2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜெனிவா: நீறு பூத்த நெருப்பு

Administrator   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. சஞ்சயன்

இம்மாத இறுதியில் ஜெனிவாவில் ஆரம்பிக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானது.   

பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், கடந்த 2015 செப்டெம்பர் - ஒக்ரோபர் மாதங்களில் நடந்தபோது, இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ள கூட்டம் இது.  
அமெரிக்கா கொண்டு வந்த அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து, இந்த மீளாய்வு நடக்கவுள்ளது.  

30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே இந்த மீளாய்வின் முக்கிய அம்சமாக இருக்கும்.  

இதுபற்றிய ஒரு விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், பேரவை அமர்வில் சமர்ப்பிப்பார். அதற்கான ஆணை, 30 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  

இந்த ஆணைக்கு அமைய, அவர் ஏற்கெனவே 32 ஆவது கூட்டத்தொடரில் ஓர் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்திருக்கிறார். இப்போது அவர் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.  

இந்த அறிக்கையில், 30 ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும்.  

ஏற்கெனவே 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில், இதேபோன்று இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தன.   

ஆனால், இந்தத் தீர்மானங்களுக்கு இலங்கை ஆதரவளிக்கவில்லை. அதனைப் பகிரங்கமாக எதிர்த்ததுடன், அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் பேரவையிலேயே அறிவித்தது.  

இதனால், ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்ற அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்து வந்தார்.  

இம்முறை அவர் சமர்ப்பிக்கும் அறிக்கை சற்று வேறுபட்டதாக இருக்கும். ஏனென்றால், 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தது.   
அந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்காவுடன் இணைந்து இணை அனுசரணையும் வழங்கியிருந்தது. எனவே, அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியிருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலைப் பிரதிபலிக்கும் வகையில், இம்முறை அறிக்கை அமையப் போகிறது.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை, இலங்கைக்கு முற்றிலும் சாதகமான ஒன்றாக அமைவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், 30ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய அரசாங்கம், அந்த எல்லாப் பரிந்துரைகளையும் நிறைவேற்றவில்லை.  

அந்தத் தீர்மானத்தின் முக்கியமான பரிந்துரை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கும் நம்பகமான பொறிமுறை ஒன்று, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.  

கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஜெனிவாத் தீர்மானம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், அரசாங்கம் கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த முடியாது என்று கூறி வருகிறது.   

இணை அனுசரணை வழங்கிய போது, கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டு விட்டு, அதற்குப் பின்னர், அத்தகைய விசாரணைப் பொறிமுறையை அமைக்கச் சட்டத்தில் இடமில்லை என்று அரசாங்கம் கூறிவருகிறது.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்தது போல, கலப்பு விசாரணைப் பொறிமுறையை மாத்திரமன்றி, ஒரு நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைக் கூட அரசாங்கம் அமைக்கத் தவறியிருக்கிறது.  

ஜெனிவாத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. “இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம். ஆனால், அதற்கு காலஅவகாசம் தேவை” என்று அண்மையில் லண்டனில் சத்தம் ஹவுசில் நிகழ்த்திய உரையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை அரசாங்கமே உறுதிப்படுத்தியிருக்கிறது. இதனைச் சொல்வதற்கு அரசாங்கம் சற்றேனும் தயங்கவில்லை.  

இப்படிப்பட்டதொரு நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தனது அறிக்கையை இலங்கைக்குச் சாதகமாக அளிப்பார் என்று நம்புவதற்கில்லை.  

அதாவது, வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் முழுமையாகக் காப்பாற்றவில்லை என்பதை அவர் நிச்சயம் சுட்டிக்காட்டுவார். அதற்காக, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டது போன்ற காட்டமான ஓர் அறிக்கையை அவரிடம் இருந்து இம்முறை எதிர்பார்க்க முடியாது.  

ஏனென்றால், 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன; மனித உரிமை சூழலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன; ஜனநாயக உரிமைகளை ஓரளவுக்கேனும் மக்கள் அனுபவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.  

இந்த விடயங்கள் தான் அரசாங்கத்துக்கு சாதகமானவையாக இருக்கப் போகின்றன. இந்த முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும்.  

அதேவேளை, கலப்பு விசாரணைப் பொறிமுறையை உள்ளடக்கிய பொறுப்புக்கூறல் செயல்முறையை உருவாக்கும் விடயத்தில், இலங்கை அரசாங்கம் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறியிருக்கிறது என்பதை நிச்சயமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் சுட்டிக்காட்டாமல் விட முடியாது.  

ஏனென்றால், அதுதான் 30ஆவது கூட்டத்தொடரின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை அம்சம். இலங்கையில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறல் அவசியமானது என்றே ஜெனிவாத் தீர்மானங்கள் ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வந்திருக்கின்றன. 

கடைசியாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம், அதனை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.  

அப்படியிருக்கையில், அந்த முக்கியமான வாக்குறுதியில் எந்த முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாமல் ஏனைய விடயங்களில் உள்ள முன்னேற்றங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, இலங்கைக்கு சாதகமான ஓர் அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் வெளியிட முடியாது.  

ஆனாலும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை அவ்வப்போது சந்தித்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  

கடந்த மாதம் சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட, ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.  

அந்தச் சந்திப்புத் தொடர்பாக, பிரதமர் செயலகத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில், ‘மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக, இலங்கையில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எல்லா சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயல்முறைகளை இலங்கையினால் மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை நம்புகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களைக் குணப்படுத்த வேண்டியது முக்கியம்’ என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டார் எனக் கூறப்பட்டிருந்தது. 

ஆனால், இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கூறிய முக்கியமான ஒரு விடயத்தை பிரதமர் செயலகம் வெளியிடவில்லை.  

இதுபற்றிக் கடந்தவாரம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

‘பொறுப்புக்கூறல் விடயங்களில் மெதுவான முன்னேற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளமை குறித்த எனது கவலையை இலங்கைப் பிரதமரிடம் வெளியிட்டேன்.இதுவும், கரிசனைக்குரிய ஏனைய விவகாரங்களும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் நான் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் அவரிடம் தெரிவித்தேன்’ என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.  

இதிலிருந்து, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் அரசாங்கம் வேகத்துடன் செயற்படவில்லை என்ற தெளிவான நிலைப்பாட்டிலும் இதுபற்றித் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டும் நிலைப்பாட்டிலும் அவர் இருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இது இலங்கைக்கு சாதகமற்ற ஒரு நிலையாகும்.   

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை முக்கியமானது. ஏனென்றால், அடுத்தகட்டமாக இந்தப் பொறுப்புக்கூறல் விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு கையாளலாம் என்ற ஆலோசனையை இந்த அறிக்கையில்தான், செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிப்பார்.  

அந்தப் பரிந்துரையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அப்படியே நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் என்று கூறமுடியாது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் போன்ற சாதகத்தன்மைகளின் காரணமாக, ஜெனிவாவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அரசாங்கம் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறது. 

ஆனால், இது நிரந்தரமான நிலை என்று கூற முடியாது.அரசாங்கத்துக்கு வாய்க்கும் இந்தச் சாதக நிலை, நீறு பூத்த நெருப்பாகவே இருக்கும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .