விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி
06-03-2017 07:07 PM
Comments - 0       Views - 17

ரஸீன் ரஸ்மின்

முந்தல், கணமூலை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

முந்தல் சமீரகமயைச் சேர்ந்த நெய்னா மரிக்கார் முஹம்மது ரிபான் (வயது 27) எனும் இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர், இன்று (6) காலை சமீரகமையிலிருந்து கணமூலைப் பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, கணமூலை அலையடி பிரதேசத்தில் எதிரே வந்து வீதியை குறுக்கறுத்த முச்சக்கர வண்டியொன்றில் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

பின்னர், இவ்விபத்துச் சம்பவம் பற்றி முந்தல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், விபத்துடன் முச்சக்கர வண்டியின் சாரதியைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக, முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் ஜனாஸா, மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் மற்றும் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பதுருதின் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.

இவ்விபத்து குறித்து முந்தல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty