Princiya Dixci / 2017 ஜனவரி 26 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
“நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு பல் தற்போது விழுந்து விட்டது. காலம் செல்ல செல்ல, அனைத்து பற்களும் கொட்டிவிடும். இதை நாட்டு மக்கள் விரைவில் காண்பர்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.
புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, ஐந்து பிரதான காரணங்களை முன்வைத்து நுகேகொடையில் நாளை, மாபெரும் மக்கள் பேரணியை நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த மக்கள் பேரணி, ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டதொன்றல்ல. மாறாக, இந்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை கண்டித்தே, இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் ஊழல் மோசடி செய்துள்ளமை தெட்டத்தெளிவாக தெரிந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகார விவாதத்தின் போது, ஊழல்வாதிகள் யார் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல்மோசடியில் பெர்பேச்சுவல் ஷோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன அலோசியஸ் முதலாவது குற்றவாளியாவார். இவரது சொத்து விவரங்களை கணக்கிட்டால் வாழ்நாள் முழுவதும் ஹெரோய்ன் விற்றால் கூட பெற முடியாத பணங்களையும் சொத்துகளையும் அவர் வைத்துள்ளார். இரண்டாவது குற்றவாளி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன். முன்றாவது குற்றவாளி இவர்களை காக்கும் தெய்வமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
ஆட்சி பீடமேறி ஒன்றரை மாதத்துக்குள், இந்த அரசாங்கம் கொள்ளைக்கார அரசாங்கமாக மாறியது. இந்த கொள்ளைகள் அனைத்தும் பிரதமரின் ஆசீர்வாதத்துடனேயே, நடைபெற்றன. கொள்ளையும் அடித்துவிட்டு, அதைக கிளறி தவறிழைக்காதது போல், கொள்ளையை மறைக்க, தனது ஆட்சி பலத்தை வைத்துக்கொண்டும் விசாரணைக்குழுக்களை அமைத்துக்கொண்டும் இந்த அரசாங்கம் நாடகம் ஆடுகிறது” என்றார்.
மேலும், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு பல், தற்போது விழுந்து விட்டது. அவர்தான் ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பியான அத்துரலிய ரத்ன தேரர். காலம் செல்ல செல்ல, அரசாங்கத்திலிருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இந்த அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்வர். இதை விரைவில் காணமுடியும்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .