2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

‘தவழ்ந்து, தவழ்ந்தே மருமகன் வீட்டுக்குள் சென்றுள்ளார்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

“ஒரு பிள்ளையின் தந்தையான என்னுடைய மருமகன், வீட்டு வாசலில் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோதே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் மீது துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த அவர், வாசலிலிருந்து தவழ்ந்து, தவழ்ந்தே வீட்டுக்குள் சென்றுள்ளார்” என்று காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண  பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் (வயது 31) மாமியார் வாக்குமூலம் அளித்துள்ளார்.  புதன்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவம் தொடர்பில், விமல்ராஜின் மாமியாரான ஓய்வு பெற்ற ஆசிரியை ஞானம்மா குழந்தை வடிவேல், நேற்று (23) தொடர்ந்து வாக்குமூலமளிக்கையில்,   

“எங்களுடைய வீட்டு வாசலில், இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது, வீட்டில் நான் இருக்கவில்லை. களுதாவளையில் உள்ள என் தங்கையின் வீட்டிலேயே நான், அப்போது நின்றேன்.   

மருமகன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருடைய வலது கையிலும், விலா பகுதியிலும் துப்பாக்கிச்சூட்டு காயங்கள் உள்ளதாகவும் அன்றிரவு 7:30க்கே எனக்குக் தெரிவித்தனர்.   

களுதாவளையிலுள்ள, எங்களுடைய வீட்டில் திருத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற காணத்தினால், கிரான்குளத்தில் உள்ள மருமகனின் தயார் வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்துள்ளனர்.  

மகளும், பேரப்பிளையும் வீட்டுக்குள் இருந்துள்ளனர். மருமகன், தன்னுடைய தாயாரின் வீட்டாருடன் அலைபேசியில், வீட்டின் வாசலில் நின்று கதைத்துகொண்டிருந்துள்ளார்.   

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர், இறங்கி படலையை (கேட்) திறந்து கொண்டு உள்ளே சென்று ‘நீங்களா? விமல்?’ என்று கேட்டதாகவும், அதற்குப் பின்னரே தன்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மருமகன் தெரிவித்துள்ளார்” என்றும் வாக்குமூலமளித்துள்ளார்.   

“திடீரென இரண்டு தடவைகள், ஏதோ வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதுவும் வீட்டின் முன்வாசல் பக்கமாகவே அந்தச் சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று தெரியாமல், ஓடோடி வந்துபார்த்தபோது, அவருடைய கணவன் (எனது மருமகன்) வாசலில் விழுந்து கிடந்துள்ளார்.  

விபரீதத்தை அறிந்து, வீட்டுக்கு வெளியே, தான் வரவில்லை என்றும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, மோட்டார் சைக்கிளில் இருவர், மிகவேகமாக பயணித்துள்ளதை தான் அவதானித்ததாக, பின்னர் என்னிடம் தெரிவித்தார்.   

காயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் வாசலிலேயே விழுந்து கிடந்த என் மருமகன், தவழ்ந்து தவழந்து ஒருமாதிரியாக வீட்டுக்குள் சென்றுவிட்டார்.   

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய இருவரும், தலைகவசம் அணிந்திருந்ததுடன், ஜெக்கட் அணிந்திருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர் என்றும் தன்னுடைய வாக்குமூலத்தில், ஞானம்மா குழந்தை வடிவேல் தெரிவித்துள்ளார்.   

காயமடைந்த என் மருமகன் நேசகுமார் விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உடனடியாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றார். மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னன்குடா பிரதேசத்தில், காணி அபகரிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில், மேற்படி பணிப்பாளரே ஈடுபட்டு வந்துள்ளார். இது விடயமாக, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர், புன்னன்குடா பிரதேசத்தில் வைத்து, அவர் மீது தாக்குதல் நடத்த முயலப்பட்டுள்ளது.   

இந்நிலையில், காணிகளை பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் மக்களை, அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காக, புதன்கிழமை (22) அவர், ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார். நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பிய ஓரிரு மணித்தியாலங்களிலேயே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .