கம்மன்பில ஒரு கதை சொன்னார்: ஆஸி பிரஜை சாட்சி
02-03-2017 03:43 AM
Comments - 0       Views - 113

பேரின்பராஜா திபான்

“கொழும்புக்கு வரும் சந்தர்ப்பங்களில், விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் செல்வதற்கு சிட்னி ஜயசிங்கவே வழமையாக வருவார், எனினும், அன்றையதினம் வந்த கம்மன்பில, எனக்கொரு கதை சொன்னார்” என்று,

போலி அற்றோனிப் பத்திரத்தை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கின் சாட்சியாளர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (01) சாட்சியமளித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, 1995ஆம் ஆண்டில் போலி அற்றோனிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அரச புலனாய்வு சேவையினரால் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போதே அவர் சாட்சியமளித்தார். 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பித்த போது, கம்மன்பில சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, அதிகுற்றச்சாட்டுப் பத்திரத்தில் பிழைகள் காணப்படுவதாகவும், கணினி ஆவணம் தொடர்பில் மேலும் ஆராய வேண்டும் என்பதால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

கணினி ஆதாரங்களை ஆராய போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அதன்போதே, சாட்சியாளரான அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரயன் சாதிக், விடயத்தைக் கூறினார். 

சிட்னி ஜயசிங்கவின் மகனான, முதித்த ஜயசிங்கவினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது என்றே கம்மன்பில கதை கூறியதாகவும் அந்தக் கதையை மீண்டும் கூறினார் என்றும் அவர் சாட்சியமளித்தார். 

அற்றோனிப் பத்திரத்திலுள்ள கையெழுத்து தன்னுடைய கையெழுத்தை ஒத்திருந்தாலும் அது போலி எனவும் குறிப்பிட்டார். 

1990ஆம் ஆண்டுகளில், சிட்னி ஜயசிங்கவுடன் சேர்ந்து இலங்கையில் தொழில் ஆரம்பித்த பின்னரே, கம்மன்பிலவைத் தெரிய வந்ததாகவும் அவர் ஜயசிங்கவுக்குக் கீழ் வேலை பார்த்தார் என்றும் சாட்சியமளித்தார்.

"கம்மன்பில ஒரு கதை சொன்னார்: ஆஸி பிரஜை சாட்சி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty