Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 130,000 வீடுகள் தேவையாக உள்ளன” என, மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிப்புற்றோருக்கான காசோலைகளை வழங்கல் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் கடன் திட்டத்தின் கீழ், கடன் பெற்றவர்களின் வாழ்வாதார உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியினை இன்று (26) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யுத்தத்தினால் பாதிப்புற்ற 105 பேருக்கு 75.43 மில்லியன் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன், யுத்தத்தினால் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் நட்டஈட்டுக் கொடுப்பனவும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பிரதான பிரச்சினையாக இருப்பது, வீடில்லாப் பிரச்சினையாகும். யுத்தம் காரணமாக இம்மாகாணங்களிலுள்ள வீடுகள் சேதமடைந்தன. இதன் அடிப்படையில் 130,000 வீடுகள் தேவையென அடையாளம் காணப்பட்டுள்ளது.
“இதனை மூன்றாண்டுகளுக்குள் நிர்மானிப்பதற்கு, அரசாங்கம் நடடிவடிக்கை எடுத்து, அதில் 50 சதவீதமான வீடுகளை 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நிர்மாணிக்க முயன்ற போதிலும், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. அதற்கான நிதியெல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், அது நடக்கவில்லை. இதில் யாரையும் நான் குற்றஞ்சுமத்த முன்வரவில்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“2016ஆம் ஆண்டு 15,000 வீடுகளும், 2017ஆம் ஆண்டு 25,000 வீடுகளும் நிர்மாணித்திருக்க வேண்டும். அதற்கான திட்டங்களே வகுக்கப்பட்டன. இந்த 50 சதவீதமான வீடுகளை நிர்மானித்ததன் பின்னர், 2018ஆம் ஆண்டில் அடுத்த 50 சதவீதமான வீடுகளையும் நிர்மானிக்கவே, எமது அமைச்சு திட்டமிட்டிருந்ததுது.
“பல்வேறு தடைகள் மற்றும் சவாலகளுக்கு மத்தியில் எமது அமைச்சு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களுக்கான நட்டஈடுகளை வழங்கி வருகின்றது. எதிர்காலத்திலும் இவ்வாறான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படும்” என்றார்.
இந்த வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தினி திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .