‘இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் பெரும் ஆபத்து’
23-02-2017 09:06 AM
Comments - 0       Views - 53

ஜே.ஏ.ஜோர்ஜ்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்ற துறைசார் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது நிறைவடைந்ததும், புதிய சட்டமூலம் நாடாளுமன்றதுக்கு சமர்ப்பிக்கப்படுமென்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் விடுவது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அது, நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.  

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனால், நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இதன்போது, “நாட்டின் இனப்பிரச்சினை, யுத்தத்தின் பின்னரான நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க, அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொறிமுறை, நாட்டு மக்களுக்கானது. சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்து, இவ்வாறானதொரு முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை. அத்துடன், இது குறித்து நாட்டு மக்களுக்கே பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கு உள்ளதே தவிர, சர்வதேசத்துக்கு அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“1972 -1978ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் இல்லாத கருத்தொருமித்த தன்மை, தற்போது உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் உள்ளது. இலங்கை வரலாற்றில், புதிய அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பு, இப்போது ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பை உருவாக்கும் பணியை, மக்கள் நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளனர். இன்னுமொரு யுத்தம் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய ஒற்றுமையே இங்கு முக்கியம்.  

பெரும்பான்மையினரான சிங்கள மக்களுக்குபாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீர்வினை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார். பிளவுபடாத நாட்டில், அதிகாரப் பகிர்வினையே அவர்கள் முன்வைத்துள்ளனர். நாம் எந்தக் கட்சியாக இருந்தாலும், மக்களின் பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை, இராணுவ உதவியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

அடுத்த வருடம், 70ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகியுள்ளோம். அதற்குள், நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க வேண்டும். புதிய அரசியலமைப்பில், சிறுபான்மை மக்களுக்கும் சில சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னரான தீர்வை, நிலைமாறுகால நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே முன்னெடுத்து வருகின்றோம். பொறுப்புக்கூறல், மீள நிகழாமை, நிலையான சமாதானம் ஆகியவை தொடர்பில், மிகவும் அவதானமாக உள்ளோம்” என, அவர் மேலும் கூறினார்.

"‘இனப்பிரச்சினையை தீர்க்காவிட்டால் பெரும் ஆபத்து’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty