கால அவகாசம்: நீதிக்கான தேடலை நீர்த்து போக செய்யும்
10-03-2017 06:01 AM
Comments - 0       Views - 265

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டேன்” என, ஓர் அரசாங்கம் தெளிவாகச் சொல்லிவிட்ட நிலையில், “அதே தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குக் கால அவகாசம் வழங்குவது, ஐ.நா மனித உரிமை பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும். அவ்வாறு கால அவகாசகம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும்” என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்களின் அரசியற் கட்சிகளின் கூட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையின் அனுசரணையுடன் ஐ. நா மனித உரிமை பேரவையில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நாட்டுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு ஆக்கபூர்வமாகத் தொழிற்படுவது என்பதற்கு உதாரணமாக அமையக் கூடியது என, அந்நேரத்தில் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டது.  

ஆனால், இலங்கை அரசாங்கத்தை, இப்பிரேரணையின் இணை அனுசரணையாளர் எனும் தளத்துக்குக் கொண்டு வருவதற்காக, பிரேரணையின் உள்ளடக்கத்தில், உறுதியான சர்வதேச நியமங்களுக்கமைவான பொறுப்புக்கூறல் மற்றும் நீதிப்பொறிமுறைகளுக்கான அடித்தளமொன்றை இடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து, தெளிவற்ற வாசகங்களுடன் கூடிய கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றுக்கு விட்டுக் கொடுப்பு செய்யப்பட்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பை கொண்டிராதமையால், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகக்கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்பு பொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத் தராது என, நாம் அப்போதே குறிப்பிட்டிருந்தோம்.  

குறிப்பாக, ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு, இலங்கை நீதித்துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித்துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன. 

அத்தோடு, உண்மையான பொறுப்புக் கூறலில் அரசியல் விருப்பில்லாத இலங்கையின் கட்டமைப்புகளுள், சில வெளிநாட்டு நீதிபதிகளை மட்டும் சேர்த்துக்கொள்வதன் மூலம் மட்டும் பொறுப்புக்கூறல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதனை இது வெளிக்காட்டி நின்றது. 

ஆயினும், ஐ.நா மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறலுக்காக (இலங்கை அரசாங்கத்தினால்) ஒத்துக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முழுமையான விலகியுள்ளது.  

மிகக் குறைந்தளவான கலப்பு பொறி முறையை பரிந்துரை செய்திருந்த இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கையை நேரடியாகப் பெற்றுக்கொள்வதைக்கூட இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்திருந்தனர்.  

இலங்கை அரசாங்கம் ‘உண்மையைக் கண்டறிதலை’ முன்னிறுத்தி குற்றவியல் நீதியை, அல்லது நீதியைப் புறந்தள்ள முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகுந்தகரிசனை கொண்டுள்ளோம்.  

ஆனால், இப்போது இவை இரண்டையுமே பின் தள்ளி அரசியலமைப்பாக்கத்தை முன்னிறுத்தி நீதி, உண்மையைக் கண்டறிதல் ஆகிய இரண்டையும் பிற்போட வேண்டும் என, அரசாங்கம் கூறுகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை முன்னிறுத்தி உண்மையையும், நீதியையும், பொறுப்புக்கூறலையும் புறந்தள்ளுதல் காலத்தை இழுத்தடிக்கும் செயலாக, நாம் கருதுகிறோம்” என, குறிப்பிடப்பட்டுள்ளது.

"கால அவகாசம்: நீதிக்கான தேடலை நீர்த்து போக செய்யும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty