2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

விஸ்வரூபம் எடுக்கும் வில்பத்து

Administrator   / 2017 ஜனவரி 06 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹமட் பாதுஷா  

இலங்கையில் வியாபித்திருந்த யுத்தமும் அதன்வழிவந்த இடம்பெயர்வும் பல குக்கிராமங்களை அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைத்திருக்கின்றன. 

முசலி மற்றும் வில்பத்து சரணாலயத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களும் இதேபோலதான் ஆகிப்போனது என்றால் மிகையில்லை.முன்னொரு காலத்தில் ஆயுதம் தரித்தோரால் விரட்டப்பட்டவர்களை, இன்று இனவாதமும் சட்டமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. காரணிகள் மாறினாலும் விளைவுத் தாக்கங்களில் பெரிய மாறுதல்களைக் காண முடியவில்லை. 

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரை, வனவளங்களுக்கும் அதன் பாதுகாப்புப் பற்றிக் கவலைப்படுவோருக்கும் வேண்டுமென்றால் சந்தோசமாக இருக்கலாம்.  

 ஆனால், இடம்பெயர்ந்த முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், அதற்கு மாற்றமான ஒரு மனப்பதிவையே அது உண்டுபண்ணியிருக்கின்றது. வடக்கில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னும் முழுமையாக குடியேற்றப்படவில்லை என்ற கவலையும் விசனமும் ஏற்கெனவே, வடபுல முஸ்லிம்களின் மனதில் நிரம்பியிருக்கிறது.

இந்நிலையில், முஸ்லிம்களின் குடியிருப்புப் பிரதேசத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் வனபரிபாலன திணைக்களத்துக்கு உட்பட்டதாக ஏற்கெனவே பிரகடனப்படுத்தியிருக்க, இப்போது வில்பத்துவைச் சூழவுள்ள ஒரு குறிப்பிட்டளவான பகுதியையும் வனவள பிரதேசத்துக்குள் உள்ளீர்க்க முனைவது, மனிதநேயமுள்ள யாருக்குமே சந்தோசமான செய்தியல்ல.   

வில்பத்து சரணாலயம் என்பது ஐந்து சிறு காடுகளை உள்ளடக்கியதாகும். இந் நிலப்பரப்பு. புத்தளத்துக்கு வடக்காகவும் அநுராதபுரத்துக்கு வட மேற்காகவும் வடக்கு பெருநிலப்பரப்பை ஊடறுத்து வியாபித்திருக்கின்றது. இதனைச் சூழ, முஸ்லிம்களின் பூர்வீகமான குக்கிராமங்கள் பல காணப்படுகின்றன.   

குறிப்பாக முசலி, மறிச்சுக்கட்டி, பாவற்குழி, காட்டுக்குழி என இன்னும் பல குக்கிராமங்களில் மக்கள் வாழையடி வாழையாக வாழ்கின்றனர். இவர்களுள் ஒரு தொகுதியினர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீளக் குடியேறியுள்ளனர். இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் பூர்த்தியடையவில்லை.   

இம்மக்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்துச் சட்ட விரோதமாகக் குடியேற்றப்பட்டுள்ளதாகக் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, விஷமத்தனமான பிரசாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதே இவ்வாறான புனைகதைகளின் இறுதி இலக்காகவும் இருக்கின்றது.   

புலிகள், முஸ்லிம்களுக்குச் செய்த மிகப் பெரிய அநியாயங்களுள் முக்கியமானதுதான் வடக்கின் இனச் சுத்திகரிப்பு. வடக்கின் பல பகுதிகளில் இருந்து இரவோடிரவாகக் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்.   

குறிப்பாக, 1990 ஆம் ஆண்டு முசலியைச் சூழவுள்ள, தமது பூர்வீக கிராமங்களில் இருந்து சுமார் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர். தமது பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் சைக்கிள்களிலும் உழவு இயந்திரங்களிலும் ஏற்றிக் கொண்டு புத்தளத்தை அண்டிய பிரதேசங்களை நோக்கி அம்மக்கள் நகர்ந்தனர். பலர் பல கிலோமீற்றர் தூரம் நடந்தே வந்தனர். துப்பாக்கிகள் மீதான உயிர்ப்பயம் அவர்களைத் திக்குத் தெரியாத காட்டில் கூட்டி வந்து விட்டது எனலாம்.   

அன்று முதல், அவர்களது வாழ்க்கை, அகதி முகாம்களிலும் அடைக்கலமளித்தோரின் வீடுகளிலுமே கழிந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்,போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் முசலி பகுதிக்குச் சென்று, தமது சொந்த இடங்களைப் பார்வையிட்ட போதும், பின்னர் அவ்வுடன்படிக்கை மீறப்பட்டு, யுத்தம் மீண்டும் தொடர்ந்ததால் மீள்குடியேறவில்லை.   

இப்படியாகச் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடோடிகளைப் போல் வாழ்ந்த மக்களை, மீளக் குடியேற்றுவதற்கான சாத்திய சூழல் யுத்தம் முடிவடைந்த பின்னரே ஏற்பட்டது. அதன்படி அப்போதைய அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ், ஜனாதிபதி மஹிந்தவின் பூரண சம்மதத்துடன், முசலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பெருமளவிலான முஸ்லிம்களும் சிறிதளவு சிங்களவர்களும் குடியேற்றப்பட்டனர்.   

இப்பிரதேசம் மீளக் குடியேறிய முஸ்லிம் மக்களின் சொந்த மண் என்பதில் இரு நிலைப்பாடுகள் இல்லை. அங்கு அதற்கான தடயங்களும் இருக்கின்றன.   

ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு, சட்ட முறைப்படியே இக்குடியேற்றம் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.இந்தச் செயலணியில் அங்கம் வகித்த - வனபரிபாலனத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு, மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்ட விரோதமாக, இந்தக் குடியேற்றத்தைச் செய்திருப்பார்கள் என்று யாராவது கூற முடியுமா?   

அன்றேல், இனவாதம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மஹிந்த அரசாங்கம், சிறுபான்மை மக்களுக்காக எல்லா வரண்முறைகளையும் மீறி, இக் குடியேற்றத்தை மேற்கொண்டிருக்குமா? அதற்கு சாத்தியமே இல்லை.   

அப்படி சட்டத்துக்கு முரணாக ஏதாவது நடைபெற்றிருந்தால், அன்றிருந்த ஆட்சியாளர்கள் தொடக்கம், ரிஷாட் பதியுதீன் தொட்டு, அரசாங்க அதிகாரிகள் வரை ‘எல்லோரும்’ விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை. ஆனால், அதற்காக அப்பாவிப் பொதுமக்களைக் குற்றவாளிகளாக்க முடியாது.   

வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக பேரினவாத சக்திகள் ஒன்றரை வருடங்களுக்கு முன்பிருந்தே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.   

முதன் முதலாக, இது பற்றி மக்கள் விடுதலை முன்னணியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. உடனே, இது விடயத்தில் அக்கறை செலுத்திய ஜனாதிபதி, இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நிறுத்துமாறு உத்தரவிட்டார். அப்பாவி முஸ்லிம்களின் குடியமர்வு தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே தனது நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி முதன்முதலாக பாவித்திருந்தார் என்று அப்போது பேசப்பட்டது.  

ஆனால், இதில் ஒரு நேர்மை இருந்தது. சட்டத்தை மதித்தும், அதேநேரம் மனிதாபிமானத்தை மனதில் கொண்டும், இவ்விவகாரத்துக்கு முடிவு கட்டப்படும் என்று முஸ்லிம்கள் நம்பினர். இன்று, அந்த நம்பிக்கை வீணாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.   

2016 டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி, நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில், “வில்பத்து தேசிய வனாந்தரத்தின் எல்லைகளை விஸ்தரித்து வனவள வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயரதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.   

வில்பத்து சரணாலயத்துக்கு அருகிலுள்ள குறிப்பிட்டளவான நிலப்பரப்பையும் உள்வாங்கி, வன பரிபாலன திணைக்களத்தின் கீழ் கொண்டுவரும் விதத்தில் ஜனாதிபதியின் இப்பணிப்புரை அமைந்திருக்கின்றது.   

இதனையடுத்து, முஸ்லிம் தரப்பிலிருந்து பரவலாக இதற்கெதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆயினும், அதன்பிறகு இடம்பெற்ற ஒரு சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, “இவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதையிட்டு, தனிப்பட்ட ரீதியில்தான் மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதாக”க் குறிப்பிட்டிருக்கின்றார்.   

“வில்பத்து சரணாலயத்துக்கு சில கிலோமீற்றர் தொலைவில், முஸ்லிம்கள் மீளக் குடியேறியிருக்கும் பிரதேசங்கள் அனைத்தும், இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள்” என்று வடபுல முஸ்லிம்களின் பிரதிநிதியும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் கூறிவருகிறார்.   

அதாவது, இப்பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறிவிட்ட பிறகு, அங்கு பல வருடங்களாக அரசாங்கப் பொறிமுறை சரியாக இயங்கியிருக்கவில்லை. வனபரிபாலன அதிகாரிகளும் பாதுகாப்பு அரண்களுக்கு வெளியில் நின்று கொண்டுதான் காடுகளைப் பராமரித்திருப்பார்கள். இந்த 20 வருடங்களுக்கும் அதிகமான காலத்தில் குடியிருப்பு பிரதேசங்களில் காடுகள் வளர்ந்து, ஊர்களும் காடுகள் போல மாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.   

ஆனாலும், அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னங்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன. இந்நிலையில் சில இடங்களில் காடுகளை அகற்றியே மக்கள் குடியேறினார்கள். இதைத்தான் காடழிப்பு என்று ஊதிப் பெருப்பித்து விட்டார்கள் என்று வடபுல மக்கள் கூறுகின்றனர்.   

இவ்வாறிருக்க, முஸ்லிம் மக்களின் ஒரு பகுதி நிலங்களை வில்பத்து வனவள பிரதேசத்துக்குள் உள்ளெடுக்கும் வகையிலமைந்த 1879/15 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை, அரசாங்கம் 2012 இல் வெளியிட்டது.   

ஏற்கெனவே, காடாகிக் கிடந்த ஊரை, வனவள பிரதேசமாக அறிவித்துவிட்டு, அங்கு மக்கள் குடியேறும் போது.... ‘இதோ காடழிப்பு’ என்று கூறுகின்றார்கள் என்ற தொனியிலேயே அமைச்சர் ரிஷாட் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.  

எனவே, அந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற வேண்டும் என்று அவர் கோரி வருகின்றார். இவ்வாறான ஒரு கட்டத்திலேயே, மேலும் அதிக நிலப்பரப்பை உள்வாங்கி, அதனை ‘வில்பத்து வனவள வலயமாக’ பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான பணிப்புரையை ஜனாதிபதியே விடுத்திருக்கின்றார். இது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.   

இனவாத நடவடிக்கைகள், மதம்சார்ந்த கெடுபிடிகளால், ஏற்கெனவே மனமுடைந்து போயிருக்கின்ற முஸ்லிம்களிடையே ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு கடுமையான மனத்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், 2012 இல் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் வன பரிபாலனத் திணைக்களத்துக்குரியதாக வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகின்ற நிலையில், இப்போது வில்பத்துவுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியையும் உள்ளடக்கும் வகையில் வில்பத்து வனவளப் பகுதி விஸ்தரிக்கப்படுமாக இருந்தால்,வில்பத்தை சூழவுள்ள மீள்குடியேற்றப் பிரதேசங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சாத்தியமிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.  

வனவிலங்குகளையும் வனாந்திரங்களையும் பாதுகாப்பது நம் அனைவரது கடமையாகும். அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி இவ்வாறான பணிப்புரையை விடுத்திருக்கிறார்.   

இப்பகுதியில் மீள்குடியேறும் முஸ்லிம் மக்களை வவுனியா, மதவாச்சியில் குடியேற்றும் திட்டமும் அவரிடம் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அது நல்லதே. இருப்பினும் அவர்களை மீளக் குடியேற்றி விட்டே வர்த்தமானி அறிவித்தல் போன்ற சட்ட ரீதியான செயன்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.  

இதேநேரத்தில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன, முஸ்லிம்களின் நியாயங்களைப் புரிந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளார். “முஸ்லிம்களோ அமைச்சர் ரிஷாட் பதியுதினோ அங்கு காடழிப்பு செய்யவும் இல்லை; வில்பத்தை ஆக்கிரமிக்கவும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.   

அவசர அவசரமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட வேளையில், சில தவறுகள் இடம்பெற்றிருக்க வாய்ப்பிருக்கின்றது. அது தவறுகளாக இருந்தால், அவற்றைத் திருத்திக் கொள்வதுடன், அவை ஊழல், சட்ட மீறல்களாக இருப்பின், அவற்றுக்கு முறைப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கின்ற போது, வடக்கில் சிங்கள மக்கள் அடாத்தாக மீள் குடியேற்றப்பட்டு வருவதாக சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதைவிட்டுவிட்டு, ஏற்கெனவே வாழ்வைத் தொலைத்து, ஆமை வேகத்தில் மீளக் குடியேறிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் மக்களின் வாழ்விடத்தில் மட்டும் கண்வைக்கக் கூடாது. இதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் இடமளிக்கவும் முடியாது. வர்த்தமானி அறிவித்தல் வருவதற்கு முன்னரே செயலில் இறங்க வேண்டும்.   

இந்தக் கோணத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் ஒன்றுசேர்ந்திருப்பது பாராட்டத்தக்கது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் பேதங்களை மறந்து அமைச்சர்கள், எம்.பிக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இதுபற்றி பேசியிருப்பதுடன், மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.   

அதன்பிரகாரம், எம்.பிக்களின் மகஜரை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தல், 2012 இன் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறக் கோரல், அனைத்துத் தரப்பினரும் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு, நிலைமைகளை விளங்கிக் கொள்ளல் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.   

முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பிரதியமைச்சர் ஹரீஸ், வில்பத்து விஸ்தரிக்கும் முயற்சிக்கு எதிராக அறிக்கை விட்டுள்ள போதும், அக்கட்சியின் ஏனைய உறுப்பினர்களோ தலைவர்களோ வாழாவிருப்பதை காணமுடிகின்றது. அதுபோலவே, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா போன்றோரும் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததாகத் தெரியவில்லை.  

 எனவே, காலம் தாழ்த்தாது முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். வடபுலத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.   

‘சமூகக் கல்வியும் வரலாறும்’ பாடக்குறிப்புக்களில் உள்ளது போன்று, வில்பத்து சரணாலயத்தையும் அதனையண்டிய பகுதிகளையும் வெறுமனே புவியியல் வரைபடங்களோடு ஆராய்வதை விடவும், நிர்க்கதியாகியுள்ள மக்களின் வாழ்வு பற்றிச் சிந்திப்பது இங்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய விடயமாகின்றது. ஆக, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் அஃறிணைகளா? உயர்திணைகளா? என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X