2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்'

George   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக  ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றது. அவ்வாறு ஒன்றரை வருட கால அவகாசத்தினூடாக இலங்கை அரசாங்கம் என்ன விடயங்களைச் சாதித்துக் கொள்ளப் போகிறதென்பது மிகப்பெரும் கேள்வியாக இருக்கின்றது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பான அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருக்க கூடிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயகக்க குமாரதுங்க, யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை எதுவும் தேவையில்லை என மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்.

அதாவது, ஐ.நா தீர்மானத்தில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்ககு ஒரு பொறிமுறை அமைக்கப்பட வேண்டுமென்றும் அதில் சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அதனூடாகத் தான் நம்பத்தகுந்த விசாரணை நடைபெறுமென்றும் ஐ.நா தீர்மானத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால், நல்லிணக்கம் தொடர்பாக, அதற்குத் தலைமை தாங்கக் கூடிய சந்திரிகா பண்டார நாயக்க, யுத்தக் குற்ற விசாரணைகள் எதுவுமே தேவையில்லை என்றும் அறிவித்திருக்கின்றார்.

அது மாத்திரமல்லாமல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமானது கால நீடிப்பபைக் கொடுத்தால் கண்காணிப்பு வேண்டுமென்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு முன்னர் ஐனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் கூறி அதனை  மறுதலித்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தக் கால அவசாகம் ஏன் என்ற கேள்வி எழுகின்றது. என்ன விடயங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தால் கால நீடிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரையில் கால நீடிப்பு என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறையாகவே இருக்குமென்பதே எங்கள் நிலைப்பாடு.

ஏற்கெனவே இரண்டு வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கடக்கும் என்றால் எமது பிரச்சினை, காலாவதியான பிரச்சினை அல்லது நீர்த்துப் போன பிரச்சினையாக மாற்றமடையும் என்பதுடன் சர்வதேசத்தால் கண்டு கொள்ளாத பிரச்சினையாகவே போய்விடும்.

இவ்வாறானதொரு சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற சம்மந்தன் அவர்கள் கால நீடிப்புக்கு எவ்வாறு சம்மதம் தெரிவிக்க முடியும்.

ஏற்கெனவே ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக அரசாங்கம் சில முன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் கால நீடிப்பை நாங்கள் அங்கீகரிக்க முடியுமென்ற கருத்தைக் கூறியிருந்தார்.

இப்போது சம்மந்தன் அவர்களும் கால நீடிப்பை வழங்குவதானால் ஐ.நா கண்காணிக்க வேண்டுமென்று கோரியுள்ளார். இதன் பொருள் என்னவெனில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி கால நீடிப்பை ஏதோவொரு வகையில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாகும்.

ஆனால் கூட்டமைப்பின் இணைப்புக் குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சி கால நீடிப்பை வழங்கக் கூடாதென்று தெளிவாக கூறியிருக்கிறோம். கடந்த சில தினங்களிற்கு முன்னர் ரெலோ வின் செயலாளரும் கால நீடிப்பை வழங்க முடியாதென்று கூறியிருக்கின்றார்.

அதே போன்று இதற்கு முன்பாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் கூட கால நீடிப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஏற்றுக் கொள்வது சுமந்திரனின் கருத்து என்றும் கூறியிருக்கின்றார்.

ஆகவே, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகள் இந்தக் கால நீடிப்பை நிராகரித்திருக்கக் கூடிய சூழ்நிலையில் கூட்டமைப்பு கால நீடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கால நீடிப்பு தொடர்பில் சம்மந்தனோ சுமந்திரனோ பேசுவதாக இருந்தால் அது தமிழரசுக் கட்சி சார்ந்ததாகவே இருக்க வேண்டுமே தவிர கூட்டமைப்பு சார்ந்ததாக இருக்க முடியாது.
சம்மந்தன், இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பினர்கள் மீது பல நம்பிக்கைகளை கொண்டிருந்தார். முக்கியமாக சந்திரிகா போன்றவர்கள், இந்தப் பிரச்சினையில் ஒத்துழைப்பார் என்று நம்பியிருந்தார். ஆனால் அவர் கூட, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவையில்லை என்று கூறியிருக்கின்றார்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் புதிய அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியை கொண்டு வந்ததில் சம்மந்தன் பெரிய பங்கை ஆற்றியிருந்தார் என்று. அதனை அவர்களே மீண்டும் மீண்டும் கூறியிருந்தனர்.

ஆனால், இன்று அவர்களது சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு அந்தக் கோரிக்கைககள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படாது அரசாங்கம் தான் விரும்பியவாறே செயற்பட்டு வருகின்றது. இதனை எந்த விடயத்திலும் கையாள முடியாத சூழ் நிலை தோன்றியிருக்கின்றது. இதில் ஒன்றில் சம்மந்தன் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில், நீண்டகாலமாக அரசுடன் இணக்கப்பாட்டுடன் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற போதும் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானமாக இருந்த போதும் கூட அது எவையுமே நடைமுறைப்படுத்தப்படாமல் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று கால நீடிப்பைக் கோருவதானது அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் விடயாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.

இவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பாக விடயத்தை ஐ.நா பொதுச் சபைக்குப் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. ஆகவே மீண்டும் கால அவகாசம் வழங்கி இலங்கை அரசைப் பாதுகாப்பதை விடுத்து இதனை ஐ.நா பொதுச் சபைக்கு கையளிப்பதனூடாக எந்தவொரு கால கட்டத்திலும் விசாரணை நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தோன்றும். ஆகவே கால நீடிப்பை விடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான விடயத்தை பொதுச் சபைக்கு கையளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .