன் விளைவுகள் பல்வேறு அதிர்வுகளையும் ஏற்படுத்துகிறது. அதனை இங்கு விட்டுவிடுவோம். 

மொத்தத்தில், விடுதலைப்புலிகளின் இந்தத் தீவிரமான தியாகமும் சாவினை விரும்பி ஏற்கும் அர்ப்பணிப்பும் உலகின் மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்றாக விழிக்கப்படுகிறது. 

ஆனால், அப்பேற்பட்ட தியாகம் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதே மக்களின் ஒரு தரப்பினரால் அரசியலாகவும் வியாபாரமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. அதுவே, இன்றுவரை பல்வேறு வகையிலும் முன்னாள் போராளிகளின் மீதான சாபமாகவும் வந்து விழுந்து விட்டிருக்கிறது. பூமிக்கு மேலுள்ளவர்களுக்கு ஒரு நீதியும் பூமிக்குக் கீழுள்ளவர்களுக்கு இன்னொரு நீதியுமாகச் சொந்த மக்களே வரிந்துகட்டி நின்று, அந்தத் தியாகத்தின் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் இங்கு வழமையாகி விடுகிறது. 

உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதென்பது, உணர்வுநிலை சார்ந்த விடயம் என்பதிலும் பார்க்க, அரசியல் சார்ந்த விடயமாகப் புனையப்படுகிறது. தாயகத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த மண்ணிலும்கூட இன்றுவரை இந்த நிலைதான் தொடர்கிறது. எல்லா மட்டத்திலும் அல்ல, என்று கூறினாலும்கூடக் கணிசமான இடங்களில் இந்த நிலைதான் யதார்த்தமாகப் பிரசவிக்கப்படுகிறது. மாவீர்களையும் அவர்களை நினைவு கூரும் வாரத்தையும் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான கருவிகளாகவும் பலத்தை நிரூபிக்கும் கைத்தடிகளாகவும் பயன்படுத்துவதற்கு துணிந்துவிடுகிறார்கள். 

தமிழர்களின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, மறுபுறத்தில் சிங்களத் தரப்பினரை எடுத்து நோக்கினால்; 

அங்கு, ஆட்சி இயந்திரமானது தமிழர்களின் போராட்டத்தை முற்று முழுதாக ஒரு பயங்கரவாத போராட்டமாக உருவகித்ததில் எவ்வாறு வெற்றி கண்டதோ, அதுபோல அந்தப் போராட்டத்தின் நாயகர்களும் பயங்கரவாதிகளே என்று சிங்கள மக்களை நம்ப வைத்ததில் பாரிய வெற்றி கண்டுள்ளது.  

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் சரி, அதற்குப் பின்னரும் சரி, சிங்கள ஆட்சி இயந்திரமானது இந்த விடயத்தில் முழு மூச்சாகத் தனது பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தது. பன்னெடுங்காலமாகத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்த சிங்கள தேசத்தின் இனவாத பிரசாரத்தின் உச்ச வெளிப்பாட்டினை, 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த போரின் பின்னர், கொழுத்தப்பட்ட வெடிச் சத்தங்களிலும் பாற்சோறு பரிமாறியதிலும் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சாதாரண போர் வெற்றி என்பதற்கு அப்பால், ஒரே நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனத்தை வெற்றிகொண்டதாகவும் சொந்த நாட்டுக்குள் உறுமிக்கொண்டிருந்த பயங்கரவாதிகளைத் தமது இராணுவம் வென்றுவிட்டதாகவும் சிங்களத்தரப்பு மகிழ்ந்தது. அந்த வெற்றியோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக அடித்துக்கூறியது. அதனைத்தான் சிங்கள மக்களும் நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் நம்ப விரும்பினார்கள்.  

இவ்வாறான ஒரு பின்னணியில் தமிழர் தரப்பு முன்னெடுத்த போராட்டத்தின் பெறுமதியையோ அல்லது பேருண்மையையோ உணர்ந்து கொள்வதற்கு சிங்கள மக்கள் கிஞ்சித்தும் விரும்பவில்லை. தமிழர்களின் போராட்டமானது சிங்கள மக்களுக்கு எதிரானது என்றும் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறித்தெடுக்கும் படலம் என்றும் சிங்கள அரசியல் தரப்புக்கள் கூறியதை அப்படியே நம்பினார்கள். 

இந்த நிலை, இன்றுவரை தொடர்ந்து வருவதைத்தான் சிங்கள மென்போக்காளர்களே
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  

இந்த மாதிரியான ஒரு மனநிலையுடன் - வெற்றிவாத மனோநிலை என்று சொல்லப்படக்கூடிய சிந்தனை முறையுடன், தமிழர்களுடன் நல்லிணக்கத்தைத் தோற்றுவிப்பது எவ்வாறு சாத்தியம் என்று கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினர் கேள்விகளைத் தொடுத்துக் களைத்துப் போய்விட்டார்கள். ஆனால், ‘இவையெல்லாம் சகஜம்’ என்ற தோரணையுடன் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தனது கருமங்களை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றது. 

அப்படியானால், தன்னை ஒருபோதும் மாற்றுவதற்குத் தயாரில்லாத கல்லணை போன்ற தரப்பின் மீது, இன்னமும் காயங்கள் மாறாத தமிழர் தரப்பு எவ்வாறு சாய்ந்துகொள்வது? 

போரில் இறந்து போனவர்களை நினைவு கூருதல் மற்றும் அந்தப் போருக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த ஓர் இனத்தின் வீரர்களுக்கு விளக்கேற்றுவதென்பது அவர்கள் நம்பியிருந்த ஒரு கொள்கைக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகப் பண்பு; மிகவும் அடிப்படையானதும்கூட.  

ஆனால், அதனை நடத்தவிட மாட்டோம்; அந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் இன்னொரு போருக்கு வழிவகுத்துவிடும். அல்லது பயங்கரவாத்துக்கு அங்கிகாரம் வழங்குவதாக அமைந்துவிடும் என்று இன்னமும் அச்சமடையும் ஓர் அரசியல் தரப்பு, எவ்வாறு தமிழர் தரப்பின் போராட்ட நியாயங்களையும் அதற்கான தீர்வுகளையும் உணர்ந்து கொள்ளப்போகிறது?  

சொல்லப்போனால், ஆளும் தரப்பும் இன்னமும்கூட, தட்டையான நிராகரிப்பு மனநிலையுடன்தான் தமிழர்களது நியாயமான உணர்வுநிலை சார்ந்த விடயங்களை அணுகுவதற்கு விரும்புகிறது. 

நிராகரிப்பு, என்பதற்கு அப்பால் இந்த வலியை இரட்டிப்பு செய்வது போல, படையினரை நினைவு கூரும் நிகழ்வுகளைத் தேசிய நிகழ்வுகளாக ஏற்பாடு செய்து, அதில் தமிழ் மக்களே வந்து மலர் அஞ்சலி செய்து, பயங்கரவாதத்தினை ஒழித்துக் கட்டிய தமக்கு நன்றி கூறவேண்டும் என்பது வரை எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறத்தில் தமிழர் தரப்பில் போரிட்டு இ‌றந்தவர்களின், நினைவிடங்களையும் துயிலும் இல்லங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கி விடப்பட்டிருக்கிறது.   

சம பிரஜைகளாக மதிக்கப் போவதாகவும் அதற்குத் தம்மிடம் தீர்வு இருப்பதாகக் கூறும் அரசாங்கம், உண்மையாகவே இதயசுத்தியுடன் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப் போவதாக இருந்தால் இவ்வளவு தூரம் கொடூரமான வழிமுறைகளை நிச்சயம் பின்பற்றாது. ஒப்புக்கு நியாயம் கதைக்கும் அரசாங்கம்கூட இவ்வளவு தூரம் ஓர் இனத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்கு விரும்பாது. இது மிகமிகக் குரூரமான ஓர் அடக்குமுறை.  

சரி! இந்த மாதிரியான ஒரு நிலையிலிருந்து அரசாங்கத் தரப்பு மாறவில்லை அல்லது மாறப்போவதில்லை என்று தெரிந்தால், அதற்கான தமிழர் தரப்பு அரசியல்வாதிகளின் பதில் என்னவாக இருக்கப்போகிறது?

இறந்தவர்களை நினைவு கூருவதற்கு,  பன்னெடுங் காலமாகத் தமிழர் தரப்பில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறையைத் தடை செய்வதற்கும் ஆட்சியாளர் விடுக்கும் கட்டளைகளுக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் வைத்திருக்கும் பதில் என்ன?  

இதற்கும் தமிழர் தரப்பு பணிந்து போகவேண்டும் அல்லது மௌனமாக அழுதுகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?

நல்லிணக்கம், நிலைமாறு காலகட்டம், தீர்வின் முக்கிய திருப்பம் என்று அரசியல் மட்டத்தில் பேசப்படும் எல்லா விதமாக ‘புனித சொற்களும்’ நாளை செயலுருப்பெற வேண்டும் என்பதற்காக, தமிழ் மக்கள் எவ்வளவு காலம் தங்கள் அழுகைகளை ஒத்திவைக்க வேண்டும்?  

மாவீரர்களை நினைவு கூருவது பற்றிப் பேசவேண்டும் என்றால், மாவீரர் குடும்பங்களை பற்றிப்பேச வேண்டும். அந்த மாவீரர் குடும்பங்களை பற்றி, இவ்வளவு காலமும் என்ன பேசியிருக்கிறோம்? எவ்வளவுதூரம் அவர்களின் வலிகளுக்கு மருந்திட்டிருக்கிறோம்? என்றும் சுய மதிப்பீடு செய்தவர்கள்தான் அவர்களைப்பற்றி பேசுவதற்கான குறைந்த பட்ச தகுதியை பெற்றுக்கொள்கிறார்கள்.

ஆகவே, இறந்த மக்களையும் மாவீரர்களையும் நினைவு கூருதல் என்பது வருடா வரும் சிவாஜிலிங்கம் போன்றவர்களின் அறிக்கைகளுக்குள்ளும் ஏனைய தரப்பினரின் அரசியலுக்குள்ளும் வியாபாரங்களுக்குள்ளும் மட்டும்தான் அகப்பட்டிருக்கப் போகிறதா?

இதற்கான மீட்சி என்ன?

தான் தேர்தலில் வெற்றிபெற்றால் ‘மாவீரர் நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிப்பேன்’ என்று சூளுரைத்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனாவது இதற்குப் பதில் தருவரா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X