Administrator / 2017 மார்ச் 05 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மனித நேயம் இல்லாமல் போய்விட்டது. விசேடமாக, அரசியல்வாதிகள் தங்களுடைய அம்மாவை கூட தட்டில் வைத்து விற்பனை செய்வதற்கு தயாராகும் யுகமொன்று உருவாகியுள்ளது” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
மனித நேயத்தையே விழுங்கும் சமூகமே இன்று உருவாக்கியுள்ளது. பணத்துக்கும், இன்னுமின்னும் பணத்துக்காகவும் எவற்றையும் காட்டிக்கொடுப்பதற்கு தயாரானவர்கள், நமது நாட்டில் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நிட்டம்புவ, ஹொரகொல், ஒடிச்சிவத்த முஸ்லிம் வித்தியாலயத்தின் 25ஆவது வருடநிறைவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலைநிகழ்வு மற்றும் பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“என்னுடைய ஜனாதிபதி பதவிக்காலத்தில், கல்விக்கு விஷேடமான இடத்தை வழங்கியிருந்தேன். கல்வியமைச்சருடன், மணித்தியாலங்களாக, நாட்கணக்கில், வாரக்கணக்கில், கல்வி மேம்பாடு குறித்து பேச்சுவாரத்தை நடத்தி, அதனை முன்னெடுத்தேன். அதனூடாக கல்வித்துறையில் நாடு, பல்வேறான மாற்றங்களை கண்டது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“நவோத பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இரண்டு பாடசாலைகள் விகிதம், 400 பாடசாலைகளை தேர்ந்தெடுத்தோம். வடக்கு-கிழக்கில் யுத்தம் நிலவியமையால், அந்த மாகாணங்களில் இருந்த பாடசாலைகளில் கையை வைப்பதற்கு இடமில்லாமல் போய்விட்டது” என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் ஆட்சிபீடம் ஏறியபோது, பாடசாலைகளில் அதிபர்கள் இல்லை. அதிபர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானோர், கொழும்பை நோக்கியே வருவதற்கு முயன்றனர். பின்தங்கிய மாகாணங்களில் கடைமையாற்றிய, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்கினோம்’ என்றார்.
“அவ்வாறு, பாடசாலைகளை அபிவிருத்தி செய்துகொண்டு வந்தபோதுதான், ஆட்சி மாறிவிட்டது. இன்று, ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .