ஐ.ம.சு.வுடன் எமக்கு உறவில்லை: விமல்
23-02-2017 09:49 AM
Comments - 0       Views - 107

ஜே.ஏ.ஜோர்ஜ்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தங்களுக்கு எவ்விதமான உறவுகளும் இல்லை என்று, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார எம்.பி தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன. 

இதேவேளை, தங்களுடைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான அங்கிகாரத்தை வழங்குமாறும் அவ்விருவரும், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று (22) கோரிநின்றனர். 

முன்னதாக எழுந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான அரசியல் ரீதியான உறவுகளை, எமது கட்சி துண்டித்துள்ளது. ஆகவே, எனது தலைமையின் கீழுள்ள எம்.பிக்கள் ஐவரையும் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்றார். 

“இந்தக் கோரிக்கையை 6 மாதங்களுக்கு முன்னரே நாம் விடுத்திருந்தோம். சுயாதீனமாகச் செயற்படும் கட்சியொன்றுக்கு நாடாளுமன்றில் வழங்கப்படும் உரிமைகள், சலுகைகளையும் நாம் கோரியிருந்தோம். ஆனால், சபாநாயகர் என்ற ரீதியில் நீங்கள், இன்னும் எவ்வித முடிவையும் விடுக்கவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.  

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “இந்த விவகாரம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அறிவித்துள்ளோம். இந்த முடிவு குறித்து அக்கூட்டமைப்பு நீங்கள் இன்னும் அறிவிக்கவில்லையென்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இன்று தான் (நேற்று) நீங்கள், இப்படியொரு அறிவிப்பையே சபையில் பகிரங்கமாக விடுக்கின்றீர்கள்” என்றார். 

“இல்லை. சபாநாயகரே, இதற்கு முன்னரே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். நாம் வெளியேறுவதை அனுமதிக்க முடியாது என்றுதான், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. சுயாதீனமாகச் செயற்படும் உரிமை எமக்குள்ளது” என்று விமல் எம்.பி குறுக்கிட்டு கூறினார். 

இதன்போது ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் விமலின் கருத்தை ஆதரித்தனர். தனது தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியும் சுயாதீனமாகச் செயற்படப்போவதாக வாசுதேவ நாணயக்கார எம்.பி இதன்போது குறிப்பிட்டார். 

இடையில் குறுக்கிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், “ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டதால் கடந்த தடவை எமது கட்சிக்கு நாடாளுமன்றில் தனிக்கட்சிக்குரிய அங்கிகாரம் கிடைக்கவில்லை. அவ்வாறான அறிவிப்புகளைகூட விடுக்கமுடியாத சூழ்நிலை எமக்கு ஏற்பட்டது” என்றார். 

கருத்துகளுக்கு செவிமடுத்த, சபாநாயகர் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, நாளை (இன்று) அறிவிப்பதாகக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னம், வெற்றிலை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.    

"ஐ.ம.சு.வுடன் எமக்கு உறவில்லை: விமல் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty