2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

“அரசியல் கைதிகள் விடுதலையை இழுத்தடிப்புச் செய்வது நல்லதல்ல”

Kogilavani   / 2017 ஜனவரி 04 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியல் கைதிகள் விடயத்தை, மேலும் இழுத்தடிப்புச் செய்வது நல்லாட்சிக்கு நல்லதல்ல” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கண்டி, பல்லேகலயில் அமைந்துள்ள தும்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 13 பேரை, செவ்வாய்க்கிழமை பார்வையிடச் சென்ற வேலு குமார் எம்.பி, அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈட்டார்.

இதன் பின்பு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

“சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், நல்லாட்சியிலும் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை விசாரித்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும், வழக்குகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன. இதற்கூடாக, தமது காலத்தையும் நீதிமன்றத்தின் காலத்தையும் வீணடிப்பதே நடைபெற்று வருவதாக, அவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினர்.

எனவே, தமது வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சிலர், இந்நிலைமையை தடுப்பதற்கும் வழக்குகளின் இழுத்தடிப்பதை தடுப்பதற்கும் வேறுவழியின்றி, செய்யாத சில குற்றங்களை, தாம் செய்ததாகக் கூறி ஒப்புக்கொண்டுள்ளதுடன், வழக்கையும் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

எனவே, நல்லாட்சி அரசாங்கமானது, அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .