2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம்

Administrator   / 2017 ஜனவரி 23 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே. அஷோக்பரன் LLB (Hons)  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -  76)

யாழ்ப்பாணத்தில் 1981 மே 31 இல் தொடங்கிய யாழ். பொது நூலக எரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கெதிரான கலவரம், ஆகஸ்ட் மாதத்தில் நாடெங்கிலும் பரவலடைந்திருந்தது.   

எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றியதோடு, நாட்டிலே பேரினவாத வெறியைக் கட்டவிழ்த்து விட்டிருந்த ஜே.ஆர் அரசாங்கத்துக்கு ஒரு சங்கட நிலை உருவாகிக்கொண்டிருந்தது.  

 அந்நிலை, ஜே.ஆர் அரசாங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு தற்காலிகமாகவேனும் சமரசமொன்றைச் செய்துகொள்ள வேண்டிய ஒரு சூழலை உருவாக்கியது.   

இலங்கையில் பொதுவாக்குரிமை (வயது வந்த சகலருக்கும் இன, மத, மொழி, சாதி, கல்வித்தகைமை, தொழில், பால் என எவ்வேறுபாடுமின்றி வாக்குரிமை) டொனமூர் அரசியலமைப்பின் படி 1931 இல் இலங்கையின் அன்றைய முக்கிய தலைவர்கள் பலரினதும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.   

பிரித்தானியாவில் பொதுவாக்குரிமை கொண்டுவரப்பட்டு வெறும் மூன்று வருடங்களுக்குள் இலங்கையிலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையில் பொதுவாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பொன்விழாவினை, அரசாங்கம் கொண்டாடியதன் ஓர் அம்சமாக பொதுநலவாயத்தின் தலைவியான எலிசபெத் மஹாராணியார், 1981 ஒக்டோபரில் விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தார்.

இது எலிசபெத் மஹாராணியார், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பமாக அமையவிருந்தது. இந்தச் சூழலில், நாட்டில் ஏற்பட்டிருந்த கலவர நிலையையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன், தமிழ் மக்களின் எதிர்ப்பலையையும் தற்காலிகமாகவேனும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்கு இருந்தது.   

தந்திரோபாயத்தில் வல்லவரான ஜே.ஆர், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடிவெடுத்தார்.  

பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருதல்  

தமிழரின் தாயக பூமியில் கலவரத்தை நடத்தி, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, இனவாத வெறியை நாடெங்கிலும் பரப்பிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவருவது சிக்கலான விடயமென்பதை ஜே.ஆர் அறிவார்.  

 ஆனால், பேச்சுவார்த்தைகளைத் தவிரவும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் வேறு வழியில்லை என்பதையும் ஜே.ஆர் புரிந்திருந்தார். 

 ஒரு புறத்தில் தமிழ் இளைஞர்கள், ஆயுதக்குழுக்களாக இயங்கிக்கொண்டு வன்முறைப் பாதையில் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை’ நிறைவேற்ற பயணித்துக்கொண்டிருந்தனர்.   

அதேபொழுது, அதே ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு தேர்தலில் மக்கள் அங்கிகாரம் பெற்றவர்கள் எதையும் செய்ய முடியாத, இக்கட்டான சூழலில் சிக்கி, தமிழ் மக்களது, குறிப்பாக தமிழ் இளைஞர்களது விசனத்தை எதிர்கொண்டிருந்தனர்.   

இந்நிலையில் பேச்சுவார்த்தை என்பது தேர்தலில் மக்கள் அங்கிகாரத்தைப் பெற்றவர்கள், அரசியலை முன்கொண்டு செல்வதற்கு நிச்சயம் வழிவகைசெய்யும். ஆனால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வருவது யார்?   

இதற்காக ஜே.ஆர் உடனடியாக அணுகியது, சா.ஜே.வே. செல்வநாயகத்தின் மருமகனும் இலங்கையில் குறிப்பிடத்தக்க அரசறிவியல் பேராசிரியர்களுள் ஒருவருமான ஏ.ஜே.வில்சனை என்பவரையாகும்.  

 அப்போது ஏ.ஜே. வில்சன் வெளிநாட்டிலிருந்தார். ஜே.ஆர் அவரோடு தொடர்புகொண்டு அவரை இலங்கைக்கு வரவழைத்ததோடு, அவரினூடாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவந்தார்.   

பேச்சுவார்த்தைகள் தொடங்கின  

ஜனாதிபதி மாளிகையில் ஜே.ஆர், தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.  

பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் மதியுரையாளராகக் கலந்துகொண்டார். நாட்டில் நிலவிய பதற்ற சூழலை உடனடியாக தணிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்ததால், அவர்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் அக்கறையோடு கலந்துகொண்டதாகவே பலரும் குறிப்பிடுகிறார்கள்.   

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது, மே - ஜூன் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பொலிஸ் வன்முறை வெறிச்செயலை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்; யாழ். வன்முறைக்கு காரணமான பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்; தொடர் வன்முறைகளைத் தடுக்க ஊர்காவற்படை அமைக்கப்பட வேண்டும்; வடக்கு மற்றும் கிழக்கில் 75சதவீதமான பொலிஸார் தமிழர்களாக இருக்க வேண்டும்; நிர்வாக அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளிடம் பரவலாக்கப்பட்டு, அவை வினைத்திறனுடன் அக்காரியத்தை ஆற்ற வழிசமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்தது.   

உண்மையில், இந்தக் கோரிக்கைகளில் நியாயமற்ற கோரிக்கை என்று சொல்வதற்கு எதுவுமில்லை. சர்வதேச விசாரணை என்பதைத் தவிர ஏனையவை தொடர்பில் ஜே.ஆர் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. ஒருவேளை சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டால், அது தெற்கிலே தன்னுடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என ஜே.ஆர் அச்சங்கொண்டிருக்கலாம்.  

ஏனென்றால், தேர்தலைப் பற்றி யோசிக்க வேண்டிய தேவையும் ஜே.ஆருக்கு ஏற்பட்டிருந்தது. 1982 இல் நடப்பு நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது. ஆகவே, வாக்குவங்கி அரசியல் பற்றியும் ஜே.ஆர் அக்கறைப்பட வேண்டியது அவசியமாகியது.   

சர்வதேச விசாரணை தவிர ஏனையவற்றுக்குச் சாதகமான சமிக்ஞையை ஜே.ஆர் அரசாங்கம் வழங்கியது. 1981 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர்கள் சந்தித்து, அண்மை மாதங்களில் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதம், சொத்து அழிப்பு, இனமுரண்பாடு பற்றிப் பேசியதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கியஸ்தர்களைக் கொண்ட உயர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் முரண்பாடுகள் பற்றிப் பேசவும், அமைதி வழியில் தீர்வுகாண்பதற்குமான செயற்பாடுகளை இக்குழு முன்னெடுக்கும் என்றும், அனைத்துத் தரப்பும் நாட்டிலே வன்முறையை முற்றாகத் தடுத்து நிறுத்த ஆதரவுதர வேண்டும் என்றும், இவற்றுக்கு மேலதிகமாக மாவட்ட அபிவிருத்தி சபைகள் முறையாகவும். திருப்தியாகவும் இயங்க ஆதரவு தருமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.  

‘தனிநாடு’ எனும் பகட்டாரவாரச் சொல்லாட்சி (rhetoric)  

இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் அநேகமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்தைமையினால், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான ‘தனிநாட்டுக்’ கோரிக்கையை ஒத்திவைக்க இணங்கியதுடன், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதை நிறுத்தவும், தொடர்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்தக்கொண்டதாக தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகின்றார்.   

அவர் தனது நூலில், இதனைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் (தமிழரசுக் கட்சிக் காலம் உட்பட்ட) 30 வருட அரசியலில் மிகக் கீழான நிலை என்று விமர்சிக்கிறார். தமிழ் மக்கள் வழங்கிய மக்களாணையை, சிங்கள ஏகாதிபத்தியத்திடமும் தமிழ் ‘பூர்சுவா’ அரசியலிடமும் சரணடையச் செய்துவிட்டார்கள் என்று காட்டமாக அவர் விமர்சிக்கிறார்.  

ஆனால், இந்த இடத்தில் நாம் முக்கியமான ஒரு விடயத்தை நோக்க வேண்டும். ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்பது இயலாமையின், நம்பிக்கையீனத்தின் இறுதியில் பிறந்ததொன்றாகும்.

அது ,ஒரு பகட்டாரவாரச் சொல்லாட்சியாக (rhetoric) முன்வைக்கப்பட்ட ஓர் இலட்சியப் பொருளாகவே அன்றிருந்தது. ஆனால், அதனை அடைவதற்கான திட்டமோ, உபாயமொன்றோ தமிழ் தலைமைகளிடமோ, மக்களிடமோ இருக்கவில்லை.  

அதன் பின்னர், தேர்தலில் கூட, மக்களின் வாக்குகளைப் பெறத்தக்க பகட்டாரவாரச் சொல்லாட்சியாக ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும்’ ‘தனிநாட்டுக்’ கோரிக்கையையும் தமிழ்த் தலைமைகள் பயன்படுத்தினார்களேயன்றி, அதன் வழி பயணிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்தே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

 ‘தனிநாடு’ ஸ்தாபிப்பதற்கான இரகசியத் திட்டம் தம்மிடம் இருக்கிறது என்று அவர்கள் கூறிக்கொண்டாலும், மறுபுறத்தில் அரசாங்கத்துடனான சமரசத் தீர்வுப் போக்கினை நோக்கியே அவா்கள் பயணித்தார்கள்.   

இரகசியத் திட்டம், இரகசியமாகவே இருந்து வந்தது. ஆனால், சில இளைஞர் ஆயுதக் குழுக்கள் - ‘தனிநாடு’ என்ற நிலைப்பாட்டைத் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கினார்கள்.   

இதுதான், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு மிகுந்த சங்கடத்தை வழங்கத் தொடங்கியிருந்தது. ஆரம்பத்தில் தமிழ் மக்களிடம் இந்த ஆயுதக் குழுக்கள் பெரும் ஆதரவினைப் பெறாவிட்டாலும், 1981 வன்முறைகள் தமிழ் மக்களை ஆயுதக் குழுக்களின்பால் திசைதிருப்பின என்ற வரலாற்றை யாரும் மறுக்க முடியாது.  

 இந்தச் சூழலில் தம்முடைய அரசியலைத் தக்க வைக்க வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு இருந்தது. அரசியல் ரீதியாகப் பார்த்தால், அவர்கள் சிங்கள அரசியலுடன் மட்டுமல்ல, வளர்ந்து வரும் தமிழ் ஆயுதக் குழுக்களுடனும் மல்லுக்கட்டவேண்டிய அரசியல் இரட்டைப் போட்டி நிலையைச் சந்தித்துக்கொண்டிருந்தார்கள்.   

ஆகவே, பேச்சுவார்த்தை மற்றும் அமைதிவழியில் ஏதாவது ஒரு சிறிய விடயத்தையேனும் சாதித்தால், அதனைக் கொண்டு இணக்கப்பாட்டு வழி அரசியல் மீது தமிழ் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.   

இதனால், அவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தொடர்ந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், “தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பாதி வழி வருவதற்குத் தயாராக இருக்கிறது, மீதிப் பாதி வழி வர அரசாங்கம் தயாராக வேண்டும்” என்று கூறினார்.   

மகாராணி வந்தார், சென்றார்  

ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருந்த போதுதான், பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின் இலங்கை விஜயம் நடைபெற்றது.   

இது இலங்கைக்கு எலிசபெத் மகாராணியார் விஜயம் செய்யும் இரண்டாவது தருணமாகும். 1981 ஒக்டோபர் இறுதியில் இலங்கை வந்த எலிசபெத் மகாராணியாருக்கு மிகப்பெரிய வரவேற்பை இலங்கை அரசாங்கம் அளித்தது.

பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார், அநுராதபுரத்தின் மகாபோதி மரத்தைத் தரிசிக்கவும் கண்டி, தலதா மாளிகையைத் தரிசிக்கவும் விக்டோரியா அணைக்கட்டைப் பார்வையிட்டவும் அழைத்துச் செல்லப்பட்டார்.   

 ஆனால், அரசின் பொலிஸ் படையின் வன்முறை, கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமிழர் பகுதிகள் மீது அவர் கண்பார்வை கூடப் படாத வகையில் அவரது விஜயம் அமைக்கப்பட்டது என்று தனது நூலில் சச்சி பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.   

1981 மே - ஜூன் வன்முறைகள் இலங்கைப் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தின் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதொரு வெறிச்செயல் என்பதை இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.   

அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான காமினி திசாநாயக்க இதனை ஒப்புக்கொண்டிருந்தார். “சில இழப்புக்களுக்கு பொலிஸாரே காரணம்... நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இல்லம் பொலிஸாரினாலேயே எரிக்கப்பட்டது என்பதை நாம் மறுக்கவோ, இந்தக் கருத்துடன் முரண்படவோ இல்லை... நாம் பொலிஸாரின் இவ்வகை நடவடிக்கைகள் பற்றியும், அவர்களின் உளவியல் நிலை பற்றியும் அக்கறை கொண்டுள்ளோம்... பயங்கரமான சூழல் ஒன்று நிலவியது... பொலிஸாரை முகாமுக்குள் அடக்க முடியாது போனது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

பிள்ளையையும் கிள்ளிவிடுவோம் தொட்டிலையும் ஆட்டிவிடுவோம்  

பிரித்தானிய மகாராணியாரின் விஜயத்தை வெற்றிகரமாக, எவ்வித அசம்பாவிதமும் இன்றி, நிறைவேற்றியிருந்தாலும், 1981 கலவரங்களால் இலங்கையின் பெயர் சர்வதேச அளவில் எதிர்மறையானதொரு நிலையை அடைந்திருந்தது.   

இதற்குப் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் செயற்பாடுகளும் முக்கிய காரணம். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளை சர்வதேசமெங்கும் அவர்கள் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

தமிழ் மக்களுக்கு உரிய நீதியையும் நியாயமான அரசியல்த் தீர்வையும் வழங்குவதனூடாக இலங்கை அரசாங்கம், இலங்கை மீதான எதிர்மறை விம்பத்தை சரிசெய்திருக்க முடியும்.   

ஆனால், அதற்குப் பதிலாகக் குறுக்கு வழியான பிரசார வழிமுறையை இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது. சர்வதேச அளவில் பிரபலமான மக்கள் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமொன்றுடன் பெருந்தொகையொன்றைச் செலவழித்து மேற்குலகில் இலங்கைக்கு சாதகமான பிரசாரத்தை முன்னெடுத்தது.   

இதற்காகப் பிரதமர் பிரேமதாசவும் பிரசாரத்தின் ஒருபகுதியாக லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 

ஒருபுறம், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை, மறுபுறம் சர்வதேச அளவில் பிரசார வியூகம், இன்னொருபுறத்தில் இலங்கையில் தனது பேரினவாத அமைச்சர்களைக் கொண்டு பேரினவாத அரசியலை முன்னெடுத்தல் - இது தான் ஜே.ஆர்!   

( அடுத்த வாரம் தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .