2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமலுக்கு ‘புலி’ பயம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) எதிரான கருத்துகளை கூறியவர். அவ்வமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் சிறையில் உள்ளனர்.

அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என, விமலின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார். 

அதனை கவனத்தில் எடுத்த, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால், சந்தேகநபருக்கு அச்சுறுத்தல் காணப்படுவது மற்றும் அவரை, சிறைக் கூண்டுக்குள் அடைக்கும் நேரம் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்தார். 

91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு, நேற்று (20) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. 

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, தமது சேவை பெறுனர் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு, காலை 6 மணிக்கே திறக்கப்படும். இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு அவர் சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவருடைய அடிப்படை உரிமை மீறப்படுவதாகக் கூறிய அவர், தனது சேவை பெறுனர், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவருக்கு பத்திரிகைகளை விநியோகிக்க வேண்டும் எனவும் அதைக் கொண்டே, நாடாளுமன்றத்தில், அவரால் உரையாற்ற முடியும் எனவும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

அதுமட்டுமின்றி, தனது தரப்பைச் சேர்ந்தவருக்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.  

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே, பத்திரிகைகள் வழங்கப்படுவதாகவும் தேவையெனின் சிறைச்சாலை அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் என நீதவான் அறிவித்தார். 

இதேவேளை, சந்தேகநபர் மீதான உயிர் அச்சுறுத்தல் மற்றும் அவரை சிறைக் கூண்டுக்குள் அடைக்கும் நேரம் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டார். 

இந்நிலையில், விமல் வீரவன்சவின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை, நேற்று (20) நீடித்தது. 

அத்துடன், 2ஆவது சந்தேகநபரான, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த லொக்கு ஹென்னதிகேயை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலிலும் செல்ல அனுமதியளித்த நீதவான், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததுடன், கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். 

இரண்டாவது சந்தேகநபரின் தாய்க்கு 76 வயதாகதாகவும் மூத்த பிள்ளை, இவ்வருடம் கல்விப் பொதுத் தராரத சாதாரண தரப் பரீட்சைக்குக்குத் தோற்றவுள்ளதாகவும் 12 வயதான இரண்டாவது பிள்ளை மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ, பிணை கோரியிருந்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு பிணை வழங்குவதாக, நீதவான் அறிவித்தார். 

தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .