புலியால் சபையில் பெரும் சலசலப்பு
10-03-2017 01:29 AM
Comments - 0       Views - 73

ஜே.ஏ.ஜோர்ஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளால், ஆளும் தரப்பினருக்கும் எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில், சபையில் நேற்று (09) கடும் வாங்குவாதம் ஏற்பட்டதுடன், அவ்வப்போது சிரிபொலியும் எழுந்தது.  

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போதே, இவ்வாறு சலசலப்பு ஏற்பட்டது.  

1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், புலிகளால் கொல்லப்பட்டவர்களின் விவரங்களை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பத்ம உதயசாந்த குணசேகர மாவட்ட ரீதியாக கேட்டுவருகிறார். 

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பில் நேற்று (09) கேள்வியெழுப்பியிருந்தார். கேள்விகளுக்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருந்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பதிலளித்தார். 

இடையீட்டுக் கேள்வியை எழுப்பிய பத்ம உதயசாந்த எம்.பி, புலிக்கொடியுடன் புலிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அவை தொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் உள்ளன. அவைதொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று வினவியதுடன், இராணுவத்தினரையும் புலனாய்வு துறையினரையும் பிடித்து அடைத்துள்ளீர்கள் என்றார். 

இதனிடையே எழுந்த, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, அந்தப் படம் உள்ளூர் இணையத்தளத்திலா அல்லது வெளிநாட்டு இணையத்தளத்திலா இருக்கிறது என்று வினவினார். 

திடீரென பதிலளித்த உதயசாந்த எம்.பி, அது எனக்கு தெரியாது. அவைதொடர்பில் நீங்கள் தேடிபார்க்கவேண்டும் என்றுகூறிவிட்டார். இதன்போது அவையிலிருந்தவர்கள் பலர் கெக்கென்று சிரித்துவிட்டனர். இன்னும் சிலர், வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தமை, அவர்களின் உடல் ஆடியதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிந்தது.  

இதற்கு பதிலளித்த கிரியெல்ல, “தெரியாவிட்டால் ஏன் கேட்கின்றீர்கள், வெளிநாட்டில் உள்ள புலிகளுக்கு இவர்கள் அநாவசியமான முறையில், பிரசாரம் செய்கின்றனர்” என்றார். 

இதன்போது குறுக்கிட்ட பிரதமர், “நான், அவுஸ்திரேலியாவுக்கு போனபோது, எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் 20 பேர் இருந்தனர். இவர்களின் குழுவும் (உதயசாந்த எம்.பியை பார்த்து) புலிகளின் குழுவும் இணைந்துதான் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனரா எனத்தெரியாது என்றார். 

இதனிடையே கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சாகல, புலிகளை முற்றாக அழித்துவிட்டோம். தலைத்தூக்க விடமாட்டோம் என்றனர். இப்போது புலி,புலி என, கூச்சலிடுகின்றனர்” என்றார். எனினும், அவ்வாறான இணையத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட விசாரிக்கப்படும் என்றார். 

எனினும், குறுக்கிட்ட நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, “மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்குச் சொந்தமான இணையத்தளங்களில் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களின் நற்பெயருக்குக் கேடு விளைவித்து, அவர்களது வரலாற்றை கறைப்படுத்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பிலும் நீங்கள் (சாகல ரத்னாயக்க) தேடிப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.   

"புலியால் சபையில் பெரும் சலசலப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty