2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை வரலாற்றின் மிகப்பெரும் இனரீதியான புத்தக அழிப்பு

Administrator   / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -  72)

- என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 

 

தியாகராஜா சுடப்பட்டார்   
1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விமர்சனங்களும் விசனங்களும் இருந்தாலுங்கூட, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.   

 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், குமார் பொன்னம்பலம் கேட்டிருந்த தன்னுடைய தந்தையாரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தொகுதியான யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமை மறுத்துவிட்டது. 

இதன் காரணத்தினால், 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். அந்தத் தேர்தலின் பின் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி, 1978 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸை மீள ஆரம்பித்தார். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிட்டது.   

மறுபுறத்தில், எப்படியாவது யாழ். மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையேனும் வென்றுவிட வேண்டுமெனக் கங்கணங்கட்டிக்கொண்டு, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியது.   

1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அன்றைய ‘தளபதி’ அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்தவர் அ.தியாகராஜா.   

பின்னர், சிறிமாவோ தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததுடன், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் நலன்களைப் பாதித்த 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்புக்கும் ஆதரவாக வாக்களித்திருந்தார்.   

இந்தத் தியாகராஜாவைத் தான், 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முக்கிய வேட்பாளராக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தமிழரொருவரும் களமிறங்கக் கூடாது என்று தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்திருந்தன.   

 இந்த நிலையில்தான், அ.தியாகராஜா, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னிறுத்தப்பட்டார். 1981 ஜூன் நான்காம் திகதி மாவட்ட சபைத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், 1981 மே 24 அன்று அ.தியாகராஜா, துவிச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.   

உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தக் கொலைக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே (புளோட்) பொறுப்பு என டீ.பீ.எஸ்.ஜெயராஜ் உள்ளிட்ட சிலர் தங்களுடைய கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்கள்.  

 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அல்லது புளோட் அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான முரண்பாட்டுக்குப்பின், அதிலிருந்து பிரிந்து வெளியேறிய உமா மகேஸ்வரனால், 1980 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும்.   

யாழ்ப்பாணம் விரைந்த அமைச்சர்கள்   

அ.தியாகராஜாவின் கொலையை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி தனக்கெதிரான சவாலாகவே பார்த்துடன், இதன் பின்னணியில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இருப்பதாக எண்ணியது.

ஆகவே, எவ்வகையிலேனும் இந்தத் தேர்தலில் தமது முத்திரை பதிக்கப்பட வேண்டும் எனக்கருதிய ஜே.ஆர், மிகப் பெரும் இனத்துவேசியாகவும் பேரினவாதத்தின் முரசொலியாகவும் காணப்பட்ட அமைச்சர் சிறில் மத்யூவையும் அவரது தளபதி என்றறியப்பட்ட அமைச்சர் காமினி திசாநாயக்கவையும் அவர்கள் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு முக்கிய குழுவையும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார்.

அத்தோடு, ஏறத்தாழ 500 பொலிஸாரைக் கொண்ட ஒரு பெரும் பொலிஸ் படையும் தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.   

 ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அதிகளவில் பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டமையானது ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப்போவதையே உணர்த்துவதாக இருந்தது. அமைச்சர் சிறில் மத்யூ தலைமையிலான மேல்மட்டக் குழு, 1981 மே 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.   
வன்முறை வெடித்தது   

மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில், தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1981 மே 31 ஆம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று யாழ். நாச்சிமார் அம்மன் கோவிலடியில், அன்றைய யாழ்ப்பாண நகரபிதாவான ராஜா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது. ராஜா விஸ்வநாதன், இன்றைய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமரான வி.ருத்ரகுமாரனின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்கள், அடையாளம் தெரியாத இளைஞர் சிலரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்கள். அதில், இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்கள்.   

இந்தச் சம்பவம் நடந்த பின்னர் அவ்விடத்துக்கு விரைந்த ஆயுதமேந்திய பொலிஸ் படையொன்று அவ்விடத்தில் தமது வெறியாட்டத்தை ஆடத் தொடங்கியது. அருகிலிருந்த கோவிலுக்கு தீவைத்த அவர்கள், தொடர்ந்து அருகிலிருந்த வீடுகளையும் வீதியிலிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கத் தொடங்கினர்.   

இங்கு தொடங்கிய பொலிஸ் வன்முறைகள் யாழ். நகரின் மத்தியை நோக்கிப் பரவத் தொடங்கியது. யாழ்ப்பாணத்தின் சந்தைக் கடைத்தொகுதியும் புதிய சந்தைக் கட்டடமும் வர்த்தக, வணிக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர் மண்ணில் மீண்டும் ஒரு திட்டமிட்ட கலவரத்தை பொலிஸார் நடத்திக் கொண்டிருந்தனர்.   

இந்தச் சம்பவங்கள் நடைபெற்ற போது அமைச்சர் சிறில் மத்யூ மற்றும் அமைச்சர் காமினி திசாநாயக்க தலைமையிலான மேல்மட்டக் குழு யாழ்ப்பாணத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவங்கள் நடந்தவேளையில் அவர்கள் யாழ்ப்பாண விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் மற்றும் இயக்கும் கரங்களாக செயற்பட்டவர்கள் அமைச்சர் சிறில் மத்யூ மற்றும் அமைச்சர் காமினி திசாநாயக்க ஆகியோரே என்ற குற்றச்சாட்டை பலரும் பகிரங்கமாக முன்வைக்கிறார்கள்.   

தொடர்ந்து அன்று நள்ளிரவில் யாழ்ப்பாணத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தருமான வி.யோகேஸ்வரனின் வீட்டைச் சூழ்ந்து கொண்ட பொலிஸ் குழுவொன்று, அந்தவீட்டுக்குத் தீவைத்தது. தீவைக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் அவரது குடும்பமும் அந்த வீட்டிலேயே இருந்தனர். அவரும் குடும்பமும் விரைந்து வெளியேறியதால் மயிரிழையில் உயிர்தப்பினர்.   
இதேநேரத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய முக்கிய பத்திரிகையான ‘ஈழநாடு’ பத்திரிகை காரியாலயமும் அச்சகமும் அங்கு நுழைந்த பொலிஸ் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டதுடன், முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டது. ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியரான கோபாலரட்ணம், கடுமையாகத் தாக்கப்பட்டு காயமைடைந்தார். நான்கு பொதுமகன்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்டு கொல்லப்பட்டார்கள்.   

இந்நிலையில் 31 ஆம் திகதி இரவோடிரவாகத் தெற்கிலிருந்து பெருமளவு காடையர்கள் யாழ். நகரில் கொண்டு வந்து இறக்கப்பட்டதாக இந்தக் கறுப்பு வரலாற்றைப் பதிவு செய்த பலரும் குறிப்பிடுகிறார்கள்.   

 இந்தக் காடையர் கூட்டம் யாழ்ப்பாணத்திலிருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி காரியாலயத்துக்குள் நுழைந்து, அதனைத் தீக்கிரையாக்கியதுடன், நகரிலிருந்த வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து கொள்ளைகளிலும் ஈடுபட்டது. அத்தோடு, யாழ். நகரை ஆங்காங்கே அலங்கரித்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகளும் அடித்துடைக்கப்பட்டன.   

புத்தக அழிப்பு   

Libricide அல்லது Biblioclasm என்ற வார்த்தைகள் புத்தக அழிப்பைக் குறிக்கப்பயன்படுகின்றன. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் அடையாளத்தை, வரலாற்றை அழித்துவிடுங்கள்; அந்த இனம் தானாக அழிந்துவிடும் என்பது மிகப் பிரபலமாக அறியப்பட்ட ஒரு கூற்றாகும்.   

 உலக வரலாற்றில் ஓர் இனத்தை அல்லது சாம்ராஜ்ஜியத்தை அழிக்கும் போர்களின் போது, அந்த இனத்தின், அல்லது அந்த சாம்ராஜ்ஜியத்தின் நூல்களையும் நூலகத்தையும் அழித்த செயற்பாட்டைப் பல சந்தர்ப்பங்களிலும் நாம் காணலாம்.

ஓர் இனத்தின் பலமாக, அறிவுச்செல்வம் இருக்கும் பொழுது, ஓர் இனத்தின் அடையாளமாக நூல்களும் நூலகமும் இருக்கும் போது, அவற்றை அழிப்பதனூடாக அந்த இனத்தை அழிக்கும் கொடூர வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலமளவுக்குப் பழைமையானது.   

 கி.மு 213 இல் சீனாவின் சின் பரம்பரையின் முதலாவது சக்கரவர்த்தி என்று அறியப்படும் சின் ஷூ ஹூவாங், கவிதை, வரலாறு, தத்துவம் உள்ளிட்ட புத்தகங்களைக் கையகப்படுத்தி எரித்திருந்தார்.   

 கி.மு 300 இல் ஸ்தாபிக்கப்பட்ட அன்றைய உலகின் மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இது தீக்கிரையாக்கப்பட்ட காலமும் சந்தர்ப்பமும் மிகத் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், இது ஜூலியஸ் சீஸரினால் அல்லது ஓரீலியனினால் அல்லது அலெக்ஸாண்ட்ரியாவின் பாப்பரசர் தியோஃபீலியஸினால் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பவைதான் ஆய்வாளர்களால் அதிகமாக முன்னிறுத்தப்படுகிறது.   

ஞானத்தின் இல்லம் என்று அறியப்பட்ட பாக்தாத் நூலகம் கி.பி 1258 இல் மொங்கோலியப் படையெடுப்பின்போது, மொங்கோலியப் படைகளால் அழிக்கப்பட்டது. மத்திய கிழக்கின் அறிவுச் செல்வத்தின் பெரும்பகுதி இதில் அழிந்துபோனது.   

 1930 களில் ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிப்படைகள் தமது கொள்கைக்கு மாற்றான நூல்களைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கினார்கள். 1992 இல் பொஸ்னியாவின் பழைமைவாய்ந்த நூலகம் சேபியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இப்படியாக நீண்டமைந்த உலகின் புத்தக அழிப்பு எனும் துயர் வரலாற்றின் மற்றுமொரு கறுப்புப் பக்கம் இலங்கையில் எழுதப்பட்டது.   

யாழ். நூலக எரிப்பு   

யாழ்ப்பாணப் பொதுநூலகம், 1933 இல் ஆரம்பிக்கப்பட்டு கட்டம்கட்டமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்ததொன்றாகும்.

1959 இல் அன்றைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவினால் பெரியளவில் விருத்தி செய்து கட்டப்பட்ட, யாழ். பொது நூலகம், 1980 இல் சர்வதேச தரங்களுக்கமைவாக அமைந்த, ஏறத்தாழ 97,000 புத்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் கொண்டு, ஆசியாவின் மிகப்பெரிய நூல் நிலையங்களுள் ஒன்றாகப் பரிணமித்தது.   

பனை ஓலைகளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளையும் பல கையெழுத்துப் படைப்புக்களின் மூலப்பிரதிகளையும் யாழ். பொது நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது. சுருங்கக் கூறின் தமிழ் மக்களின் அடையாளமாக, வரலாற்றைப் பாதுகாக்கும் சேமிப்பகமாக யாழ். நூலகம் இருந்தது.   

1981 மே 31 ஆம் திகதி நாச்சிமார் அம்மன் கோவிலடியில் ஆரம்பித்த பொலிஸாரின் வன்முறைகள், மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கின. 1981 ஜூன் முதலாம் திகதி இரவு பொலிஸ் கும்பலும் காடையர் கூட்டமும் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமித்த, யாழ். பொது நூலகத்துக்குள் புகுந்து அதற்குத் தீமூட்டினார்கள்.

ஓலைப்பிரதிகள், கையெழுத்துப் பிரதிகள், மூலப்பிரதிகள் உள்ளிட்ட ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன.   

 ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற வரலாற்று நூலின் ஒரேயொரு பிரதியும் இதில் அழிந்து போனது பெருஞ்சோகம். சுருங்கக் கூறிவதாயின், தமிழர்களின் அடையாளமும் வரலாறும் அரசாங்கத்தின் ஆதரவுடைய இனவெறிக் கூட்டத்தினால் அழித்தொழிக்கப்பட்டது.

இரவோடிரவாக இந்த இனரீதியான புத்தக அழிப்பு (ethnic biblioclasm) நடத்தி முடிக்கப்பட்டது.   

இரண்டு பலம் வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்த போது, அவர்களின் கண்முன்னால் பொலிஸாரினாலும் காடையர்களாலும் பெரும் இனரீதியான வன்முறையும் இனரீதியான புத்தக அழிப்பும் நடத்தப்பட்டது என்றால், அது நிச்சயமாக அவர்கள் அறியாமல் நடந்திருக்க முடியாது.   

யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பானது, தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தின் மீது முழுமையாக நம்பிக்கையிழக்க வைத்தது. தங்கள் கண்முன் நிமிர்ந்து நின்ற தங்களுடைய அடையாளம், தங்களுடைய அறிவுச் சுரங்கம், தீயில் கருகிப்போயிருந்ததைக் கண்ட மக்கள் வெஞ்சினம் கொண்டார்கள்.   

 தமிழர்களின் வெகுசன அரசியல் போக்கில், யாழ். பொது நூலக எரிப்பு பெரும் மாற்றத்தை உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது. 

இதுபற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடும் பேராசிரியர் சிவத்தம்பி, ‘1981 இன் யாழ். நூலக எரிப்பைத் தமிழ் மக்கள், தமது புலமைச் சொத்தின் ஒட்டுமொத்த அழிப்பின் அடையாளமாகவே பார்த்தார்கள். இனப்பிரச்சினைக் காலத்தில் வெளிவந்த இலங்கை தமிழர்களின் இலக்கியத்தை, ஒருவர் கவனமாகப் படிப்பாராயின், 1981 என்பது ஒரு முக்கிய பிரிவைச் சுட்டி நிற்பதைக் காணலாம். பொது நூலக எரிப்பானது, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அடக்குமுறைமிக்க அரசுக்கு எதிராகத் திருப்பியது’ என்று குறிப்பிடுகிறார்.   

(அடுத்த வாரம் தொடரும்)     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X