2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தொலைந்து வரும் அதிகாரக் கனவு

Administrator   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்  

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரும் நோக்கில், அவருக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஒன்றை நடத்தியிருந்தனர்.  

இந்தப் பேரணியில், உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.  

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது அவர் அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கை.  

இலங்கையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலங்கள் எவற்றைக் கொள்வனவு செய்தாலும் அவை அரசுடமையாக்கப்படும் என்பது அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை.  

இந்த ஆண்டில் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றுவேன் என்று சூளுரைத்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, அடுத்துத் தானே ஆட்சிக்கு வருவேன் என்ற நம்பிக்கையை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊட்டுவதற்கான ஒரு முயற்சியாகக் கூட, இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கலாம்.  

இன்னொரு பக்கத்தில், இந்த எச்சரிக்கைகளின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ, சிங்களத் தேசியவாத சிந்தனைகளையும் பலப்படுத்த முனைந்திருக்கிறார்.  

புதிய அரசியலமைப்பு மாற்றத்தை பிரிவினைக்கான நிகழ்ச்சி நிரல் என்றே அவர் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறார்.  
சமஷ்டி அரசியலமைப்பை அரசாங்கம் உருவாக்க முனைவதாகவும் ஒற்றையாட்சி முறையையும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் பிரசாரம் செய்து வருகிறார்.  

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை மஹிந்த ராஜபக்ஷ எதிர்த்து வந்தாலும் அவரது ஆதரவு அணியைச் சேர்ந்தவர்கள், இந்தப் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நாடாளுமன்றக் குழுக்களில் இன்னமும் கூட அங்கம் வகித்து வருகிறார்கள்.

 புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் ஒன்றல்ல என்பதும் சமஷ்டி அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் சாத்தியம் இல்லை என்பதும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றாகவே தெரியும்.  

ஆனாலும், அவர் அரசாங்கத்துக்கு எதிராக இதனையே இப்போது பிரதான ஆயுதமாக மாற்ற முனைந்திருக்கிறார்.  
புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தப் போகிறது என்ற கருத்தை சிங்கள மக்களிடம் தீவிரமாக எடுத்துச் செல்வதன் மூலம், அடுத்து வரக் கூடிய உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றியைப் பெறுவதே அவரது இலக்கு. 

இந்தத் தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேரம் பேசி, அதனை மடக்குவது அல்லது தனித்துப் போட்டியிட்டு, அதனைத் தோற்கடிப்பது என்று இருவேறு திட்டங்களுடன் மஹிந்த காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறார்.  

இத்தகைய நிலையில், புதிய அரசியலமைப்பினால் நாடு பிளவுபடப் போகிறது, என்ற பிரசாரத்தை முன்னெடுத்து, சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்கிறார்.  

இன்னொரு பக்கத்தில், அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எதிரானது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், காணிகள் எதனை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கினாலும் அவையெல்லாம் அரசுடமை ஆக்கப்படும் என்ற எச்சரிக்கையே அது.  

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைச் சீனாவுக்கு வழங்கும் திட்டத்தை மையப்படுத்தியே மஹிந்த ராஜபக்ஷ இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.  

ஆனால், முன்னர் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் சீனாவுக்கு ஒரு பகுதியை முழுமையாகவும் மற்றொரு பகுதியை 99 வருட குத்தகை அடிப்படையிலும் வழங்குவதற்கு அவரே இணங்கியிருந்தார்.  

அதுமாத்திரமன்றி, இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை நட்சத்திர விடுதி அமைப்பதற்கு ஹொங்கொங் முதலீட்டாளருக்கு வழங்கியதும் அவரது அரசாங்கமேயாகும்.  

இப்போது, ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை உள்ளடக்கிய கைத்தொழில் வலயத்தை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக, அவரது கவனம் திரும்பியிருப்பதற்குக் காரணம், இந்தத் திட்டத்தினால் காணிகளைப் பறிகொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் மக்களின் உணர்வுகளைத் தமக்குச் சார்பாகத் திருப்பிக் கொள்வதுதான்.  

வெளிநாட்டவர்களுக்கு காணி உரிமைகளை வழங்க முடியாது என்று அவர் சிங்களத் தேசியவாத உணர்வுகளுக்கு உசுப்பேற்றப் பார்க்கிறார்.  

சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை தமக்கு இருப்பதை மஹிந்த ராஜபக்ஷவினால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதனால், அவர் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  

சிங்கள மக்களில் பெரும்பாலானோரைத் தனது பக்கத்துக்குக் கவருவதற்காக அவருக்கும் அவரது அணியினருக்கும் உதவியாக இருப்பது இனவாதம் ஒன்று தான்.  

சிங்கள மக்களுக்கான முதன்மையிடமும் அவர்களின் நிலங்களும் பறிபோகப் போகின்றன என்ற எச்சரிக்கையை விடுப்பதன் மூலம், தனக்கான வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று மஹிந்த ராஜபக்ஷ நம்புகிறார். போர் வெற்றியையும் இதனைப் போலவே தனக்கான வெற்றியாக மாற்றிக் கொண்டவர் அவர்.  

சிங்கள மக்களின் உணர்வுகளின் மீது, தனது அரசியல் வெற்றியை மீண்டும் பிரசவிக்க முனையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தான் கையில் எடுத்திருக்கின்ற ஆயுதங்கள் இரண்டு பக்கமும் கூர்மையுள்ளவை என்பது தெரியாமல் போயிருப்பது தான் ஆச்சரியம்.  

அரசியலமைப்பு மாற்றமும் வெளிநாட்டு முதலீடுகளும் தனியே உள்நாட்டு விவகாரங்கள் அல்ல. அரசியலமைப்பு மாற்றத்தினால் மட்டும்தான், இலங்கையில் நல்லிணக்கத்தை, நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்று வல்லமை மிக்க நாடுகள் வலுவாக நம்புகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாத்திரமன்றி இந்தியாவும் கூட அதனை உறுதியாக நம்புகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கைகளில் அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஆதரவான கருத்துக்கள் உறுதியாக வெளிவந்திருப்பதைக் காணலாம். அதுபோலவே நாடுகளின் அறிக்கைகளிலும் அந்தக் கருத்து பிரதிபலித்திருக்கிறது. 

அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் அரசியலமைப்பு மாற்ற செயற்பாடுகளில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியிருக்கின்றன. ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை வழங்கி இந்த முயற்சிக்கு ஊக்கமளித்திருக்கின்றன.  

கடந்த மாதம் 26ஆம் திகதி கொழும்பில், ‘இந்தியா ஹவுஸில்’ நடந்த இந்திய குடியரசு தின நிகழ்வில் உரையாற்றிய, புதிய இந்தியத் தூதுவர், தரன்ஜித் சிங் சந்துவும் கூட அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார்.  

இப்படியான ஒரு நிலையில், இந்த அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கும் மஹிந்த ராஜபக்ஷ, நிச்சயமாக இந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஒன்று ஏற்படும்.  

அதுபோலவே, வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும் என்ற எச்சரிக்கை, முதலீட்டாளர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருக்கலாம்.  

இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவர்கள் யோசித்தாலும், அது தமக்கு பெரியளவில் ஆதாயமானது என்று உணர்ந்து கொண்டால், தமது முடிவை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.  

சீனாவைப் பொறுத்தவரையில், அந்த நிலையில்தான் இருக்கிறது. சீனா மஹிந்தவின் எச்சரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், இலங்கையில் சீனா தனக்கான ஒரு தளத்தை தேடிக் கொண்டிருக்கிறது.  

இப்போது கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விட்டால், இன்னொரு வாய்ப்புக்காக பலகாலம் காத்திருக்க வேண்டும் அல்லது அது கிடைக்காமல் கூட போகலாம்.  

எனவே, மஹிந்தவின் எச்சரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், சீனா தனது முதலீடுகளை மேற்கொள்ளப் போகிறது.  
இதுவரையில் சீனாவின் நண்பனாக அறியப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் நிலை இந்த விவகாரத்துக்குப் பின்னர், கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.  

மஹிந்த இப்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் சர்வதேச மட்டத்தில், மஹிந்தவின் நண்பர்களைச் சுருக்கப் போகிறதே தவிர, அதிகரிக்காது.  

ஆட்சியைக் கவிழ்ப்பது, அதிகாரத்தைப் பிடிப்பது என்பது தனியே உள்நாட்டு விவகாரம் அல்ல; அதற்ச்கு சர்வதேச ஆதரவும் இருக்க வேண்டும். அந்த ஆதரவுத் தளத்தை மஹிந்த ராஜபக்ஷ தொலைத்துக் கொண்டிருக்கிறார்.  

மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆதரவுத் தளம் இருந்தாலும் கூட, அதனைத் தனதுபலமாக மாற்றிக் கொள்வதில் குழம்பிப் போயிருக்கிறார். அவரது இந்தக் குழப்பம், அதிகாரத்தைக் கைப்பற்றும் கனவு பற்றிய சந்தேகங்களையே எழுப்புகிறது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X