2026 ஜனவரி 03, சனிக்கிழமை

கொலை முயற்சி தொடர்பில் 'பொலிஸார் சொல்லும் தகவல்கள் பொருந்துகின்றன'

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

“எனது கொலை முயற்சியில், யார் ஈடுபட்டார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்களையும் பொலிஸார் கூறும் தகவல்களையும் பார்க்கின்ற போது, எல்லாமே பொருந்துகின்றது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  தெரிவித்தார்.

சுமந்திரனிடம் அவர் மீதான கொலை முயற்சி தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“என் மீது கொலை முயற்சி இடம்பெற்றது என, சில சம்பவங்களை எனக்குக் கூறியிருக்கின்றனர். அந்தச் சம்பவங்களுடன் அன்றைக்கு நான் எங்கே இருந்தேன், எங்கு செல்ல இருந்தேன் என்று ஒப்பிட்டு பார்க்கின்றபோது, எல்லாம் பொருந்துகின்றன. ஆகையினாலே அவர்கள் சொல்லுகிற தகவல் பொய்யானது என்று சந்தேகிப்பதற்கு எனக்கு இடமில்லை. அதற்காக, எல்லாம் உண்மை என்றும் இன்றைக்கு நான் தீர்மானம் எடுக்க முடியாது.

"அந்தத் தகவல்கள் எல்லாம் என்னுடைய அந்த நாட்களின் நடவடிக்கையோடு சேர்ந்து ஒத்து வருகின்ற காரணத்தாலேயே, பாதுகாப்புச் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆகையால் பாதுகாப்புச் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது மிகவும் சௌகரியமானதொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.

"நீதிமன்றத்தில் பொலிஸார் கொடுத்த தகவலில், எப்படியாக இது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை, தெளிவாக அவர்கள் சொல்லவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலத்தின் படி, மிகப் பாரிய வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

"விடுதலைப் புலிகள் தான் ஏற்பாடு செய்திருப்பார்களா என்று கேட்கின்றீர்கள். ஆனால் எனக்கு யார் என்று தெரியாது. எனக்குத் தெரியாத விடயத்தை கேட்கின்றீர்கள். சொன்ன தகவலின்படி சந்தேகிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. ஆனால் யார் செய்திருக்கலாம் என்று ஊகித்துக் கொள்ளத் தேவையுமில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X