Gavitha / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே, இடம்பெற்ற இரு மோதல் சம்பவங்களில், 11 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, மோதல்களுடன் தொடர்புடைய 15 மாணவர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், இந்த மோதல் சம்பவங்களால், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரு பஸ்கள், தனியார் பஸ் ஒன்று, வான் ஒன்று மற்றும் கார் போன்றனவும் சேதமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் மீது, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் வைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை, நாலந்தாக் கல்லூரி மாணவர்களால் கற்கள் எறியப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் நோக்குடன், பாடசாலை விட்ட பின்னர், நாலந்தாக் கல்லூரி வாயிலுக்கு அருகில் சென்ற ஆனந்தாக் கல்லூரி மாணவர்கள், அங்கிருந்த நாலந்தாக் கல்லூரி மாணவர் பஸ் மீது கற்களை எறிந்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், இது தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் காயமடைந்த இரு கல்லூரிகளையும் சேர்ந்த 8 மாணவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த 15 மாணவர்களைக் கைது செய்துள்ளனர். காதலர் தினத்தை மையப்படுத்தியே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, பொரளை டீ.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கும் மாணவர்கள் சிலருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலுக்கான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை என்று, தெரிவித்த பொலிஸார், மேற்படி மூன்று பாடசாலைகளில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் தலைமையில், விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .