2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘விக்கியின் பேச்சு விக்குகிறது’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“வடமாகாண முதல​மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பேச்சுக்கு இந்த அரசாங்கம் மறுபேச்சு, பேசுவதில்லை” என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவே, அரசாங்கம் அரசியலமைப்பில் சமஷ்டியை கொண்டுவர முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பில் திருத்தங்கள் சில கொண்டுவரப்பட்டன. ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ‘அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவது, மக்களுக்காக வேண்டியே தவிர பிற அரசியல் இலாபங்களுக்காக அல்ல’  எனத் தெரிவித்தார்.

அந்நேரத்தில், அந்த பிரசாரம் வரவேற்கத்தக்கதாக காணப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற, சமஷ்டி ஆட்சி முறைக்கு ஒப்பான வகையில் அரயலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு, நாட்டை சீரழிக்க முற்படுகின்றனர்.

அரசியலமைப்பில் திருத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில், மக்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் பல உள்ளன. அதையெல்லாம் விடுத்து, சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கிய வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையிலான திருத்தங்களையே அரசியலமைப்பின் ஊடாக  அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.

விக்னேஸ்வரன் கூறும் பேச்சுக்கு மறுபேச்சு இந்த அரசாங்கம் பேசுவதில்லை. அவர் கூறும் விடயங்களுக்கு எல்லாம் தலையாட்டுகிறது, இந்த அரசாங்கம்.

இந்நாட்டில் சில்லறைப்பிரச்சினைகள் பல உள்ளன. அதையெல்லாம் ஆட்சி மாறினாலும் தீர்வைப் பெற்றுவிடலாம். ஆனால், முறையற்ற அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்தால் அதனால் ஏற்படும் விளைவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .