2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி

Kanagaraj   / 2017 பெப்ரவரி 27 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையில், கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்மீது, சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில், கைதிகள் ஐவரும், சிறைச்சாலை அதிகாரிகள் இருவருமென ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த நிலையில், படுகாயமடைந்த, மேலும் கைதியொருவரும், நான்கு அதிகாரிகளும் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், அதிகாரிகள் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக, பொலிஸ் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, மல்வத்த என்னமடல எனுமிடத்திலேயே இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) காலை 8 மணிக்கும் 8:30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றது.

வெடிச்சத்தங்கள், பட்டாசுகோர்வை வெடிக்கும் போது ஏற்படும் சத்தங்கள் போல ஆரம்பத்தில் கேட்டாலும், அச்சத்தங்கள், காதுகளை கிழித்துச்செல்வதைப் போன்று இருந்தமையை அடுத்தே, அப்பிரதேசமே அல்லோலக்கல்லோப்பட்டது.  
துப்பாக்கிதாரிகளினால், சிறைச்சாலை பஸ்ஸே இலக்கு வைக்கப்பட்டாலும், இரண்டொரு சன்னங்கள் அவ்விடத்துக்கு அருகிலிருந்த வீடுகளின், கூரைகள், யன்னல்கள் மற்றும் சுவர்களையும் பதம்பார்த்துள்ளன.

களுத்துறை மல்வத்தை சிறைச்சாலைக்கு சுமார் 500 மீற்றர் தூரத்தில், வீதியில் இரண்டு பக்கங்களிலும் மறைந்திருந்தவர்கள், சிறைச்சாலை பஸ்ஸின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கு விசாரணைகளுக்காக, அந்தச் சிறைச்சாலையிலிருந்து கடுவளை நீதவான் நீதிமன்றத்துக்கு கைதிகளை அழைத்துச்சென்ற, இரண்டு பஸ்களில், ஒரு பஸ்ஸின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால், சிறைச்சாலை பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சுக்குநூறாகின. சல்லடை கம்பிகளினால் வேயப்பட்டிருந்த, பஸ்ஸின் இரண்டு பக்கங்களும், துப்பாக்கிச் சன்னங்களினால் சல்லடையாக்கப்பட்டுள்ளன. அந்த பஸ், இரத்தவெள்ளத்தில் தோய்ந்திருந்தது. வீதியும் இரத்ததினால் உறைந்துபோயிருந்தது. சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையில், நீல நிறத்திலான கெப்ரக வாகனமொன்று அநாதரவாக கைவிடப்பட்டிருந்தது. சுமார் 16க்கும் 20க்கும் இடைப்பட்ட, குழுவொன்றைச்றைச் சேர்ந்த ஆயுததாரிகளே, துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர், பொலிஸ் சீருடைக்கு ஒத்ததான ஆடைகளை அணிந்திருந்தே, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கெப் ரக வாகனத்தில், அவ்விடத்திற்கு வந்திருந்த அக்குழுவினர், ஏற்கெனவே தயார் நிலையிலிருந்த வானில், அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக அந்த விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.

சிறைச்சாலை பஸ், சம்பவம் இடம்பெற்ற இடத்தை கடந்து செல்வதற்கு முன்னர், நீல நிறத்திலான அந்த கெப்ரக வாகனம், பஸ்ஸை இடைமறித்து வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னரே, அப்பஸ்ஸின் முன்பக்கத்துக்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஏககாலத்தில், இரண்டு பக்கங்களிலிருந்தும் சன்னங்கள் சரமாரியாக பாய்ந்துள்ளன.

பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில், நீண்டகாலமாக இடம்பெற்ற மோதலின் வெளிப்பாடே, இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில், பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான உதயங்க பதிரண பலியானார். இவர், கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும்  குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
'ரணலே சமயா' என்றழைக்கப்படும் இவர், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை இலக்குவைத்து 2015ஆம் ஆண்டு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனினும், அவருக்கு எவ்விதமான ஆபத்துகளும் அன்று ஏற்படவில்லை.

சம்பவத்தில், தமித் உதயங்க பத்திரண (ரணலே சமயா), சன்னக்க ஷலன, பிரசன்ன சம்பத், கெலும் பிரியங்கர மற்றும் பிரசன்ன குமார ஆகிய ஐந்து கைதிகளும்,  சிவானந்தம் தர்மீகன் (சிறை காவலாளி) மற்றும் ஆர். விஜேரத்ன (ஜெயிலர்) ஆகியோரும் பலியாகியுள்ளனர் என்று, சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில், களுத்துறை மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
புhதாள உலகக் கோஷ்டியின் தலைவரான ரணலே சமயாவுக்கு எதிரான குழுத்தொடர்பில், இனங்காணப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் வந்ததாக கூறப்படும் கெப் ரக வாகனத்தின் உரிமையாளரை அடையாளம் கண்டுள்ளதாகவும், சிறைச்சாலையிலிருந்து அந்த பஸ், புறப்படும் நேரம் மற்றும் பயணிக்கும் வீதிகள் தொடர்பில் தகவல் ஏதும் கசிந்துள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

இதேவேளை, தெமட்டகொட சமந்தவை இலக்குவைத்து, வெலிக்கடை சிறைச்சாலை பஸ்ஸின் மீது, மாளிகாவத்தையில் வைத்து 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் இடம்பெற்று, ஒருவருடம் ஆவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்ற நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .