கொள்ளையடிக்கச் சென்ற மூவர் கைது
03-03-2017 12:02 PM
Comments - 0       Views - 14

முஹம்மது முஸப்பிர்

ரஸ்நாயகபுர புனர்வாழ்வு நிலையத்திலிருந்து வெளியேறி, வீடொன்றில் கொள்ளையிட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவரை, பிரதேச மக்களின் ஒத்துழைப்போடு இன்று (03) அதிகாலை கைது செய்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பல பிரதேசங்களிலிருந்தும் புனர்வாழ்வளிக்கப்படுவதற்காக, ரஸ்நாயகபுர பிரதேசத்தில் இயங்கி வரும் குறித்த புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தங்கியிருந்து புனர்வாழ்வு பெற்று வந்தர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், பள்ளம பொலிஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் வழங்கிய தகவலில், தனது வீட்டினுள் திருட்டுத் தனமாக நுழைந்த மூவரைப் பிடித்து வைத்துள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பள்ளம பொலிஸார், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் தாம் ரஸ்நாயகபுர இளைஞர் புனர்வாழ்வு முகாமில் தங்கியிருப்பதாகவும், தமது பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இவ்வாறு இரவு நேரங்களில் எவருக்கும் தெரியாமல் நிலையத்திலிருந்து வெளியேறி கொள்ளையிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மதவாக்குளம் கம்மந்தழுவ, பெரியமடு போன்ற கிராமங்களில் பல வீடுகளில் நுழைந்து நகைகள் மற்றும் பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளமை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே. ஏ. சந்திரசேன, ஆனமடு உதவி பொலிஸ் அத்தியட்சர்கர் சமன் திசாநாயக்கா ஆகியோரின் உத்தரவின் பேரில், பள்ளம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பண்டார தலைமையிலான குழுவினரே சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

"கொள்ளையடிக்கச் சென்ற மூவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty