Princiya Dixci / 2017 ஜனவரி 25 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்துக்குக் கூட்டமைப்பு சிகப்பு எச்சரிக்கை
‘உண்ணாவிரதமிருப்போர் இறந்தால் பொறுப்பை ஏற்கவும்’
காணாமற் போனவர்களுக்கு நடந்தது என்ன?
12,000 போராளிகளை விடுவிக்க முடியுமாயின் 100 அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது?
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் பெரும் பங்கை வகித்தனர். எனினும், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பில் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது. சம்பந்தன் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அனைத்தையும் சகிக்கும் என, அரசாங்கம் நினைத்துவிடக்கூடாது” என அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன், அரசாங்கத்தை எச்சரித்தார்.
“தங்களுடைய உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டுமெனக் கோரி, வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் காணாமற்போனோரின் உறவினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கத்துக்கான ஆதரவை கூட்டமைப்பு விலக்கிக் கொள்ள நேரிடும்” என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில், நேற்று நடைபெற்ற மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றிய அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழுவின் (கோப்) விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தனது உரையில், இரண்டு சந்தர்ப்பங்களில் சபையில் கேள்வி எழுப்பிட்டு, பதிலுக்காக அவர் காத்திருந்த போதும், இரண்டு பக்கங்களும் கடுமையான அமைதி நிலவியது. அக்கேள்விக்கு, அப்போது சபையிலிருந்த எவருமே பதிலளிக்கவில்லை.
தனது உரையின் போது, காணாமற்போனோர் உயிருடன் இருக்கின்றனர் அல்லது இல்லை, அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர் என, இச்சபையில் இருக்கும் எவராவது ஒருவரால் எழுந்து நின்று கூறமுடியுமா, எனக்கேட்டார்.
அரசாங்கப் பக்கமும், எதிரணி பக்கமும், எதிரணியில் மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியின் பக்கமும் கனத்த மௌனம் நிலவியது.
“காணாமற்போன தங்களுடைய உறவுகளுக்காக வவுனியாவில், இன்று (நேற்று) இரண்டாவது நாளாகவும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர், பெண்கள், வயோதிபர்கள் ஆவர்.
தற்போது அரசாங்கம் புதியது. ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி ஆகயோர் புதியவர்கள். எனவே, அவர்களுக்கு, காணாமற்போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்பது தொடர்பில் நன்றாகத் தெரியும்.
எனவே, காணாமற் போனோர் உயிருடன் இருந்தால், இருக்கின்றனர் என்றும் இல்லா விட்டால் மஹிந்த அரசாங்கத்தினால் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டு விட்டனர் என்றும் கூறமுடியும். இவ்விடயத்தில் தொடர்ந்தும் பொதுமக்களை ஏமாற்ற வேண்டாம்.
காணாமற்போன தமது உறவுகளை கடந்த எட்டு வருடங்களாகத் தேடிப் பயணிக்கின்றனர். 12க்கும் மேற்பட்ட இடங்களில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால், எந்தத் தகவலும் இல்லை.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை த.தே.கூவின் தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும் சகித்துக் கொண்டிருப்போம் என, அரசாங்கம் நினைத்துவிடக் கூடாது. வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் காணாமற்போனோரின் உறவினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால், அரசாங்கத்துக்கான ஆதரவை த.தே.கூ விலக்கிக் கொள்ள நேரிடும்.
மஹிந்த ராஜபக்ஷவினால், 12,000 முன்னாள் போராளிகளை விடுவிக்க முடியுமானால், மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால், 100 வரையான அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? இந்த அரசியல் கைதிகளை விடுவித்தால், தென்பகுதியில் குழப்பம் ஏற்படும் எனக் கூறப்படுகின்றது.
அப்படியானால் 12,000 புலிகளை, மஹிந்த விடுவித்த போது, ஏன் தென்பகுதியில் குழப்பம் ஏற்படவில்லை” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
அபிவிருத்தி, அரசியலமைப்பு, அரசியல் தீர்வு, காணாமற்போனோரின் பிரச்சினை, அரசியற்கைதிகளின் விடுதலை, வேலைவாய்ப்புகள், 50,000 வீடுகள் என, சகல விடயங்களிலும் இந்தத் தேசிய அரசாங்கத்தினால் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகிறோம்.
வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் கூட நாம் ஏமாற்றப்பட்டு, அது தற்போது மதகுவைத்த குளத்தில் அமைக்கப்பட்டுவருகிறது.
அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியபோதும், எதுவும் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .