2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'நாமல் எம்.பி.பொய்யுரைக்க கூடாது'

Kogilavani   / 2016 டிசெம்பர் 09 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமது ஆட்சியில் தோட்ட மக்களுக்கு எதையும் செய்யாதவர்கள் இன்று, அந்த மக்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறன்றார்கள்.  தோட்ட மக்களுக்கு 25 ஆயிரம் வீடுகளும், ஏழு பேர்ச் காணிகளும் இதுவரை வழங்கப்படவில்லையென நாமல் ராஜபக்ஷ எம்.பி. சபையில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வரக்கூடிய ஒருவர் இவ்வாறு பொய் கூறக்கூடாது' என புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்  தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர் மக்களுக்கு 7 பேர்ச்  காணி, காணி உறுதிப்பத்திரத்துடன் வழங்கப்படவுள்ள அதேநேரம், 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முன்மொழிவில், முதற்கட்டமாக தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியில் 10 ஆயிரம் வீடுகளை 2017 ஆம் ஆண்டு நிர்மாணிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று (9) நடைபெற்ற புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லையென மஹிந்தானந்த எம்.பி.குற்றஞ்சாட்டினார். நாம் மக்களோடு ஒன்றாக இருந்து அவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அவற்றுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவர்கள் வாக்குகளை எதிர்பார்த்து அரசியல் இலாப நோக்கிலேயே இவ்வாறு பேசி வருகின்றனர். ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் தோட்ட மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணவில்லை.

தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். எமது மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. மக்களுக்கு காணி உறுதி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கத்தில், மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியுடன் தனி வீடு திட்டத்தை ஆரம்பித்து இன்று நடைமுறைபடுத்தி வருகின்றோம். இது தமிழ் முற்போக்கு கூட்டணியினாலேயே சாத்தியமானது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .