‘விமலின் வாயை மூடவே முடியாது’
12-01-2017 10:38 AM
Comments - 0       Views - 222

“கைதுசெய்து, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவை, ஏழு சிறைகளுக்கு அனுப்பினாலும் அவருடைய வாயை மூடவே முடியாது” என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகை அடிப்படையில் அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், செவ்வாய்க்கிழமை (10) கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

வெலிக்கடை சிறைச்சாலைக்கு, அன்றையதினம் மாலையே சென்ற மஹிந்த ராஜபக்ஷ எம்.பி, அவரை பார்த்து நலம்விசாரித்தார்.   

சிறைச்சாலை வளாகத்திலிருந்து வெளியேறும் போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

விமலை கைதுசெய்வார்கள் என எல்லோருக்கும் தெரியும். இதனை நான் முன்கூட்டியே எதிர்வு கூறியிருந்தேன். அவர்களின் மாநாடு, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கிறது. அதற்குள் இன்னும் பல நாடகங்கள் அரங்கேற்றப்படும்.  

வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஒத்தாசை வழங்கினார் என்றே, விமல் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதி முகாமையாளரை ஏன் கைதுசெய்யவில்லை என்றும் மஹிந்த கேள்வியெழுப்பினார்.  

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசாங்கத்துக்கு தேவையான வகையிலேயே வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. என்னை பொறுத்தவரையில் நீதிமன்றம் சுயாதீனமாக இருக்கவேண்டும் என்றார்.  

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச எம்.பி, வெலிக்கடை சிறைச்சாலையில் ‘ஈ’ வாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எம்.பியாக இருந்த போதும், நாமல் ராஜபக்ஷ எம்.பியும் இதே வாட்டிலேயே இருந்தனர். 

"‘விமலின் வாயை மூடவே முடியாது’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty