Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் எந்தவொரு நாட்டினாலோ, அரசாங்கத்தினாலோ அல்லது சர்வதேச அமைப்பினாலோ அங்கிகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கம் எதுவும், உலகில் எந்தவொரு பகுதியிலும் கிடையாது என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
எனினும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் குழுவொன்று இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பியான உதய கம்மன்பில, நாடுகடந்த தமிழீழம் தொடர்பில் கேள்வியெழுப்பினார்.
“இலங்கைத் தமிழீழம் என்ற பெயரில் தனி நாடொன்று உருவாக்குவதை தமது பிரதான நோக்கமாகக் கொண்ட, சர்வதேச ரீதியாக வியாபித்துள்ள தமிழீழ அரசாங்கம் என்ற பெயரிலான அரசாங்கமொன்றும், 135 உறுப்பினர்களைக் கொண்ட தமிழீழ சட்டவாக்கசபை என்ற பெயரிலான நாடாளுமன்றமும், விஸ்வநாதன் உருத்ரகுமாரன் என்ற நபர் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் பதவிபொன்றும் உள்ளதென்பதை அறிவாரா?;
“அவுஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அரசாங்கங்கள், தமிழீழத்தை சட்ட ரீதியானதொரு நாடாக தமது இணையத் தளங்களில் பகிரங்கப்படுத்தி உள்ளதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.
“திபெத் மற்றும் தமிழீழம் தவிர்ந்த இவ்வாறான நிலத் தொடர்பாற்ற வேறு அரசாங்கங்கள் உள்ளனவா என்பதையும் மேற்படி சட்டவிரோத அரசாங்கம், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முனைப்புடன் இயங்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும் அறியத்தரவும்” என்றும் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர,
“நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று அழைக்கப்படும் அரசாங்கம் எதுவும் கிடையாது. எனினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் நபர்கள் குழுவொன்று இருக்கிறது. இந்த குழுவினரை எந்தவொரு நாடோ, அரசாங்கமோ, ஐ.நா உறுப்பு நாடோ அல்லது சர்வதேச அமைப்போ அரசாங்கமொன்றாகவோ அல்லது நாடுகடந்த அரசாங்கமாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.
அத்துடன், “ஒன்றிணைந்த எதிரணி எனக் கூறிக் கொள்ளும் நீங்கள், எந்தவொரு சட்டரீதியான அங்கிகாரமும் இன்றிச் சுதந்திரமாக செயற்பட்டு வருவதைப்போன்று, உருத்திரகுமாரன் தலைமையில் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நிழல் அமைச்சுகளை நியமித்துச் செயற்படுவதுபோல, அவர்களும் செயற்படுகிறார்கள். எனினும் சட்டரீதியாக அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார்.
அதுமட்டுமல்லாது, ஒன்றிணைந்த எதிரணியினர் ஆட்சியை கைப்பற்ற கனவுகண்டு வருவதைப் போன்று, உருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் குழுவொன்றும் கனவுகண்டுவருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.
“அமெரிக்காவே விடுதலைப் புலிகள் அமைப்பை முதலில் தடைசெய்தது. எனவே, விடுதலைப் புலிகள் அமைப்புக்கோ அல்லது அதற்கு ஆதரவான அமைப்புக்கோ சட்டரீதியான அனுமதி எதுவும் அங்கு வழங்கப்படாது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பதை எந்தவொரு நாடோ, அரசாங்கமோ அல்லது சர்வதேச அமைப்போ உலகில் எந்தவொரு பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
“அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் பணியகம் ‘தமிழீழம்’ என்பதை அதன் இணையத்தளத்தில் வகைப்படுத்தப்பட்ட ஒரு நாடாகப் பட்டியற்படுத்தியது. இது தொடர்பில் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8 ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அந்நாட்டு அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. மறுநாளே இது நீக்கப்பட்டது. தமிழீழம் என்பதை நாடொன்றாக எப்போதும் அங்கிகரிக்கப் போவதில்லையென எழுத்துமூலம் அவுஸ்திரேலியா அறிவித்தது. இலங்கையின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும், தொகைமதிப்பில் உள்ளடக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.
“டென்மார்க் குடிவரவு சேவை இணையத்தளத்தில் டென்மார்க்கின் விசா பெறும் தகுதியுடைய நாடாக, தமிழீழம் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, பிழை நிவர்த்தி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி டென்மார்க் அரசாங்கம் தவறுக்கு மன்னிப்பும் கோரியிருந்தது.
“அரசாங்கம் தொடர்ச்சியாக விழிப்புடன் இருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட தடை செய்யப்பட்ட நபர்கள், தொகுதிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில், விடுதலைப் புலிகளின் இயக்கமும் உள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் விழிப்புடன் இருக்கிறது” என்று அமைச்சர் மங்கள மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .