Shanmugan Murugavel / 2016 நவம்பர் 24 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு நிலைப் போட்டிகளில், நேற்றுப் புதன்கிழமை (23) இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றி பெற்ற பார்சிலோனா, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது.
பார்சிலோனா, 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்கொட்லாந்து அணியான செல்டிக்கைத் தோற்கடித்தே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லியனல் மெஸ்ஸி பெற்றார்.
இந்நிலையில், ஜேர்மனியின் புண்டெலிஸ்கா தொடர் சம்பியன்களான பெயார்ண் மியூனிச், ரஷ்ய அணியான எஃப்.சி றொஸ்டோவ்விடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. எவ்வாறெனினும் தனது குழுவில் இரண்டாமிடம் பெற்றுள்ள மியூனிச், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஏனைய போட்டிகளில், அத்லெட்டிகோ மட்ரிட், நெதர்லாந்து அணியான பி.எஸ்.வி ஐந்தோவனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, தனது குழுவில் முதலிடம் பெற்று, இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. அத்லெட்டிகோ சார்பாக, கெவின் கமேய்ரோ, அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
மன்செஸ்டர் சிற்றி, ஜேர்மனிய அணியான பொரிசியா மொச்சென்கிளட்பா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதன் மூலம், இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்கு சிற்றி தகுதி பெற்றது. சிற்றி சார்பாக பெறப்பட்ட கோலை டேவிட் சில்வா பெற்றார்.
ஆர்சனல், பரிஸா ஜேர்மா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த இரண்டு அணிகளும் இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றன. பரிஸா ஜேர்மா சார்பாக எடின்சன் கவானியும் ஆர்சனல் சார்பாக ஒலிவர் ஜிரோட்டும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மற்றைய இரண்டு கோல்களும் “ஓவ்ண் கோல்” மூலம் பெறப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .