2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தீர்வை மேலும் மேலும் வலியுறுத்தும் படுகொலைச் சதி

Administrator   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான 
எம்.ஏ. சுமந்திரனைப் படுகொலை செய்வதற்காகச் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.   

இந்தச் செய்தி வெளியானதை அடுத்து, அச்சதிகாரர்களைப் போலவே, இந்நாட்டில் பல அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிகிறது. 

அந்தச் செய்தியைத் தத்தமது அரசியல் சித்தாந்தங்களுடன் பொருந்தும் வகையில் வியாக்கியானம் செய்வதில் உள்ள கஷ்டத்தினாலேயே, அவ்வாறு சிலர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.  

எனவே சிலர், அவ்வாறு ஏதும் நடந்து இருக்காது என எடுத்த எடுப்பில் செய்தியை தூக்கியெறிந்துவிட முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அரசியல் காரணங்களுக்காகவே அவ்வாறு கூறுகிறார்கள்.   

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான டி.பி.எஸ். ஜெயராஜ்ஜினாலேயே இச்சதி பற்றிய செய்தி முதன் முதலாக எழுதப்பட்டு, ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரசுரமாகியிருந்தது.  

அச்செய்தியின் பிரகாரம், நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சில தலைவர்களினால் இந்தச் சதி தீட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் வாழும் முன்னாள் புலிப் போராளிகள் மூலமே அவர்கள் இந்தச் சதிக்கு செயலுருவம் கொடுக்க முனைந்துள்ளனர்.  

தற்போது நிதி நெருக்கடியினால் பெரும் கஷ்டத்தில் வாழும் முன்னாள் புலிப் போராளிகளுக்குப் பணத்தை அள்ளி வீசியே, இந்தச் சதியை நடைமுறைப்படுத்த அவர்கள் முற்பட்டுள்ளனர்.   

ஆனால், சம்பந்தப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், இதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து, அதனை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார் என்றே ஜெயராஜ் தமது செய்தியில் குறிப்பிட்டு இருக்கிறார்.  

பொதுவாகச் சாதாரண மக்கள் இந்தச் செய்தி உண்மையாக இருக்குமோ என்று சந்தேகிப்பதிலும் நியாயம் இல்லாமல் இல்லை.   

சுமந்திரன் புலிகள் அமைப்பினர் உட்படத் தமிழர்களுக்கு எதிராக, அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட பல வழக்குகளில், அந்தச் சந்தேக நபர்களுக்காக பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வாதாடி வருபவர். 

 எனவே, தற்போது வெளிநாடுகளில் வாழும் புலித் தலைவர்கள் அவரைப் படுகொலை செய்வார்களா என்றும் சிலர் கேள்வி எழுப்பலாம்.  

அதேவேளை, உண்மையிலேயே புலிகள் அமைப்பின் தலைவர்களின் ஆலோசனையின் பேரிலேயே, 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊருவாக்கப்பட்டது.   

அப்போதைய பிரதான தமிழ் அரசியல் கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவிருந்த ஆனந்தசங்கரி, புலிகளின் கட்டளைப்படி செயற்பட மறுத்தமையின் காரணமாக, அவரைத் தனிமைப் படுத்திவிட்டு, புலிகள், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்த ஏனைய தலைவர்களை முன்நிறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்.  

அதன் பின்னர், தமிழ்க் கூட்டமைப்பு, புலிகளைத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டது. எனவே, அதன் காரணமாகவும் புலிகள் இப்போது, தமிழ்க் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரைப் படுகொலை செய்ய முனைந்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சிலர், குறிப்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்க மறுக்கின்றனர்.  

ஆனால், அதற்கு மாறாக வாதிடுவோர்களும் உள்ளனர். அன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுக்குச் சாதகமாகச் செயற்பட்ட போதிலும், இன்று அவர்கள் புலிகளின் கொள்கைகளுக்கு முரணாகவே நடந்து கொள்கின்றனர்.  

 தமது எதிர்க் கட்சித்தலைவர் பதவியைப் பாவித்து, தமிழீழப் போராட்டத்தை சர்வதேச மயமாக்குவதில் பெரும் பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலதிபரும் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தையே படுகொலை செய்த புலிகளுக்கு, சுமந்திரனைக் கொல்வது அவ்வளவு பெரிய காரியம் அல்லவென்றும் சிலர் வாதிடலாம்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தச் செய்தியைப் பற்றிப் பெரிதாக எதனையும் கூறாவிட்டாலும், அக்கட்சியினர் அச்செய்தியைச் சந்தேகிப்பதாகத் தெரியவில்லை.   

மாறாக, இந்தச் சதியோடு வெளிநாட்டுச் சக்திகளுக்குள்ள தொடர்பைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் எனச் சுமந்திரன் கூறியதாக ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.   

ஆனால், புலிகள் தென் பகுதியில் அல்லது கிழக்கில் அரசியல்வாதி ஒருவரைப் படுகொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர் எனப் பாதுபாப்புத் தரப்பினர் கூறியிருந்தால், அக்கட்சியினர் எவ்வித தயக்கமுமின்றி அச்செய்தியை ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது.   

இப்போது, தமது தலைவர் ஒருவரே இலக்காகியிருக்கும் நிலையில், அவர்கள் அதனை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறு ஏற்பது கஷ்டமான காரியமும் தான்.  

ஜெயராஜ், இந்தச் சதியைப் பற்றிய செய்தியை வெளியிடுவதற்கு முன், இந்த முன்னாள் புலிப் போராளிகள் கைது செய்யப்பட்ட செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.   

ஆனால், அவர்களை அநாவசியமாக இம்சிப்பதற்காக, இவ்வாறு கைது செய்துள்ளார்கள் என்ற தொணியில்தான் அச்செய்திகள் வெளியாகின. அநேகமாகப் பல தமிழ் ஊடகங்கள், புலிகள் மீதான ஒருவித பற்றோடுதான் செய்தி வெளியிடுகின்றன.   

அதேவேளை அவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் நெருக்கமாக இருப்பதையும் அவ்வளவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலையில், இந்த ஊடகங்களுக்கு இந்தச் செய்தியை ஜீரணிப்பது கஷ்டமாகவே இருக்கும். எனவே, இதன்படி இவை இந்த விவகாரத்தை வியாக்கியானம் செய்ய முற்படுவதைக் காணலாம்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம், 2015 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததை அடுத்து, புலிகள் மீண்டும் தலைதூக்க முற்படுகிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் அமைந்த இரண்டாவது முக்கிய சம்பவம் சுமந்திரன் கொலை முயற்சியேயாகும்.   

இதற்கு முன்னர், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தற்கொலை அங்கியொன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.   

அது சம்பந்தமாகப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படை பிரிவின் தளபதியாகவிருந்த நகுலன் என்றழைக்கப்படும் சிவமூர்த்தி கணபதிபிள்ளை உட்படச் சிலர் கைது செய்யப்பட்டனர்.  

தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்ட போது, பிரிவினைவாதிகள் விடயத்தில் மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் மென்மையான கொள்கையின் காரணமாகப் புலிகள், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகியிருப்பதாகப் பொது எதிரணி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கூறினர்.  

உண்மையிலேயே மஹிந்தவின் அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில் கடைப்பிடித்த கடும் போக்கைத் தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மஹிந்தவின் அரசாங்கத்தைப் பார்க்கிலும் தற்போதைய அரசாங்கம் வித்தியாசமாகவே நடந்து கொள்கிறது.   

எனவே, மஹிந்த அணியினர், தற்கொலை அங்கி வருவதற்கு அரசாங்கம் காரணம் எனக் குற்றஞ்சாட்டும் போது, அதனைச் சிங்கள மக்கள் பலர் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தனர்.   

அது, அரசாங்கத்துக்கு கஷ்டமானதோர் நிலைமையாகியது. எனவே, இம்முறை ஒரு பயங்கரச் சதியை வெற்றிகரமாக முறியடித்தாலும் அது பற்றிய செய்தியை மஹிந்த அணியினர் தம்மைத் தாக்கப் பாவிக்கலாம் என்ற காரணத்தினால் அரசாங்கத்துக்கு அது கஷ்டமான நிலைமையை உருவாக்கியிருக்கலாம்.  

ஆனால், தற்கொலை அங்கிச் சம்பவத்தைப் போலல்லாது, இந்தச் சம்பவத்தை மஹிந்த அணியினர் சற்று வித்தியாசமாகப் பார்ப்பதாகவும் தெரிகிறது. அதற்குக் காரணம், புலிகளின் இந்தச் சதி ஒரு தமிழ்த் தலைவருக்கு எதிராகத் தீட்டப்பட்டு இருப்பதேயாகும்.   

எனவே, அவ்வணியின் சிலர், அவ்வாறானதோர் சதி நடந்திருக்கலாம் என்றும் வேறு சிலர் இது நாடகம் என்றும் கூற முற்பட்டனர்.  

மஹிந்தவின் நெருங்கிய சகாவான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்தச் சதி பற்றிய செய்தியை நம்புகிறார்.   

எனவே, அவர் இது தொடர்பாகப் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார். அவர் அரசியல் இலாபம் தேட முற்பட்டதாகத் தெரியவில்லை.   

ஆனால், மஹிந்த வழமைபோல் இச்சம்பவத்தைக் கொண்டு அரசியல் இலாபம் தேட முற்பட்டார். அரசாங்கம் புலிகளுக்கு வழங்கிய சலுகைகளின் காரணமாகவே, அவர்கள் இவ்வாறு தலைதூக்க முடிந்தது என அவர் கூறியிருந்தார்.  

ஆனால், அவரது அணியில் வேறு சிலருக்கு அந்த நிலைப்பாடு பிடிக்கவில்லை. உதாரணமாக, தேசப்பற்றாளர் தேசிய இயக்கம் என்ற மஹிந்த ஆதரவு அமைப்பின் பொதுச் செயலாளர் டொக்டர் வசந்த பண்டார, இச்செய்தியானது அரசாங்கத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நாடகமே என வாதிடுகிறார்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் மீது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வித அனுதாபத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்கள் மீது நல்லபிப்பிராயத்தையும் ஏற்படுத்தி, சமஷ்டி ஆட்சி முறையை நாட்டுக்குள் திணிப்பதற்காகவே இந்த நாடகம் நடிக்கப்படுகிறது என டொக்டர் பண்டார கூறியிருந்தார்.  

இந்தச் சதி உண்மை என ஏற்றுக் கொண்டால், புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றே என்று அவர்கள் இது வரைமுன்வைத்த வாதம் பொய்யாகிவிடும்.   

இது பொய் என்றால், புலிகளுக்கு அரசாங்கம் சலுகை வழங்கி அவர்களைத் தலைதூக்க உதவுகிறது என்று குற்றஞ்சாட்ட முடியாமல் போய்விடும். இதுதான், சிங்கள இனவாதம் இந்தச் சம்பவத்தால் எதிர்நோக்கியிருக்கும் கஷ்டமான நிலைமையாகும். 

மற்றொரு வகையில், இது ஒரு வித சுவாரஸ்யமான நிலைமையாகும். ஒருபுறம் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதற்காக அரசாங்கமும் கூட்டமைப்பும் நாடகம் ஆடுவதாகச் சில தமிழர்கள் கூறும் அதேவேளை, தமிழர்களுக்குச் சமஷ்டி ஆட்சி முறையை வழங்குவதற்காக அரசாங்கமும் கூட்டமைப்பும் ஆடும் நாடகமே இது எனச் சிங்கள தீவிரவாதிகள் கூறுகின்றனர்.   

இவ்வாறு, அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தாம் விரும்பியவாறு வியாக்கியானம் செய்ய இது ஏதும் சாதாரண விடயம் அல்ல. உண்மையிலேயே அதிகாரிகள் கூறுவதைப் போல் இந்தச் சதி வெற்றியளித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்தால் இது எவ்வளவு பாரதூரமானது என்பது தெளிவாகும்.   

அவ்வாறானதோர் சம்பவம் இடம்பெற்றிருந்தால் மீண்டும் அவசர காலச் சட்டம் போன்றவை வரலாம்; வீதித் தடைகள் வரலாம்; பொலிஸ் பதிவுகள் வரலாம்; முன்னாள் போராளிகள் பலர் மீண்டும் கைது செய்யப்படவும் கூடும்; இராணுவ பிரசன்னம் மேலும் அதிகரிக்கும். பொதுவாகப் பழைய இம்சைகள் மீண்டும் எம்மைத் தேடி வரலாம். 

புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் காணப்படும் போதெல்லாம் பலர், 2009 ஆம் ஆண்டு அரசாங்கம் புலிகளை இராணுவ ரீதியாக முறியடித்தாலும் அவர்களது சித்தாந்தத்தை முறியடிக்கவில்லை என்றும், இனப் பிரச்சினையின் மூல காரணங்கள் இருக்கும் வரை, இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும் என்றும் கூறுவது வழக்கம்.   

உண்மையிலேயே போர் முடிவடைந்ததன் பின்னர், மஹிந்த அரசாங்கம் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்கினாலும் தற்போதைய அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில் சற்றுப் பரிவைக் காட்டினாலும் தமிழர்கள் தாமும் இலங்கையர்கள் என்று சிந்திக்கும் வகையில் அவர்களை அவ்விரு அரசாங்கங்களும் வென்றெடுக்கவில்லை. அங்குதான் இது போன்ற சதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

மறுபுறத்தில், சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் உள்நாட்டில் தத்தமது சமூகத்தவர்களின் பெயரில் வெளிநாடுகளில் பணம் திரட்டுகிறார்கள். அவர்களில் சிலர் அதற்காக உள்நாட்டில் பதற்ற நிலைமைகள் இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாம்; நினைக்கிறார்கள்.   

உள்நாட்டில் விரக்தியான நிலைமைகள் இருந்தால் அது அவர்களுக்கு சாதகமான நிலைமையாகும். குறிப்பாக முன்னாள் போராளிகள் விரக்தியடைந்த நிலையில் இருப்பது, வெளிநாட்டில் இருந்து பிரிவினையைத் தூண்டுவோருக்குச் சாதகமான நிலைமையாகும். சுமந்திரன் படுகொலை முயற்சியின் போதும் அதுவே நடந்துள்ளது என்றே ஜெயராஜ்ஜின் கட்டுரை கூறுகிறது.   

போரின் பின்னர், முன்னாள் போராளிகள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே வாழ்வதாக ‘தமிழ் மிரர்’ உள்ளிட்ட பல தமிழ் ஊடகங்கள் அண்மையில் கூறியிருந்தன. புலிகளின் முன்னாள் மகளிரணித் தலைவி தமிழினியும் தமது வாழ்க்கை வரலாற்றில் இந்தப் புறக்கணிப்பின் கொடூரத் தன்மையை விளக்கியிருந்தார்.  

 புலிகளின் பெயரைக் கூறிக் கொண்டு, தேர்தலில் குதித்த தமிழ்க் கூட்டமைப்புக்கு வாரி வழங்கிய தமிழ் மக்கள், புலிகளின் போராளிகளாகக் களத்தில் போராடியவர்கள் தனியாகக் கட்சி அமைத்துப் போட்டியிட்ட போது, அவர்களை முற்றாக புறக்கணித்தார்கள்.  

இதன் காரணமாகப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் பெரு மதிப்புடன் வாழ்ந்தவர்கள், தற்போது அந்தச் சமூக அந்தஸ்தும் இல்லாமல் குறைந்த பட்சம் சாதாரண மக்களுக்குரிய அங்கிகாரமும் இல்லாமல் தொழில் வாய்ப்புகளும் இல்லாமல் இருக்கும்போது, அவர்கள் விரக்தியடைவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.  

காரணங்கள் எவையாக இருந்தாலும், ஒரு புறம் பொதுவாகத் தமிழ் மக்கள் நாம் இலங்கையர்கள் என்று நினைக்கும் நிலையில் இல்லை எனத் தமிழ்த் தலைவர்கள் குறைகூறிக் கொண்டு இருக்கிறார்கள். மறுபுறத்தில், முன்னாள் போராளிகள் விரக்தியடைந்து இருக்கிறார்கள்.   

இவ்வாறான நிலைமைகளுக்கு அரசாங்கமும் தமிழ்த் தலைவர்களும் தீர்வு காணும் வரை பிரிவினைவாதத்துக்கும் இது போன்ற சதிகளுக்கும் இடம் இருக்கவே செய்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .