தேர்தல் காலத்தில் ‘என்னை ஒட்டு கேட்டார் ஒபாமா’
06-03-2017 03:21 AM
Comments - 0       Views - 30

​கடந்தாண்டு நவம்பர் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக் கட்டங்களில், அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது உரையாடல்களை ஒட்டுக் கேட்டார் என, ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். எனினும் அவரது இக்குற்றச்சாட்டுக்கு அவர், ஆதாரமெதனையும் முன்வைத்திருத்திருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பை வெற்றிபெறச் செய்வதற்காக, ரஷ்யர்கள் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. அத்தோடு, அவரோடு நெருங்கிய பலரும், ரஷ்யர்களுடன் தொடர்புகளைப் பேணினர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதில் இறுதியாக, சட்டமா அதிபர் ஜெப் செஸன்ஸ், சத்தியத்தின் கீழ் பொய் கூறினார் எனக் குற்றச்சாட்டு எழுந்ததோடு, ரஷ்யா தொடர்பான விசாரணைகளிலிருந்து விலகுவதாக, கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான கவனத்தைக் குலைக்கும் நோக்கிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்தக் குற்றச்சாட்டு அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

“மிகவும் புனிதமான தேர்தல் நடவடிக்கைகளின் போது, எனது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்குமளவுக்கு, எவ்வளவு கீழ்த்தரமாக ஜனாதிபதி ஒபாமா சென்றுள்ளார். இது, நிக்ஸன் / வோர்ட்டர்கேற் போன்றது. தவறான (அல்லது மோசமான) மனிதர்!” என்று,  ஜனாதிபதி ட்ரம்ப், தனது டுவிட்டர் கணக்கில், நேற்று முன்தினம் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தேர்தலுக்குச் சற்று முன்பாக, ஒக்டோபர் மாதத்தில், ஜனாதிபதி ஒபாமா, என்னுடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்டார் என்பதைக் கொண்டு, சிறப்பான சட்டத்தரணியொருவர், சிறந்த வழக்கொன்றை விவாதிக்க முடியும் என நான் நம்புகிறேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் வீடு, அலுவலகம் ஆகியன அமைந்துள்ள ட்ரம்ப் கோபுரத்திலேயே, இந்த ஒட்டுக்கேட்டல் நடைபெற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அவ்வாறு ஒட்டுக் கேட்டபோது, எதையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்கத் தேர்தல் வழக்கங்களின்படி, பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி, புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதில்லை, அதேபோன்று புதிய ஜனாதிபதி, முன்னைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் பற்றி, பெரிதளவுக்குக் கதைப்பதில்லை.

ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள், இந்தப் பாரம்பரியத்தை உடைத்துள்ளன.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பேச்சாளர் ஒருவர், “ஜனாதிபதி ஒபாமாவோ அல்லது வேறொரு வெள்ளை மாளிகை அதிகாரியோ, எந்தவோர் ஐ.அமெரிக்கப் பிரஜை மீதும், கண்காணிப்புகளை மேற்கொள்ள உத்தரவிடவில்லை. அதற்கு மாறான எந்தக் கருத்தும் பொய்யானது” எனத் தெரிவித்தார்.

"தேர்தல் காலத்தில் ‘என்னை ஒட்டு கேட்டார் ஒபாமா’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty