2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஐ.நாவில் என்ன செய்யப் போகிறோம்?

Administrator   / 2017 ஜனவரி 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

​ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர், பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பித்து, மார்ச் 24ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில், மார்ச் 22ஆம் திகதியே, இலங்கை பற்றிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்பாகவே, மார்ச் 8ஆம் திகதி, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதில், இலங்கை பற்றிய கருத்துகள் நிச்சயமாக இடம்பெறும். என்றாலும், இப்போது தான் ஜனவரி மாத நடுப்பகுதி என்பதால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிப்பதற்கு, இன்னமும் காலமெடுக்கலாம்.

ஆனாலும், அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் பொதுவாகவே அதிகரித்துவரும் அரசியல் முக்கிய புள்ளிகளின் உரைகளிலும் மனித உரிமைகள் பற்றிய பேச்சுகள், கவனம் பெற்றுள்ளன. எனவே, தமிழர் தரப்பு, மார்ச் மாதம் வரும்வரையிலும் காத்திருக்காது, அரசாங்கத்துக்கு எவ்வாறான அழுத்தத்தை வழங்குவது என்பது குறித்து ஆராய வேண்டும்.

ஏற்கெனவே, பல தடவைகள் கூறப்பட்ட விடயம் தான் என்றாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த தமிழ் மக்கள், அவர்களிடமிருந்து குறைந்தபட்ச நேர்மையை எதிர்பார்த்திருந்தார்கள்.

ஒப்பீட்டளவில் மஹிந்த ராஜபக்‌ஷவை விடச் சிறந்தவர்களாக இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. மாறாக, உண்மையாகவே நேர்மையாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள். அதற்கான ஆரம்பகால சமிக்ஞைகள், சாதகமாகவே தெரிந்தாலும், தற்போது “பழைய குருடி, கதவைத் திறவடி” நிலைக்குச் சென்றுவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை இணைந்து நிறைவேற்றிய இலங்கை, அதனை நடைமுறைப்படுத்துமென எதிர்பார்க்கப்பட்டாலும், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியே நடந்து வந்திருக்கிறது.

தீர்மானத்தின்படி, கலப்பு நீதிமன்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கூறப்பட்டாலும், “சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கத்தின் இன்னும் சில பகுதியினரும் குறிப்பிட்டு வந்தனர்.

சர்வதேச ரீதியில் இலங்கையின் பெயரைக் காப்பாற்றுவதற்கான ஓடோடித் திரிந்துகொண்டிருந்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவோ, “அது ஜனாதிபதியின் தனிப்பட்ட கருத்து. ஐ.நா தீர்மானத்தின்படி செயற்படுவதில் உறுதியாக உள்ளோம்” என்று, வெளிநாடுகளில் கூறிவந்தார்.

ஆனாலும் கூட, வெளிநாட்டு நீதிபதிகளின்/வழக்குத் தொடருநர்களின் பங்களிப்பு, இருக்கவே இருக்காது என்ற கருத்து, அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர், அண்மைய நாட்களில், இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

இவற்றுக்கு மத்தியில், நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக் குறித்துக் கூறப்பட்டிருந்தது.

அறிக்கையின் உள்ளடக்கத்தை விடுத்து, அந்த அறிக்கை கையளிக்கப்படும் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதோடு, அந்த அறிக்கையை ஜனாதிபதி பெற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தனியார் கைத்தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் நாட்டும் பணியில் பகலிலும், கட்சியைக் காப்பாற்றுவதற்கான இரகசியக் கூட்டத்தில் பின்னிரவிலும் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு, முன்னிரவில் நடந்த அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போனது. பிரதமருக்கும் அதே நிலைமை தான்.

7,000க்கும் மேற்பட்டோரின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அந்த அறிக்கை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், மீண்டும் இடம்பெறாமையை உறுதி செய்தல் ஆகியன சம்பந்தமான அண்மைக்கால முயற்சிகளில் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

அந்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதில்தான் மெத்தனத்தன்மை என்றால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதைக் குப்பையில் போடாத குறையாகவே, அதற்கான வரவேற்பு, அரசாங்க மட்டத்தில் இருந்தது.

சர்வதேச நீதிபதிகள் என்ற விடயத்தை முற்றாக நிராகரித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, “செயலணியில் அங்கம் வகித்தவர்கள், உயர்மட்டப் புத்திசாலிகள் எனக் கூறிவிட முடியாது” என்று, விநோதமான தனிப்பட்ட தாக்குதலொன்றையும் மேற்கொண்டார்.

இந்தச் செயலணி, பிரதமராலேயே உருவாக்கப்பட்டது. அதன் நியமனங்கள், அவராலேயே மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அச்செயலணி மீதான இவ்வாறான தாக்குதல், ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அன்று.

இதற்கு மேலாக ஒருபடி சென்று, கலப்பு நீதிமன்றமொன்றை இலங்கை ஏற்கெனவே நிராகரித்துள்ளதாகவும் அதை மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன் ஏற்கெனவே ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்தார்.

உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயத்தின்போதே, இந்த நிலைப்பாட்டை அவர் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், அமைச்சரின் கருத்தை நிராகரித்த உயர்ஸ்தானிகர் அலுவலகம், கலப்பு நீதிமன்றமென்ற நிலைப்பாட்டில் மாற்றங்கள் இல்லையெனவும் உயர்ஸ்தானிகரின் நிலைப்பாடு, எப்போதும் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாகவும் தெரிவித்தது. எனவே, சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்துக்கு மூக்குடைவு ஏற்பட்டது.

ஆனால், இந்தச் செயலணியின் அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக, அமைச்சர்களான மங்கள, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர், அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தனர். எனவே, இந்த அறிக்கையை, அரசாங்கம் முற்றுமுழுதாகப் புறக்கணித்தது என்ற கருத்து எழுவதற்கான வாய்ப்புகளையும் அரசாங்கம் தவிர்த்துக் கொண்டது.

இது, இந்த அரசாங்கத்தின் புத்திசாலித்தனமான திட்டங்களுள் ஒன்று. பகிரங்கமாகவே வெவ்வேறான கருத்துகளை வெளியிடுவதை, அரசாங்கம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

பெறுமதிசேர் வரி விவகாரமாக இருக்கலாம், சர்வதேச நீதிபதிகள் விவகாரமாக இருக்கலாம், அதிகாரப் பரவலாக்கமாக இருக்கலாம், அரசாங்கத் தரப்பிலிருந்து 4 அல்லது 5, வெவ்வேறான கருத்துகள் வழங்கப்படும். ஆகவே, அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாது. உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்ளாமல், முறையான விமர்சனங்களை முன்வைக்க முடியாது. அந்த நிலையே, இங்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை சுற்றுலாத்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், “டச்சுக் காலத்தின்போது, புகையிலைப் பயிர்ச்செய்கைக்காக, தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில், தமிழர்களே பிரதானமாக வசிக்கிறார்கள்” என்று, புதிய வரலாறொன்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, 17ஆம் நூற்றாண்டில், புகையிலைச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் தமிழர்கள் என, இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளமொன்று தெரிவித்தது.

இந்தத் தகவலுக்கு சமூக ஊடக இணையத்தளங்களில் எழுந்த கடுமையான எதிர்ப்புக் காரணமாக, அது (தற்போதைக்கு) நீக்கப்பட்டுள்ளது. புதிய வடிவில், புதிய வரலாறொன்று, விரைவிலேயே வரலாம். 

இவ்வாறான நிலைமைகள், தமிழருக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் போன்றன ஏற்படுத்தப்படுமாயின், ஏராளமாகப் போராட வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகின்றன. எனவேதான், அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதாக இருந்தால், கடுமையான திட்டமிடல்கள் அவசியமாகின்றன.

அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் நம்பியிருந்தால், எதுவுமே நடக்காது. அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மீது, புகழாரம் சூட்டினார்.

அவரது பாராட்டுக்கான பிரதான காரணமாக, தங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, சமஷ்டியை அவர் வலியுறுத்தவில்லை எனவும் இலங்கையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்படுகிறது. 

இதன் உண்மைத்தன்மை குறித்து, தெரியாது. ஆனால், அமைச்சரின் இந்தக் கருத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அறச்சீற்றம் அடையப்பட்டதாகத் தெரியவில்லை. 

தமிழர்கள் தெரிவுசெய்தவர்கள் இவ்வாறு ஒருபக்கமாக இருக்க, அமெரிக்க மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரும், இவ்விடயத்தில் முக்கியமான தாக்கத்தைச் செலுத்தவுள்ளார்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டை விடுவிக்குமாறு, ஜனவரி 20ஆம் திகதி, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு, ஜனாதிபதி சிறிசேன, கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அது தொடர்பாக ஆராய்வதற்கு, அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐ.அமெரிக்கா மீது எவ்வாறான விமர்சனங்கள் காணப்பட்டாலும் அதன் உண்மை நோக்கங்கள் பற்றிய கேள்விகள் இருந்தாலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை மீதான அதிகமான அழுத்தத்தைப் பிரயோகித்தமைக்கு, அந்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது.

இராஜாங்கச் செயலாளராக ஹிலாரி கிளின்டன் இருந்தபோது, இலங்கை மீதான தீர்மானங்கள், கடுமையாகக் கொண்டுவரப்பட்டன. அவர் ஜனாதிபதியாக வந்தால், இலங்கைப் பிரச்சினை தீருமென்ற வகையில், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், அவர் தெரிவாக வேண்டுமென தேங்காய் உடைத்தமை முட்டாள்தமான செயலாக இருந்தாலும், ட்ரம்ப்பை விட, இலங்கைக்கு அதிகமான அழுத்தங்களை ஹிலாரி வழங்கியிருப்பார் என்பதை மறுக்க முடியாது.

எனவே, ட்ரம்ப்பின் அரசாங்கம், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆபத்துக் காணப்படுகிறது. அவ்வாறான மென்மையான போக்கைக் கடைப்பிடித்தால், தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான சர்வதேச அழுத்தங்கள் குறைவடைய வழிவகுக்கும்.

எனவே, மார்ச்சில் இடம்பெறவிருக்கின்ற இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்காக, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல்வாதிகளுக்குமான அழுத்தத்தை, இப்போதிருந்தே வழங்க ஆரம்பிப்பது அவசியமானது.

அத்தோடு, அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடுகளை, சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தி, இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அழுத்தங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. சர்வதேச அழுத்தம் என்பது இல்லையென்றால், இப்போதைய அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கத்துக்குமிடையில் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை, மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .