2024 மே 08, புதன்கிழமை

'சர்வதேச விசாரணையையே தமிழ் மக்கள் கோருகின்றனர்'

Menaka Mookandi   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானததுக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க முடியாது. அவ்வாறு கால அவகாசத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியிருப்பதானது, தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகும். சர்வதேச விசாரணையே தேவை என்பதை, எழுக தமிழுடாக தமிழ் மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்' என்று, தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'கடந்தமுறை நிறைவேற்றப்பட ஐ.நா தீர்மானத்தை நிராகரித்தும் கால நீடிப்பை வழங்கக் கூடாதெனச் சுட்டிக்காட்டியும், சர்வதேச விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்தியும், வடகிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன' என்றார்.

'மார்ச்சில் நடைபெறவிரு;கும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட இருக்கிறார். இலங்கை தொடர்பாக, 2012ஆம் தொடக்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அக்கறை செலுத்தி வருகின்றது. அந்த விடயங்களில், விசேடமாக 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் அது சம்மந்தமாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டு, மீண்டுமொருமுறை, இலங்கை தொடர்பான அடுத்த கட்ட விடயம் தொடர்பாகவும் பேரவை ஆராயவிருக்கின்றது.

இந்நிலையில் தான், இலங்கை அரசு மேலதிக கால அவகாசம் கோரவிருப்பதாக அறிவித்திருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையில், தீர்மானிக்கும் சக்திகளான மக்களுக்கு, பொதுவானதொரு தெளிவு தேவை. பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பவை, இங்கிருக்கும் அரசியல் நிலைமைகளை கையாளுவதற்கு மட்டும் தான் நிறைவேற்றப்பட்டதே தவிர, பொறுப்புக்கூறல் என்றதற்கமைய நிறைவேற்றப்படவில்லை.

எனவே, இத்தீர்மானத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. கால அவகாசம் தொடர்ந்தும் கொடுப்பதென்றால், அது பச்சைத் துரோகமாகவே இருக்கப் போகின்றது. இன்றைக்கு மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரில் செய்கின்ற மோசடிகளை அம்பலப்படுத்தி, தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டியே ஆகவேண்டும். இல்லாவிடின், மீண்டும் மீண்டும் எம் மக்களுக்கு துரோகம் அளிப்பதாகத் தான் இருக்கும்' என, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X