2026 ஜனவரி 17, சனிக்கிழமை

உயர் ஸ்தானிகரின் அறிக்கைக்கு த.தே.கூ வரவேற்பு

George   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் தேசிய கூட்டமைப்பானது, 2015ம் ஆண்டின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் வகையிலான, மனித உரிமை பேரவை உயர் ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறது.

இவ்வறிக்கையானது அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் போன்ற கருமங்கள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அரசாங்கம் செய்யத் தவறிய பல  முக்கியமான விடயங்கள் தொடர்பில் விமர்சனத்தையும் கொண்டுள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு, இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அறிக்கை தொடர்பில் அக்கறை செலுத்துவதோடு, நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயங்களான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபையை மறுசீரமைத்தல் வர்த்தக மற்றும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றன தொடர்பிலான  அரசாங்கத்தின்  நடவடிக்கைகள்  திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறது.

உண்மையில் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடற்ற நிலைமையானது, எம்மக்கள் கொண்டுள்ள  நம்பிக்கையை நேர்த்தியாக குறைந்து வருகின்றது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் நாம் தொடர்ந்து எமது கரிசனையை வெளிக்காட்டி வந்துள்ளதோடு, தனது பொருத்தனைகளை நிறைவேற்றும்படியான கால வரையுடன் கூடிய ஒரு செயற்றிட்டத்தை சமர்ப்பிக்கவும் வேண்டும் என  அரசாங்கத்திடம்  கேட்டிருந்தோம்.

வழமையான நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட சில  அடையாளபூர்வமான வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு அமைப்பு ரீதியில் காணப்பட்ட தவறுகளானது, அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன்படி சர்வதேச பங்களிப்புடனான விசேட நீதிமன்றத்தின் தேவையை வலியுறுத்தி காட்டுகின்றது.

உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளில் இந்த காரியமானது எதிரொலிப்பதை நாம் வரவேற்கிறோம். மேலும் காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும்  நாம் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறோம். இந்த விடயம் தொடர்பில் காரணமற்றதும் நேர்மையற்றதுமான  தாமதமானது, காணாமற்போனோரின் குடும்பங்கள் அனுபவிக்கும் அவஸ்த்தையை மேலும் அதிகரிக்க செய்கிறது.

ஆகவே, இலங்கை அரசாங்கத்தோடு மனித உரிமைகள் பேரவையானது  நெருங்கிய ஈடுபாட்டை கொண்டிருந்து இந்நாட்டின் முன்னேற்றங்களை கண்காணிக்கும்படிக்கான  உயர் ஸ்தானிகரின் அழைப்பை நாம் வரவேற்கிறோம்.

உயர் ஸ்தானிகரினால் எடுத்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்புமுனையாக மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் செயற்பட்டு சிறந்த நம்பிக்கையை வெளிக்காட்டுமாறு அரசாங்கத்திடம் நாம்  கேட்டுக்கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X