2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சம்பூர் மீள்குடியேற்றம்: வீடற்றவர்களாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படும் மக்கள்

Administrator   / 2017 ஜனவரி 18 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கந்தையா இலட்சுமணன்

பெயருக்கு மண்வெட்டி, கத்தி, சமையல் உபகரணங்கள் என அடிப்படையான பொருள்களுக்காக 13 ஆயிரமும் தகரம், சீமெந்து, மண் கொள்வனவுக்கென 25 ஆயிரமும் கொடுத்துவிட்டு, முற்று முழுதாக அழிக்கப்பட்ட சம்பூரில் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று எப்படி அரசாங்கம் நினைக்க முடியும் என்பது சம்பூர் மக்களின் மிகவும் உருக்கமான கேள்வி.  

எதுவுமற்றவர்களாகத் தங்களது பிரதேசத்தில் இருந்து துரத்தப்பட்ட சம்பூர் மக்கள், பத்து வருடங்களாக உறுதியுடன் போராடித் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருக்கின்றனர்.  

 ஆனால், அவர்கள் எதுவும் அற்றவர்களாகத் திரும்பிய போதும், சாதாரண இடம்பெயர்வுக்கான மீள்குடியேற்ற அமைச்சின், அடிப்படைகளின் கீழே உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

2015, ஓகஸ்ட் மாதம் தொடங்கி, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தி செய்யப்பட்ட சம்பூர் மீள் குடியேற்றத்தில், ஒரு வருடம் கடந்த பின்பும் இன்னும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன என்பது மாத்திரமே வெளிப்படையான உண்மையாகும்.  

இடம் பெயரும்போது 840ஆக இருந்த குடும்பங்கள் 10 வருடங்களின் பின்பு, மீள்குடியேறிய போது 906 ஆக அதிகரித்திருக்கின்றது.  

தற்போது அனைத்துக் குடும்பங்களையும் மீள்குடியேற்றியிருந்தாலும் கூட, அரசாங்க ஊழியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

வழங்கப்படுகின்ற எந்தவொரு நிவாரணமும் அரசாங்க ஊழியர்களுக்கு கிடையாது என்ற வகையில் அரசாங்க அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். அதற்கு அவர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.   

எனவே, இது சம்மந்தமாக அரசாங்க உயர்அதிகாரிகள், அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள் உட்படப் பலரிடம் கூறியும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  

குறிப்பாக, மீள்குடியேற்ற அமைச்சுக்கு இது சம்மந்தமாக நேரடியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான முழுப் பொறுப்பும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு இருக்கின்றது என்பது தற்போது சம்பூரின் நிலைப்பாடாகும். அனைவருக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அரசாங்கம் வரவேண்டும்.

அதற்கான அழுத்தங்களைத்  தமிழ்த் தரப்பு உட்பட அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வழங்கவேண்டும் என்று சம்பூர் மக்கள் விரும்புகின்றார்கள்.  

மீளக்குடியேறிய 906 குடும்பங்களில், இதுவரையில் நிரந்தர வீடுகள் என்று 150 வீடுகள் மாத்திரம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரம், 350 தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 400 க்கும் குறையாத குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் கூட வழங்கப்படவில்லை.   

அதுமட்டுமல்லாது, 110 அரசாங்க ஊழியர்களின் 16 குடும்பங்களுக்கு மாத்திரமே இதுரையில் மலசலகூட வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஏனையோருக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு மிகப் பெரிய குறைபாடாக இருக்கின்றது. அதாவது அரசாங்க ஊழியருக்கு வாழ்வாதாரம் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதாகும்.  

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல் எனும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, சம்பூர் பிரதேச மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.   

அவர்கள் அக்காலத்தில் அனுபவித்த துன்பங்கள் சொல்லில் அடங்கா. சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து கதிரவெளி, வாகரைக்கு ஊடாக மட்டக்களப்புக்குச் சென்றனர், மட்டக்களப்பில் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 2009, டிசெம்பர் வரை அங்கிருந்த பின்னர், மூதூருக்கு அழைத்துவரப்பட்டு, கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய நான்கு முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.  

நலன்புரி நிலையத்துக்குச் செல்லும் அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் கடந்த கால யுத்தம் காரணமாகச் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது சொந்த இடங்களிலும் குடியமர்த்தப்படும்போது, நாங்கள் எங்களது இடங்களில் குடியமர முடியாதா என்ற ஒரேயொரு கேள்வியையே கேட்டுவந்தார்கள்.  

இதற்கு, அவர்கள் முன்வைத்த ஆணித்தரமான கருத்தாக, சம்பூரில் 45 இற்கு மேற்பட்ட குளங்கள், 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அவற்றை எம்மால் இழக்க முடியாது, அத்துடன் எங்களுடைய தொழில் நிலங்கள், எமது தொழில் என்பனவும் வேறு இடங்களுக்குச் செல்வதனால் பாதிக்கப்படும். எனவே, எங்களுடைய பிரதேசத்திலேயே குடியமர ஏற்பாடு செய்யுங்கள் என்பதாக இருந்தது.  

உணவு, இருப்பிடம், கலாசாசரப் பிரச்சினை, மருத்துவச் சிக்கல்கள், சுகாதாரச் சிக்கல்கள் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் சம்பூர் மக்களின் பிரச்சினைகள் விரைந்து தீர்த்து வைக்கப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன என்பதே கருத்தாகும்.  

சம்பூர் பிரதேசக் கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள், மீள்குடியேற்றம் செய்யப்படாமையால், சம்பூரில் இயங்கிய பல அரசாங்க அலுவலகங்களும் பிற இடங்களில் இயங்குகின்றன. சில அரசாங்க அலுவலகங்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. சில அரசாங்க அலுவலகங்கள் மூடப்படும் நிலைக்குள்ளாகியிருந்தன.  

 சம்பூர் கமநல சேவைகள் நிலையம் அயற் கிராமமான கட்டைப்பறிச்சான் கிராமத்திலும், சம்பூர் பிரதேசத்துக்கான விவசாயிகள் முன்மாதிரி செய்கை நிலையம் கட்டைப்பறிச்சான் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலும் இயங்கிவருவதுடன், பாடசாலைகள் ஏனைய சுகாதார நிலையங்கள் கூட வேறு இடங்களில் இயங்கிவருகின்றன. 

அத்துடன், சம்பூர் மற்றும் அதனை அண்டியுள்ள கிராமங்களிலிருந்து யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்டு, நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் அனைத்தும் பூர்வீக காணிகளில் மீளக்குடியமர்த்தப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது போல், நவரெட்ண புரத்திலிருந்து மீள் குடியேற்றம் 2013 பெப்ரவரி மாத இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.  

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கை இந்தியா, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையே கைச்சாத்தானதைத் தொடர்ந்து, கிழக்குக்கு விஜயம் செய்த இந்தியத் தூதுவர், குறித்த பிரதேச மக்களின் உத்தரவாதம் இல்லாமல் தாம் அப்பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தினை அமைக்கப்போவதில்லை என்ற தொனிபட 2012 வருட இறுதியில் தெரிவித்திருந்தார். 

 30 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் நடைபெற்ற யுத்தம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுத் துறைகளிலும் பல்வேறு பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஈடு செய்து நாட்டை முன்னேற்றமான அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்காக மக்கள் முதல் அதிகாரிகள், அமைச்சர்கள், அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

தமது சொந்த இடங்களுக்கே, தாம் செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்ததன் பயனாக நவரெட்ணபுரம் மக்கள், அடுத்ததாக சீதனவெளி, கட்டைபறிச்சான் என்று சம்பூர் மக்களும் மீள்குடியேற்றப்பட்ட கிழக்கில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது,  

2006ஆம் ஆண்டு, இடம் பெயர்ந்த சம்பூர் மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் அப்படியே விட்டுவிட்டே வந்திருந்தனர். சம்பூரில் கடற்படை முகாமுக்கென சுவீகரிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி நலன்புரி நிலையங்களில் இருந்தபடியே, இந்தப் பிரதேச மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  

இதனைச் செவிமடுத்த அரசாங்கம் கடற்படை முகாமை வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கும் காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கும் முடிவு செய்து அறிவித்தது. அப்போது கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,055 ஏக்கர் காணிகள் இருந்தன. 

இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியன்று சம்பூருக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 818 ஏக்கர் காணிகளை விடுவித்தார். 

இரண்டாம் கட்டமாக மார்ச் 2016 இல் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்  டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான க. துரைரெட்ணசிங்கம், அப்துல்லா மஃரூப், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான துரைராசசிங்கம், சி. தண்டாயுதபாணி உட்பட்ட, அணியினரது பிரசன்னத்துடன் காணிகள் விடுவிக்கப்பட்டன.  

சம்பூர் மக்களின் இடம்பெயர்வு சார் விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் என்ற வகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் க.நாகேஸ்வரன் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “கடந்த ஒருவருட காலமாக வாழ்வாதாரத்துக்கான எதிர்பார்ப்புடன் சம்பூர் மக்கள் இருந்து வருகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாகத் தற்காலிக இருப்பிடம் அனைவருக்கும் வேண்டும். மக்கள் இது தொடர்பில் போராட்டங்களும் நடாத்தியிருக்கிறார்கள். இருந்த பொழுதிலும் கூட, அரசாங்கம் இது தொடர்பில் கண்டும் காணாமல் இருக்கின்றது. அது மட்டுமல்லாது, சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பிரசன்னம் இங்கு இல்லாதிருப்பது ஒரு பெரிய குறையாக இருக்கின்றது.  
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையில், நாங்கள் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். அவர்கள் தமது பிராந்தியத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதி போதாத காரணத்தினால் இவற்றை எங்களால் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார்கள்.   
அரசாங்கம் என்ற ரீதியில் யுத்தத்தில் முற்றுமுழுதாகத் தரை மட்டம் ஆக்கப்பட்ட கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிகவும் காலம் தாழ்த்துகிறது பாராமுகமாக இருக்கின்றது என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.   

மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களது பயிர்ச்செய்கை நிலங்களைத் துப்புரவு செய்வதற்கு வன இலாகா இடைஞ்சலாக இருக்கிறது. இதற்கு ஒரு காலக்கெடுவாயினும் விதித்து அவர்கள் காணிகளைத் துப்பரவு செய்வதற்கு வழி விடப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். 

நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டின் முக்கிய அங்கமாக இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்து விதமான இழப்புகளையும் மீளக்கட்டியெழுப்புதலாகும். இந்த மீளக் கட்டியெழுப்புதல் என்பது வசதி படைத்தவர்களாக இருந்தவர்களைப் பிச்சைக்காரர்களாக்கிவிட்டு, அந்தப் பிச்சைக்கார நிலையிலேயே வைத்திருப்பதா என்பதுதான் கேள்வி. கேள்விகளை மாத்திரமே தோற்றுவித்துவிட்டு பதில்களைத் தேடமுடியாத நிலைமையில் சம்பூர் மக்கள் வாழுகின்றார்கள்.  

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் செப்பனிடப்பட்ட நான்கு கிலோமீற்றர் மூதூர் பிரதேசத்துக்குட்பட்ட நாவலடி - சம்பூர் வீதி, மக்கள் பாவனைக்காக கடந்த டிசெம்பர் 13ஆம் திகதி திறக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், ”நல்லாட்சி அரசாங்கம் ஏற்பட்ட பிறகு மீள்குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 

எந்த ஒரு மாவட்டத்திலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக நடைபெற்று விட்டதாகக் கூறமுடியாது. 30 வருடமாக இந்த வன்முறை இருந்து வந்திருக்கிறது.

இனி நமக்கு வன்முறைகள் தேவையில்லை. சம்பூரில் காணிகள் பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் வேலைகளை ஆரம்பிக்கின்ற நிலையில் அவர்களது வேலைகள் நிறுத்தப்பட்டு, மக்கள் அந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.   

இன்னும், 500 ஏக்கர் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அனல் மின் நிலைய அமைப்புத் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. இப்போது மக்களுடைய அப்படை வசதிகளை ஏற்படுத்துவது, நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்திருந்தார்.

இவைகள் எப்போது நிறைவு பெறும் என்பது அவருடைய உரையில் தௌிவில்லாமல் இருக்கிறது.  
அதேநேரத்தில், கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி , “மார்ச்சில் நடைபெற்ற இரண்டாம் கட்டத்தில் குடியமர்ந்த மக்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

அவர்களுக்கு பிரயோசனமான தேவைகளைச் செய்து கொடுக்க முடியாதபடி, எங்களுடைய மாகாண சபையினுடைய நிதித் தட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இந்த மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்கான நிதிகளை அங்குமிங்குமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். சம்பூரில் மீள் குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர வீடுகளுக்காக வழங்கப்பட்ட உதவிகளும் திருப்தியளிப்பதாக இல்லை” என்று கூறுகிறார்.  

அண்மையில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டகக குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் 4,464 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு 2,473 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக 14 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 171 உட்பாதைகளும் 29 பாடசாலைகளும் 23 வைத்தியசாலைகளும் 41 முன்பள்ளி பாடசாலைகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படும்.

1980 காலப்பகுதியில் வடமாகாணத்திலிருந்து மொத்த தேசிய உற்பத்திக்கு ஏழு சதவீதமான பங்களிப்பு கிடைக்கப் பெற்றது. எனினும், 2010 ஆம் ஆண்டளவில் இது மூன்று சதவீதமாகக் குறைவடைந்தது. 2015 ஆம் ஆண்டளவில் இந்தப் பங்களிப்பை 15 சதவீதம் வரை அதிகரிக்க முடிந்துள்ளது. 

இரண்டு மாகாணங்களிலும் 9 பாரிய அளவிலான நீர்ப்பாசன செயற்றிட்டங்களும் 45 சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களும் புனரமைக்கப்படும். இதன் மூலம் கைவிடப்பட்டுள்ள காணிகளில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்காக விவசாயிகளை ஊக்குவிக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  

வருடத்தில் இவ்விரு மாகாணங்களில் 11 மாவட்டங்களிலும் வீடமைப்புத் திட்டத்துக்காக 8,634 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 25 ஆயிரத்து 215 கைதிகளுக்காக 9,607 புனர்வாழ்வளிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைதிகளுக்கு இடையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையைத் தடுப்பதற்காகத் தொலைபேசிச் சமிக்ஞைகளைத் தடுக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  

சாதாரண மக்களைப் போலல்லாமல் அரசாங்கமானது சகல விடயங்களையும் உடனடியாகவும் அதிகமாகவும் செய்து கொடுக்க வேண்டும். அப்படியிருக்க வீதிகள் அமைப்பது ஏனைய அடிப்படை வசதிகள் முக்கியமாக இருந்தாலும், நிரந்தரமான இருப்பிடம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.   

கடந்த 10 வருட காலமாக, அகதி முகாம்களில், நரக வாழ்க்கை வாழ்ந்தது போல, சம்பூரில் தமது சொந்த நிலத்திலும் அகதிகளாகவே வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பூர் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்புக்கள் யாவும், ஐ.நாவின் பரிந்துரைக்கு அமைவாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைமாறு கால நீதி தொடர்பான வேலைத்திட்டங்களில் இழப்பீடு வழங்கல் எனும் பொறிமுறைக்கு அமைவாகவும், சம்பூர் பிரதேசத்தினை ஒரு ‘ மாதிரிக் கிராமமாக’ உருவாக்குவேன் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குக்கு இணங்கவும், ‘இழந்தவற்றை மீள வழங்கல் அல்லது சீரமைத்தல்’ பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.   

கடந்த 2006 ஆம் ஆண்டு முழுச் சொத்துடமைகளையும் இழந்து, இடம்பெயர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள், புதிய குடும்பங்கள் என வேறுபாடின்றி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல் குறிப்பாக வீடு, குடிநீர், மலசல கூடம் மற்றும் வாழ்வாதாரம் வழங்கல் என்பவை நடைபெறவேண்டும் .

யுத்த காலத்தில் மரணித்தவர்கள்,காயப்பட்டவர்கள் ஆகியோருக்கு இழப்பீடுகளை வழங்கல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மையினை உரிய நீதிப்பொறிமுறையூடாக வகை கூறல் என்கின்ற முக்கியத்துவம் மிக்க நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் பெருந்தொகுதி மக்கள் யுத்தத்தின் முழுமையான வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கையில் வெளியே பூசி மெழுகிப் பேசுவதில் என்னபயன்?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .