பாலாவி- கற்பிட்டி விபத்தில் மூவர் பலி
01-01-2017 06:25 PM
Comments - 0       Views - 10

ரஸீன் ரஸ்மின்

பாலாவி - கற்பிட்டி வீதியின் தளுவைப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துகளில் இளைஞர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக, நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தளுவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தளுவையைச் சேர்ந்த ராகுரு சேனாதிபதி சாமல் இசார எனும் புத்தளத்தில் தனியார் வங்கியில் பாதுகாப்பு ஊழியராகக் கடமைபுரியும் 24 வயதுடைய இளைஞர் உயிழிந்துள்ளார்.

குறித்த இளைஞர், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 க்குத் தனது அலுவலகக் கடமைகளை முடித்துக்கொண்டு புத்தளத்திலிருந்து தளுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கில் பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் தளுவை பிரதேசத்தில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதியுள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இளைஞனின் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் நிகழ்ந்துள்ளதாக, புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி பதுருதீன் முஹம்மது ஹிசாம் தீர்ப்பு வழங்கினார்.

இதேவேளை, மேற்குறிப்பிட்ட விபத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண வீட்டுக்கு, அவரின் நண்பர்களான இரு இளைஞர்கள், சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நாவக்காடுப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், அவ் இளைஞர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த இரு இளைஞர்களும் மாம்புரி மற்றும் ஆலங்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போது, மாம்புரியைச் சேர்ந்த நிசங்க பர்னாந்து (வயது 23) என்பவர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக ஏற்பட்ட திடீர் மரணம் நிகழ்ந்துள்ளதாக, புத்தளம் மற்றும் கற்பிட்டிப் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி பதுருதீன் முஹம்மது ஹிசாம் தீர்ப்பு வழங்கினார்.

அத்துடன், ஆலங்குடாவைச் சேர்ந்த இளைஞர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவரும் அங்கு உயிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரண்டு வீதி விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"பாலாவி- கற்பிட்டி விபத்தில் மூவர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty