2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

Administrator   / 2017 ஜனவரி 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என்.கே.அஷோக்பரன்  LLB (Hons)   

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 74)

யாழ். வன்முறைகள் நாடாளுமன்றில் எதிரொலித்தது  

1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை யாழில் நடந்தேறிய கொடும் வன்முறைகளின் எதிரொலி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது நாடாளுமன்றில் ஒலித்தது. 

குறித்த கலவரத்தில் தீவைத்து அழிக்கப்பட்ட தனது வீட்டிலிருந்து தனது குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியிருந்த யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்தான் சந்தித்த பெரும் கொடூரத்தையும் தான் மயிரிழையில் உயிர் தப்பியமையையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். 

தன்னுடைய வீடும், வீட்டிலிருந்த சகல பொருட்களும் உடமைகளும் முற்றாக தீக்கிரையாகி விட்டிருந்ததாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், அமைதியான வேளையில், எந்த நாகரீகமடைந்த நாடும் செய்யாத வகையில் வன்முறைத் தீயை அப்பாவி மக்கள் மீது நீங்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்.

இந்த அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்று ஆளும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மீதான தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.  

இதன்போது, நடந்த வாதப்பிரதிவாதத்தில் அமைச்சர் சிறில் மத்யூ, பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டினை முற்றுகையிட்டபோது, அங்கு யோகேஸ்வரன் பயங்கரவாதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்ததாகக் குற்றம் சுமத்தினார். 

இந்தக் குற்றச்சாட்டை யோகேஸ்வரன் முற்றாக மறுத்தார். இதன் பின்னர் பேசிய தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம், அமைச்சர் சிறில் மத்யூ வழங்கிய தகவலின் பெயரில்தான் பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டைத் தாக்கினார்கள். இவர்தான், பொலிஸாருக்கு இந்தத் தகவலை வழங்கியிருக்க வேண்டும் எனச் சாடினார்.   

அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்   

இதனைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை முன்வைத்தது.

1981 ஆம் ஆண்டு மே-ஜுன் கலவரம் இந்த அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களின் தலைமையில், அவர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டமையினால் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கையிழப்பதாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தெரிவித்தது. 

5/6 பெரும்பான்மை கொண்ட ஜே.ஆர் அரசாங்கத்தை நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும் செய்யாது, ஆனால், ஜனநாயகப் பொறிமுறையொன்றின் கீழ் நாடாளுமன்றத்தில் காட்டத்தக்க உச்சபட்ச எதிர்ப்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானமே காணப்படுவதால், யாழில் நடந்த கொடும் வன்முறைகளுக்கும் யாழ். பொது நூலக எரிப்புக்கும் எதிராக உச்சபட்ச எதிர்ப்பைக் காட்டவேண்டிய தேவை இருந்ததாலும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்திருக்கலாம்.   

அரசாங்கத்தின் புதுமையான பதிலடி   

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைத்த போது, ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், இனவெறியுடன் விஷத்தைக் கக்கும் பேச்சுக்களால் அதனை எதிர்கொண்டதுடன், ‘வெஸ்மினிஸ்டர்’  நாடாளுமன்ற மரபுகள் அறியாத ஒரு புதுமையான நடவடிக்கையை முன்னெடுத்தது.

 ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் கையொப்பமிட்டு சபாநாயகராக இருந்த எம்.ஏ.பாகீர் மாகாரிடம் சமர்ப்பித்தனர். 

எதிர்கட்சித் தலைவர் என்பது அரசாங்கத்தின் ஒரு பதவியல்ல; அது சம்பிரதாய பூர்வமான பதவி. எதிர்கட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது ‘வெஸ்மினிஸ்டர்’ நாடாளுமன்ற மரபுகள் அறியாத வேடிக்கையாகும். 

அமிர்தலிங்கம் வௌிநாடுகளுக்கிடையே இலங்கையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவுக்கும் வகையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்வைத்தனர்.

1981 ஜூலை 23 ஆம் திகதி அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கமொன்றை வழங்க எத்தனித்தபோது, ஆளும் தரப்பிலிருந்து பெரும் கூச்சல் எழுப்பப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நெவில் பெர்னான்டோ, அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தார், நாடாளுமன்றம் அனுமதித்தால் மட்டுமே அவர் அதனைச் செய்யமுடியும் என்று அவர் கூறினார்.

அமிர்தலிங்கம், சபாநாயகர் பாகீர் மாகாரிடம் தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் கோரியபோது, அது சபாநாயகர் பாகீர் மாகாரினால் நிராகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு  தன்னிலை விளக்கம் அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வௌிநடப்புச் செய்தார்கள். 

இதன்போது ஆளுந்தரப்பிலிருந்து பெருங்கூச்சல் எழுப்பப்பட்டது. அமிர்தலிங்கம் துரோகி, பொய்யர், பயங்கரவாதத்தின் ஆதரவாளர் என்றெல்லாம் வசைபாடப்பட்டார்.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சேபம்  

எதிர்த்தரப்பிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் பிரதித் தலைவர் மைத்திரிபால சேனநாயக்க ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் வரைமுறைகளுக்குள் இல்லையென்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்பது நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படியான பதவி என்றும், அவர் எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளாரென்றும், இந்தப் பிரேரணையால் எதுவும் விளையப்போவதில்லை என்றும் அதனால் குறித்த பிரேரணை செல்லுபடியாகாது என்று உத்தரவிடுமாறும் சபாநாயகரை அவர் வேண்டினார்.

ஆனால் இந்த மறுப்பானது காலந்தாழ்த்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது எனவும், தற்போது இந்தப் பிரேரணை மீதான விவாதத்தை முற்கொண்டு செல்வதைத் தவிர, தனக்கு வேறு வழியில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் முத்தெட்டுவேகம சபாநாயகர் நாடாளுமன்றத்தை வழிநடத்துகிறாரா, அல்லது அரச உறுப்பினர்களை மட்டும் வழிநடத்துகிறாரா என்று விசனத்துடன் கேள்வியெழுப்பினார். இதன்பின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் அவையிலிருந்து வௌிநடப்பு செய்தன.  

இனவெறிப்பேச்சுக்கள்   

எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தனி ஆவர்த்தனம் வாசித்தனர். இலங்கை வரலாற்றின் மிகமோசனமான வெறுப்புப் பேச்சுக்கள் ஜனநாயகத்தின் கோவிலென சிலாகிக்கப்படும் நாடாளுமன்றத்தில் இதன்போது பதிவாகின என்பது வெட்கக்கேடானது.   

ஓர் இனத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது, ஈவிரக்கமற்ற வகையில் பெரும் வன்முறையை அந்த நாட்டு அரசாங்கமே கட்டவிழ்த்து விட்டிருந்த கொடுமை நடந்தேறிய வேளையில், அதற்கான கண்டனத்தை நாடாளுமன்றத்தில் அந்தச் சிறுபான்மை இனமக்களின் பிரதிநிதிகள் பதிவுசெய்த போது, அதற்கான மன்னிப்பையாவது அன்றைய அரசாங்கம் கேட்டிருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் வாயடக்கி மௌனிகளாகவாவது கள்ளமௌனம் சாதித்திருக்கலாம். 

ஆனால், பேரினவாதவெறிகொண்ட பலரைத் தன்னகத்தே கொண்டிருந்த அன்றைய அரசாங்கத்திலிருந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்கள், பேரினவாத வெறியைக் கக்குவனவாகவே அமைந்தன; வேதனைக்குரியது. 

ஒரு நாட்டின் அப்பாவிச் சிறுபான்மையினமொன்றின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது மட்டுமல்லாது, அதன் பின்னர், அதனை இனவெறிகொண்டு நியாயப்படுத்தவும் முயற்சித்தமை அபத்தமானது மட்டுமல்ல, அசிங்கமானதும் வெட்கப்படவேண்டியதும் கூட.   

இந்தியாவுக்கு போகவும்   

நாடாளுமன்றத்தில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யு.ஜே.எம். லொகுபண்டார, “அவர்களது தாயகம் அல்லாது இந்த மண்ணில் அவர்களுக்கெதிராக (தமிழர்களுக்கெதிராக) இனப்பாகுபாடு காணப்படுகிறதென்றால், அவர்கள் ஏன் இங்கு இருக்க வேண்டும்? அவர்கள் அவர்களது வீட்டுக்கு (இந்தியாவுக்கு) போகலாமே, அங்கு இந்தப் பாகுபாடுகள் இருக்காது.

அங்கு, உங்கள் கோவில்கள் இருக்கின்றன, உங்கள் கடவுள்கள் இருக்கிறார்கள். அங்கு, உங்கள் கலாசாரம், கல்வி, பல்கலைக்கழகங்கள் எல்லாம் இருக்கிறன. அங்கு, உங்கள் விதியைத் தீர்மானிக்கும் எஜமானர்கள் நீங்கள்தான். தமிழர்கள் தனித் தமிழீழம் அமைக்க முயலவதை உறங்கிக்கொண்டிருக்கும் சிங்களவர்கள் கண்டு விழித்துக் கொள்வார்களானால் பின்பு விஷயங்கள் அமைதியாக இருக்காது.

உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கள சகோதரரை எழுப்பாதிருப்பதே தமிழர்களுக்கு நான் வழங்கக்கூடிய ஆலோசனையாகும். சிங்கங்கள் குழப்பமடைந்தால், விஷயங்கள் அமைதியாக இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று பேரினவாத வெறியைக் கக்கினார்.   

பெரும்பான்மையோர் போல ஆள்வோம்   

டபிள்யு.ஜே.எம்.லொகுபண்டாரவின் இனவெறிக்கு சற்றும் குறைவில்லாது, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர் திருமதி விமலா கன்னங்கரவும் பேரினவாத விஷத்தைக் கொட்டித் தீர்த்தார்.

தனது உரையின் போது, “நாம் ஆட்சி செய்வதென்றால், நாம் ஆட்சி செய்ய வேண்டும், நாம் ஆளுவதென்றால், நாம் ஆளவேண்டும். சிறுபான்மையினரின் எடுப்புக்களுக்கெல்லாம் நாம் ஆட்படக்கூடாது. நாம் சிங்களவர்களாகவும் பௌத்தர்களாகவும் இந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்.

நாம் பெரும்பான்மையினத்தவர்களாக இருந்தாலும், நான்கு ஆண்டுகளாகச் சிறுபான்மையினருக்கு அடங்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இனியாவது நாம் பெரும்பான்மைச் சமூகத்தைப் போல ஆள்வோம்” என்றார்.   

சவுக்கால் அடிப்போம்  

பேரினவாத வெறியைக் கக்குவதில் நீயா நானா என்ற போட்டி நாடாளுமன்றத்தில் நடந்தது போலவேயிருந்தது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குண்டசாலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டீ.எம்.சந்திரபால, “ஐயா, இந்தத் தமிழர்களின் தலைவர் என்று சொல்லிக் கொள்பவரை நாம் என்ன செய்யவேண்டும்? எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால், அவரது மூளை தௌிவடையும் வரை ஒரு கொன்கிரீட் தூணில் கட்டிவைத்து சவுக்கால் வெளுப்பேன்.

அதன்பிறகு யாரும் அவரை எதையும் செய்து கொள்ளலாம் - பெய்ரேயில் (பெய்ரே எனும் குளம்) தூக்கியெறியலாம்; அல்லது கடலினுள் அவரை வீசலாம்; ஏனெனில் எனது அடியால் அவர் சிதைந்துபோயிருப்பார்; உயிர் அவரது உடலில் இருக்க வாய்ப்பில்லை. இதுதான் யுத்தம் என்பது” என்று எள்ளி நகையாடிப் பேசினார்.   

விதவிதமான தண்டனைகள்   

இன்னும் ஒருபடி மேலே சென்ற இரத்தினபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் 
ஜீ.வீ.புஞ்சிநிலமே, “நேற்றுக் காலையிலிருந்து இந்த உயர் அவையில் அவர்களுக்கு (தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு) என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பலரும் பல்வேறு தண்டனைகளை முன்வைத்து வருகிறார்கள்.

பாணந்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (டொக்டர் நெவில் பெர்னான்டோ) இரண்டு பாக்குமரத் தூண்களின் நடுவில் கயிற்றிலே ஒரு நபரைக் கட்டி பின், அதனை வெட்டும்போது, உடல் நடுவில் இரண்டாக பிளக்கப்படும் பண்டைய சிங்கள அரசர்களின் தண்டனையொன்றினைப் பற்றிக் குறிப்பிட்டார். 

இவர்களுக்கும் (தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) இந்தத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். சிலர் இவர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட வேண்டும் என்றார்கள்.

சிலர் இவர்களது கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றார்கள். சிலரோ இவர்களைக் காலிமுகத்திடலில் நிற்கவைத்து சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்றார்கள். இந்த நாட்டு மக்கள் இவர்களுக்கு இந்தத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். அரசாங்கம் இதனைச் செய்யத் தயாராக இருக்கிறது” என்று வன்கொடுமையை வாயிலிருந்து கட்டவிழ்த்துவிட்டார்.   

மேலே சொன்ன வார்த்தைகள் எல்லாம் தேர்தல் மேடைகளிலோ, கட்சிக் கூட்டங்களிலோ, ஊடக விவாதங்களிலோ பேசப்பட்டவை அல்ல. மாறாக ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகிற நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விட்ட இனவெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் கூட்டமொன்றின் வலியை, வேதனையைப் நாடாளுமன்றத்தில் பதிவு செய்த அம்மக்களின் பிரதிநிதிகளுக்கு எதிராகப் பேசியவை! ஜே.ஆரின் “தர்மிஸ்ட” ஆட்சியின் உண்மை இலட்சணம் இவ்வாறுதான் அமைந்தது. 

தான் நட்டநடுப்பகலில், நட்டநடுவௌியில் வெறிகொண்ட காடையர்களால் வன்புணரப்பட்ட பெருங்கொடுமையைச் சொல்லி, ஒரு அப்பாவிப் பெண் நீதிகேட்டழும்போது, வன்புணர்வுக்கு ஆளான அவளுக்கு என்ன வகையான தண்டனை கொடுக்கலாம் என ஆட்சியாளர்கள் விதவிதமான கொடூர தண்டனைகள் பற்றி ஆராய்வது எவ்வளவு அபத்தமானதோ, அசிங்கமானதோ, கேவலமானதோ, மனிதாபமானமற்றதோ அதைப்போன்றதுதான் அன்றைய ஆட்சியாளர்களின் இந்தப் பேச்சுக்கள் அமைந்தன.  

எதிர்த்துப் பேசியதுடன் வாக்களிக்காது விட்ட தொண்டமான்   

அரசாங்கத்துடன் இருந்தாலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து பேசினார். ஜூலை 24 ஆம் திகதி வரை மேற்குறித்த விவாதங்கள் தொடர்ந்தன.

அதன் பின் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை 121 வாக்குகள் ஆதரவாகப் பெறப்பட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. சௌமியமூர்த்தி தொண்டமானும், பிரதி நீதியமைச்சராக இருந்த ஷெல்டன் ரணராஜாவும் வாக்களிக்காது தவிர்த்தனர்.

 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும், அதனால் எந்த தொழில்நுட்ப ரீதியிலான விளைவுகளும் ஏற்படவில்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வதில் எந்த தொழில்நுட்பத் தடைகளுமில்லை.   

இத்தோடு இது ஓயவில்லை. 1981 ஜூலை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் அளவில்லாது கொட்டப்பட்ட இனவெறிப் பேச்சுக்கள் மூலம் தமிழ் மக்களுக்கெதிரான இன்னுமொரு இனக்கலவரத்துக்கான அஸ்திவாரம் இடப்பட்டது. அந்தக் கைங்கரியத்தையும் அமைச்சர் சிறில் மத்யூவே முன்னெடுத்தார்.

(அடுத்த வாரம் தொடரும்)     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .