2024 மே 03, வெள்ளிக்கிழமை

இதயசுத்தி இல்லாமல் இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாடு இல்லை

Administrator   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- காரை துர்க்கா   

ஓர் ஊரில் திரு திருமதி இலங்கை என்ற பெற்றோர்களுக்கு மூன்று அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்குச் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பெற்றோர்கள் பெயரிட்டனர்.   

மூன்று சகோதரர்களும் தங்களுக்குள் அன்பாக, ஒற்றுமையாக இருந்தனர். ஆனால், பெற்றோர்கள் மூத்த பிள்ளையாகிய சிங்களவர் மீது அன்பையும் அரவணைப்பையும் செலுத்திக் கொண்டு ஏனைய பிள்ளைகளாகிய தமிழர் முஸ்லிம் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டினர்.  

அதுவே, நாளடைவில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்கிடையில் - சகோதரங்களுக்கிடையில் சண்டைகளையும் சந்தேகங்களையும் குரோத மனப்பான்மைகளையும் வளர்த்தன.   

இதுவே, இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனப்பிரச்சினையாக உருவெடுத்தது. இவ்வாறான இனப்பிணக்கு காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக விஸ்வரூபம் கொண்டது. பெரும் அழிவை அள்ளிக் கொடுத்து விட்டுக் குறிப்பாக தமிழ் மக்களுக்கு அதிகப்படியாகக் கொடுத்து விட்டு, அது மௌனம் பெற்றது.  

 இவைகளுக்கான காரணத்தை ஆழமாகத் தேடினால் இனங்களுக்கிடையில் இதயசுத்தி இன்மையே ஒற்றைப் பதிலாகக் கிடைக்கும் என்பதில் மறு கருத்துக் கிடையாது.   

ஒரு மரம் தானாகத் தனியே தன்பாட்டில் இருந்தாலும் காற்று அதனை அவ்வாறு இருக்க விடாது. வீம்புக்கு வம்புக்கு அதனுடன் உரசும். மீண்டும் மீண்டும் மூட்டி மோதும். அது போலவே இலங்கைத் தீவில் பேரினவாதம் பல தசாப்த காலமாகத் தமிழர்களைத் தொடர் இன்னலுக்குள் தள்ளி வந்திருக்கின்றது; வருகின்றது.   

சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு விடுதலைப் புலிகளே முட்டுக்கட்டையாக உள்ளனர்; பிரதான தடையாக உள்ளனர்; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்கள் தோற்கடிக்கப்பட்டால் தீர்வு கிடைக்கும் என முன்னர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறி வந்தனர்.   

2009 மே 18 ஆம் திகதியுடன் ஆயுத மோதல் இல்லை; புலிகள் இல்லை. ஆனால், அரசியல் தீர்வும் இல்லை. எட்டு வருடமாகியும் நிலையான தீர்வை எட்டிப்பிடிக்க முடியாமல் திணறுகின்றது சிறிலங்கா அரசாங்கம்.  

 சிங்கள மக்கள், சிங்கள ஆட்சியாளர்கள்; தமது சகோதர இனத்தின் வாழ்வின் இருப்புத் தொடர்பான பிரச்சினை என இதயசுத்தியுடன் அணுகியிருப்பின் ஏன் எட்டு வருடமாகியும் இலங்கைத் தீவில் எட்டாக்கனியாக உள்ளது சமாதானத் தீர்வு.  

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் பின்னர், தமிழர் வாழ்வு முள்ளில் உள்ள வேளை, ஏன் தமக்குச் சமமான சமாதான சக வாழ்வைத் தர அரசாங்கம் பின்னடிக்கின்றது. ஏன் தள்ளி நிற்கின்றது? ஏன் அவர்கள் உணர்வுகளை எள்ளி நகைக்கின்றது.  

இறுதி அகோர யுத்தத்தில் ஒருவாறு மீண்டு, தாங்கள் படையினரிடம் கையளித்த தம் உறவுகளின் நிலை என்ன எனப் பல வருடக் கணக்காக அலைந்து அலைந்து சலித்துப்போய் ஆற்றொனா துன்பத்தில் துவளுகின்றது தமிழ் இனம். 2009 ஆம் ஆண்டிடுக்கு முன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் பின்னர் 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற வேளையிலும் தம் கண் முன்னால் படையினரிடம் முள்ளிவாய்க்கால், ஓமந்தை, வவுனியா எனச் சரணடைந்தவர்களே தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.   

அவர்களின் உறவுகள் அண்மையில் வவுனியாவில் நடாத்திய உணவு ஒறுப்புப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், வெளிநாடு சென்றிருக்கலாம் எனத் தெரிவித்தமையானது வேதனையில் இருக்கும் மக்களின் நம்பிக்கைக்கு வேட்டு வைத்தது போல உள்ளது.

அவர்கள் வெளிநாட்டில் சௌக்கியமாக வாழந்தால் ஏன் இவர்கள் உள்நாட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் காக்க வேண்டும். பிரதமர் இதயசுத்தியுடன் இப்பிரச்சினையை அணுகி இருப்பின் இவ்வாறான நீதி தவறிய கருத்தைக் கூறியிருப்பாரா?   

ஆகவே, மஹிந்த என்றாலென்ன ரணில் என்றாலென்ன தமிழர் என்றால் சிகிச்சை ஒரே மாதிரித்தான் அமைகிறது. இவை நல்லாட்சி அரசின் நம்பிக்கை, மதிப்பு என்பன மங்கி வருவதையே கட்டியம் கூறுகின்றன.   

1983 ஆம் ஆண்டுக்கு முன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகக் கூறி ஒரு தொகுதி சிங்கள மக்கள், மஹிந்த ஆட்சிக் காலத்தில் யாழ். தொடரூந்து நிலையத்தில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். பின்னர், நாவற்குழியில் தேசிய வீடமைப்பு சபைக்குச் சொந்தமான காணியில் அவர்களுக்கு நிலமும் வழங்கினர். தற்போது கடந்த ஜனவரி 30 ஆம் திகதி நல்லாட்சி அவர்களுக்கு நாவற்குழியில் நிரந்தர வீடு கட்ட அத்திவாரம் இட்டுள்ளது.   

யாழ்ப்பாணத்திலேயே பலர் சொந்தக் காணியின்றி அவலப்படும் நேரத்தில் காணியின்றி வீட்டுத்திட்டத்தையே இழந்து நிற்கும் வேளை, அங்கிருந்து வந்த தம்மின மக்களுக்கு தனது ஆட்சிக் காலத்தில் மஹிந்த காணி வழங்க, தற்போது ரணில் வீடு கட்டிக் கொடுக்க, எதிர்காலத்தில் மைத்திரி நாடவை வெட்டி திறப்பு விழா செய்வார்.   

இவர்கள் தங்களுக்குள் முட்டி மோதினாலும் தம் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து விட்டார்கள். இங்கு குடியிருக்க வந்த சிங்கள மக்களுக்கும் நாவற்குழிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இவர்கள் முன்பு இங்கு வாழவில்லை. இவர்களின் அப்பா, அம்மா, அப்பு, ஆச்சி என எவரும் முன்னர் இங்கு வாழவில்லை. ஆனாலும் காணியும் வீடும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது.   

ஆனால், தற்போது தமது வாழ்விடங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு, கோப்பாப்புலவு மக்கள் படை முகாம் முன்பாக தொடர் போராட்டங்களை பகல், இரவாகக் கடும் பனிக் குளிருக்கு மத்தியில் நடாத்தி வருகின்றனர்.   

பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் எவ்வித அரசியல் கலப்படமும் அற்ற ஒரு தூய மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு வேறு இடங்களில் சிறிய மாற்றுக் காணி வழங்கி விட்டு அவர்கள் நிலத்தில் அவர்களுக்கு தடை விதித்து விட்டு, படை பள்ளி கொள்கின்றது. இதற்கு விடை தர மறுக்கின்றது ஆளும் தரப்பு.   

கடந்த பல வருடங்களாகக் காணியற்று அவர்கள் வாழ்வின் ஆதாரமே பறி போவதை உணர்வுபூர்வமாகக் கணிக்க தவறிவிட்டனர் ஆட்சியை அலங்கரிப்போர். ஆட்சியாளர்கள் கூறும் சமாதானச் சகவாழ்வு சிங்கள மக்களுக்கு நேர்மறையாகவும் தமிழ் மக்களுக்கு எதிர்மறையாகவும் வழங்கிய பரிசுகள் இவை.   

மேலும், அநுராதபுரம், மலையகம், தெற்கு எனப் பல இடங்களிலும் இருந்து 1958, 1977, 1983 என காலத்துக்குக் காலம் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருந்தனர். அந்தத் தமிழ் மக்கள், தாம் ஏற்கெனவே குடியிருந்த இடங்களில் மீளச் சென்று குடியமர ஆக்கபூர்வமாக ஏதும் நடவடிக்கைகள் மேற்கொண்டார்களா ஆட்சியாளர்கள்?   

ஒரு நாட்டு அரசின் சீரிய கொள்கையாக முதலாவதாக இறைமையைப் பாதுகாப்பது, அடுத்து சீரான சமூக, பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பது, மூன்றாவதும் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குவது அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதை உறுதிப்படுத்துவது.   

ஆனால், நம் நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஓர் இனம் இன்பத்தையும் மற்றைய இனம் துன்பத்தையும் அனுபவிக்கிறது.  

அரசாங்கத்தினது வர்த்தமானி, அரச சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் பதவி வெற்றிடங்கள் எனப் பல அம்சங்களுடன் வெளிவருகின்றது. அங்கு இறுதியாக ஒரு விடயம் சொல்லப்பட்டிருக்கும். 

அதாவது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் ஏதாவது சந்தேகங்கள், ஜயப்பாடுகள் காணப்படின் சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளவையே மேலோங்கி காணப்படும் என்பதாகும்.

ஆகவே, தமிழ் மொழிக்குச் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும் அவ்விடத்தில் தமிழ் தனது கௌரவத்தை இழந்து விட்டது என்றே கூறலாம்.   

2009 மே மாதத்திலிருந்து யுத்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, மோதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

அதனூடாகப் படையினரின் சுற்றிவளைப்புகளும் எறிகணை வீச்சுகளும் விமானக் குண்டு வீச்சுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தவிர வேறு பெரிய குறிப்பிடும் படியான எந்த வெற்றிக் கனிகளையும் இது வரை தமிழர் சுவைக்கவில்லை என்றே கூறலாம்.  

மேலும், இனப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக எந்த அடைவு மட்டங்களையும் அடையவில்லை.   
மஹிந்த, யுத்தத்தை முடிவுறுத்திய விதம், வழிமுறைகள் என்பவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, அவரும் அவர் சார்ந்த அணியினரும் இதயசுத்தியுடன் செயற்பட்டிருந்தால் இனப்பிரச்சினைக்கான பரிகாரத்தை கண்டிருக்கலாம்.   

ஏனெனில், அந்தளவுக்குப் பெரும் பலம் பொருந்திய வீரனாக வலம் வந்தார். சிங்கள மக்கள் மத்தியில் உயர்வாகப் பேசப்பட்டார்; போற்றப்பட்டார். அவர் நிலையான நீதியான அரசியல் தீர்வை எட்டியிருப்பின் இலங்கை அரசியல் வரலாற்றில் தனி இடம் பிடித்திருப்பார். ஆனால், தற்போது வரவிருக்கும் அரசியல் யாப்பு பிரிவினைக்கு வழிவகுப்பதாகவும் தனி நாடு வர வழி சமைப்பதாகவும் கூறி வருகின்றார்.  

மீளத் தனது ஆட்சியை அமைக்க இனப்பிரச்சினையை ஒரு வலுவான ஊடகமாகப் பயன்படுத்துகின்றார். இந்த விடயத்தில் கூட எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சிங்கள மக்களை நாடு இரண்டாக உடையப் போகின்றது என வீணாக உசுப்பேற்றாது, இனப்பிரச்சினை விடயத்தில் இரண்டறக் கலக்குமாறு மஹிந்தவிடம் கோரியுள்ளார். இவரது அன்பான அவசர அழைப்பை மஹிந்த ஏற்பாரா? கரம் கொடுப்பாரா என்பதெல்லாம் கானல் நீராகவே உள்ளது.   

அவ்வாறு நடந்தால் மட்டுமே இன, மத, சாதி, பேதம் போன்ற வரையறைக்குள் சிறைப்பட்டுள்ள மக்களையும் சமூகத்தையும் விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதி நெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க முடியும். நாடு வளம் பெறும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .