2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் தெரிவு

Administrator   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- என்.கே.அஷோக்பரன் LLB (Hons)  

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன?- 82 

குட்டிமணி என்று அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரனை தமது கட்சியில் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமித்தமையை நியாயப்படுத்தி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.   

அந்த அறிக்கையில், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது காந்திய சிந்தனையான அஹிம்சைக் கோட்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. மாறாக வெறுமனே வசதிக்காக அஹிம்சையை ஆதரிக்கவில்லை.   

குட்டிமணி ஏதேனும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தன்னை அதிலிருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறது. அஹிம்சை மீதான எமது உறுதியான பற்றுறுதி மாறாத போதிலும், நாம் பின்வரும் விசேசத்துவம் மிக்க காரணங்களுக்காக குட்டிமணியை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கும் முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.   

முதலாவதாக, குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.   

மேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.   

அத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். 

மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது.   

மேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

அந்த அறிக்கையில் மேலும், 1971 ஜே.வி.பி கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பின்பு விடுதலை செய்யப்பட்டதைச் சுட்டிக் காட்டியதுடன் தமிழ் இளைஞர்கள் அதற்கு முரணான, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது.  

குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனத்துக்கான இந்த நியாயங்கள் ஒரு வலுவான அடையாளபூர்வ எதிர்ப்பை சுட்டிநிற்கிறது. இது வரவேற்கத்தக்கதொன்றே.

ஆனால், குட்டிமணியை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிறுத்தியிருக்குமானால், அது அடையாள எதிர்ப்பு என்பதற்கு, இன்னும் வலுச்சேர்த்திருப்பதுடன், தமிழ் மக்கள் மீது ஏவப்பட்டிருந்த அரசாங்க பயங்கரவாதத்துக்கு எதிரான தமிழ் மக்களின் ஏகோபித்த குரலைப் பதிவுசெய்வதற்கான வாய்ப்பாகவும் இருந்திருக்கும்.

ஆனால், அதனைச் செய்வதற்கு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தவறிவிட்டது.   

ஹெக்டர் கொப்பேகடுவ  

1982 ஒக்டோபர், ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான தெரிவு என்பது சிக்கலானாதாகவே இருந்தது. நிச்சயமாக தமிழ் மக்களுக்கெதிராக கலவரம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பெரும் அநீதிகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஜே.ஆரை ஆதரிப்பதென்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்புடைய தெரிவாக இருக்கவில்லை.   

பிரதான மாற்றாக இருந்த தெரிவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவ. ஹெக்டர் கொப்பேகடுவ 1970-1977 வரை சிறிமாவோ ஆட்சியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தவர். சிறிமாவின் காலத்தில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற அத்தனை அநீதிகளையும் தமிழ் மக்கள் மறக்கவில்லை.   

ஆனால், சிறிமாவின் மானியக் கொள்கைகள், குறிப்பாக விவசாய மானியங்கள் வடக்கு-கிழக்கு விவசாயிகளிடையே பெரும் ஆதரவுபெற்ற ஒன்றாக இருந்தது. ஜே.ஆரின் ஆட்சியில் மானியங்கள் மற்றும் விவசாய உதவிகள் கணிசமாகக் குறைந்திருந்தன.   

இதனைத் தனக்குச் சாதகமான பிரசார யுக்தியாக ஹெக்டர் கொப்பேகடுவ கைக்கொண்டார். ஜே.ஆரின் ஆட்சியில் குறைக்கப்பட்ட மானியங்கள் மற்றும் விவசாய உதவிகளைத் தான், ஜனாதிபதியானால் மீள அறிமுகப்படுத்துவேன் என்று ஹெக்டர் கொப்பேகடுவ முழங்கினார்.  

ஜே.ஆருக்கு எதிரான தமிழர்களின் அலையைத் தனக்குச் சாதகமாக்க ஹெக்டர் கொப்பேகடுவ திட்டமிட்டார். அதன்படி, தமிழ் மக்கள் பெரிதும் வெறுத்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் முன்வைத்தார். தான் ஜனாதிபதியானால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.   

அத்தோடு 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பும் இல்லாதொழிக்கப்பட்டு, மீண்டும் 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்தார்.   

இது பற்றிக் கூட்டமொன்றில் பேசும்போது, “ஒரு தனிநபரிடம் அதிகாரங்களைக் குவித்திருக்கும் இந்த அரசியலமைப்பு எங்களுக்கு தேவையில்லை. நாம் நாடாளுமன்ற அதிகாரமுறைக்கு மாறுவோம். இந்த அரசியலமைப்பின் கீழ் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திரமாகப் பேச முடியாது.

அப்படிச் செய்தால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்பட்டுவிடும். நாம் இந்த அரசியலமைப்பைக் கிழித்தெறிய வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.   

அது மட்டுமல்லாது, வடக்கில் மட்டும் மூன்று நாள் சுற்றுப் பயணம் நடத்தி பதினான்கு கூட்டங்களில் அவர் பேசினார். வடக்கில் அவர் சென்ற இடத்திலெல்லாம் கொஞ்சம் எழுச்சியான வரவேற்புக் கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை.   

அது அவருக்கு ஆதரவான எழுச்சி என்பதை விட ஜே.ஆருக்கு எதிரான எழுச்சி என்பதுதான் உண்மை. ஜே.ஆருக்கு எதிராக மேடைகளில் கடுமையாக முழங்கினார் ஹெக்டர் கொப்பேகடுவ. “ஜே.ஆர் தன்னை நெப்போலியன் என்கிறார். ஆம், இது வோட்டர்லூ சமர். நான் வெலிங்டன் பிரபு. இந்த நெப்போலியனை அடித்து விரட்டப்போகும் வெலிங்டன் பிரபு” என்று மேடைகளில் அவர் கர்ஜித்தார்.   

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய வெளிப்படையான ஆதரவினை ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

ஜே. ஆர்  

வடக்கு-கிழக்கில் தனக்கு எதிரான அலை காணப்படுவதை ஜே.ஆர் அறிவார். அதனால் அவர் வடக்கு பற்றி, தேர்தலில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. மாறாக மலையகம் மீது அவர் அதிக கவனம் செலுத்தினார்.   

சௌமியமூர்த்தி தொண்டமானின் ​வெளிப்படையான ஆதரவு ஜே.ஆருக்குப் பெரும் பலமாக அமைந்தது. வடக்கைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே ஜே.ஆர் பங்குபற்றினார்.   

1977 தேர்தலுக்குப் பிறகு ஜே.ஆர் வடக்குக்கு விஜயம் செய்த முதல் தடவை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜே.ஆரின் ஐந்து வருட ஆட்சி, ஜே.ஆர் தொடர்பான தமிழர்களின் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.  
 ஜே.ஆரின் யாழ் வருகையைப் புறக்கணித்துக் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும்படி தமிழீழ விடுதலை முன்னணியும் தமிழீழ மாணவர் பொது ஒன்றியமும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.   

‘தமிழர் நாம் வந்தாரை வரவேற்கும் பண்புடையவர்கள். ஆனால் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை நாம் வரவேற்கமாட்டோம்’ என்ற தொனியிலான கோசங்கள் ஆங்காங்கே ஒலித்தன.   

ஜே.ஆர் வடக்கு மக்களுக்குச் சுருக்கமான செய்தியைச் சொன்னார். “நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். ஆனால், கட்டாயம் சென்று வாக்களியுங்கள். அது மக்கள் இறைமையைக் காப்பாற்றுவதற்கு அவசியமானது. தேர்தலைப் புறக்கணிக்காதீர்கள்” என்றார்.   

இது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தலைப் புறக்கணிக்கும் அழைப்புக்கு எதிர்மாறானதாக அமைந்தது. தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதானது ஜே.ஆருக்கு சாதகமாகவே அமையும் என்பதை ஜே.ஆர் அறிவார்.   

தமிழ் மக்களிடம் தான் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்று ஜே.ஆர் எண்ணியிருக்கலாம். அதுதான் ஜே.ஆர்!   

ஆனால், தமிழ் மக்கள் வித்தியாசமானவர்கள் என்பதை அவர் உணரத்தவறி விட்டார். 1982 ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி என்ற தொனிப்பொருளை ஜே.ஆர் முன்னிலைப்படுத்தினார்.

ஐந்து வருட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளையும் முன்னேற்றங்களையும் தனது ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் முன்னிறுத்த ஜே.ஆர் தவறவில்லை.   
இதே கருத்தைத்தான் தனிப்பட ஒவ்வொரு குடிமகனுக்கும் கடிதமாக எழுதினார். நாட்டின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்கும் தனக்கு வாக்களிக்குமாறு ஜே.ஆர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.   

றோஹண விஜேவீர  

மறுபுறத்தில் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா, ஜே.ஆரின் எதேச்சாதிகாரத்துக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டார். ஜே.ஆரை ஒரு மோசமான சர்வாதிகாரியாக அவர் சித்தரித்தார்.   

கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா ஒரு பழுத்த இடதுசாரித் தலைவராக இருந்தாலும் இடதுசாரி அரசியல்தளம் இப்போது லங்கா சமசமாஜக் கட்சியிடமிருந்து றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வீ.பியிடம் மாறியிருந்தது.   

பெரும் இளைஞர் படையொன்றை நாடெங்கிலும் ஜே.வீ.பி கொண்டிருந்தது. இத்தனை வருடங்களில் லங்கா சமசமாஜக் கட்சியோ, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோ சாதிக்கமுடியாததை ஜே.வீ.பி சாதித்திருந்தது.

1982 ஜனாதிபதித் தேர்தலில் புதிதாக பதிவுசெய்யப்பட்ட கட்சியான ஜே.வீ.பி (மக்கள் விடுதலை முன்னணி) சார்பில் களமிறங்கியிருந்த றோஹண விஜேவீர, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பிரதான கட்சிகளுக்கெதிரான மாற்றாக ஜே.வீ.பியை முன்வைத்து, தனது பிரசாரத்தை முன்னெடுத்தார்.  

“‘ஐக்கிய தேசியக் கட்சி இந்தநாட்டை 19 வருடங்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 16 வருடங்களும் ஆட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்து இந்தக் கட்சிகள் வெகுசனங்களை ஏமாற்றியிருக்கின்றன.

இரண்டின் ஆட்சியும் அநீதியும் அநியாயமும் இலஞ்சமும் ஊழலும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவற்றின் ஆட்சியில் சாமான்யர்களுக்கான நீதி மறுக்கப்பட்டது. நான் ஜனாதிபதியானால் இந்த நிலையை மாற்றுவேன்” என்று அவர் முழங்கினார்.   
கிராமப்புற சிங்கள இளைஞர்களிடையே மீண்டும் ஓர் எழுச்சியை றோஹண விஜேவீர விதைத்துக்கொண்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளின் நேரடிப் பயன்கள் மக்களை உடனடியாகச் சென்றடையாத வேளையில், மக்களிடம் எழுந்திருந்த அதிருப்தியை றோஹண விஜேவீரவும் ஜே.வீ.பியும் நன்றாக அறுவடை செய்துகொண்டிருந்தது.   

குமார் பொன்னம்பலம்  

இவை இவ்வாறிருக்க, மறுபுறத்தில் ஒரே தமிழனாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் களமிறங்கியிருந்த குமார் பொன்னம்பலம் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தித் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார்.   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவைக் குமார் பொன்னம்பலம் கடுமையாக விமர்சித்தார். தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தல் என்பது ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு ஆதரவாகவே அமையும். 

ஆகவே, ஜே.ஆரின் நலனுக்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மறைமுகமாக செயற்படுகிறது என்று குமார் பொன்னம்பலம் தனது குற்றச்சாட்டினை முன்வைத்தார்.   

( அடுத்த வாரம் தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .