பிரெக்சிற் பேரம்பேசல் விவகாரம்: பிரதமர் தெரேசா மே தோற்கடிக்கப்பட்டார்
08-03-2017 09:15 PM
Comments - 0       Views - 19

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) இறுதி நிபந்தனைகளை நிராகரிப்பதற்கான, மேலதிக அதிகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உயர் சபை வாக்களித்துள்ளது.  

தமது பேரம்பேசுதல்களில் தடை ஏற்படுத்த வேண்டாம் என பிரதமர் தெரேசா மே அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு மத்தியிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான இறுதி நிபந்தனைகளை நிராகரிப்பதற்கான மேலதிக அதிகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உயர் சபை, நேற்று (07) வாக்களித்துள்ளது.  

மேற்கூறப்பட்ட வாக்களிப்பானது, 366க்கு 268 என்ற வாக்குகள் ரீதியில் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், “ஐரோப்பிய ஒன்றிய (வெளியேறுவதற்கான குறிப்பு) சட்டமூலத்தில்” மேலதிக நிபந்தனையொன்றையும் சேர்த்திருந்தது.  

குறித்த சட்டமூலமே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான பேச்சுகளை பிரதமர் மே ஆரம்பிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. இந்த அதிகாரத்தை, இம்மாத இறுதியில் பயன்படுத்துவதற்கு, பிரதமர் மே திட்டமிட்டுள்ளார்.  

இந்நிலையில், திருத்தப்பட்ட சட்டமூலத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான எந்தவோர் இணக்கமும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட முன்னர், பிரித்தானிய நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டுமென்றும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இணக்கமொன்று இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் முடிவொன்றை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

இதனையடுத்து கருத்துத் தெரிவித்துள்ள பிரெக்சிற் அமைச்சரான டேவிட் டேவிஸ், கீழ்ச் சபையில் அங்கிகாரத்துக்காக சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்போது, மாற்றங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனக் கூறியுள்ளார். எவ்வாறெனினும், கீழ்ச் சபையில் சிறிய பெரும்பான்மையையே,  பிரதமர் மே கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சந்தர்ப்பத்தில், பேரம்பேசுதல்களிலிருந்து பிரதமர் மே வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதால், மோசமான இணக்கமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி, அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து, பிரெக்சிற் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"பிரெக்சிற் பேரம்பேசல் விவகாரம்: பிரதமர் தெரேசா மே தோற்கடிக்கப்பட்டார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty