2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அச்சத்தில் விவசாயிகள்

George   / 2017 ஜனவரி 17 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில், கண்ணீர் விடும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மன்னார், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள விவசாயிகள், கட்டுக்கரை குளம் மற்றும் சிறு குளங்களை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் விவசாயிகள் மத்தியில் காணப்பட்டது.

எனினும், தற்போது மழை பெய்யாத நிலையில் குளங்களில் உள்ள நீரும் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. இதனால், விவசாயிகள் தமது நெற்பயிர்களுக்கு போதிய அளவு நீரை பெற்றுக்கொள்வதில் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தாழ்வான பிரதேசங்களில் வரட்சி பிரச்சினையை ஈடு செய்யக்கூடிய வகையில் ஓரளவு நீர் உள்ள போதும், பல ஏக்கர் கணக்கில் விவசாயத்தை மேற்கொண்டுள்ள விவசாயிகள், நீரின்றி தமது நெற்பயிர்கள் வரட்சியினால் கருகுவதை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

விவசாய செய்கை அழிவடைவதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், பெரும்பாலான விவசாயிகள் தமது விவாசாய நிலங்களுக்கு வருவதில்லை என  அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், வசதியுள்ள சில விவசாயிகள் அடி பைப் (டியூப்வெல்) மூலம் நீரைப் பெற்று நெற்பயிர்களுக்கு நீர்பாச்சுகின்ற போது, அதனை அமைக்க  ஒரு இலட்சம் ரூபாய் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்படுவதால் வறுமையில் வாடும் பல விவசாயிகளால் அதனை அமைக்க முடியவில்லை.

வங்கிகளில் கடன் பெற்று, கால்நடைகளை விற்று,வீட்டுப் பத்திரங்களையும் அடகு வைத்து பணத்தை பெற்று மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்ச்செய்கை, வரட்சியினால் அழிவடையும் நிலையில், தாம் பட்டினிச்சாவை எதிர் நோக்கியுள்ளதால், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .