மிதந்து வந்த தேவாலயத்தில் புத்த சிலைகள் மீட்பு
11-03-2017 03:00 PM
Comments - 0       Views - 259

எஸ்.ஜமால்டீன், வி.சுகிர்தகுமார்

அம்பாறை, ஒலுவிலை அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த, அலங்கரிக்கப்பட்ட மரத்திலான தேவாலயம் போன்று காட்சியளித்த, பாரிய தெப்பத்திலிருந்து, புத்தபெருமனின் சீடர் எனக் கருதப்படும் ஒருவரின் சிலையொன்றும் புத்தரின் சிலையொன்றும், மீட்கப்பட்டு, நேற்றிரவு அக்கரைப்பற்றுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று (11) பகல் மேலும் நான்கு சிலைகள் மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மிதந்து கொண்டிருந்த இத்தெப்பத்தை, அவ்வழியாகப் பயணித்த  ஒலுவில் துறைமுகக் கடற்படையினர்  மீட்டதோடு, அதற்குள் இருந்த புத்தரின் சீடரின் ஒருவருடையது எனக் கருதப்படும் 3 அடி மதிக்கத்தக்க சிலையும் 2 அங்குலம் அளவிலான புத்தரின் சிலையொன்றையும் நேற்றிரவு மீட்டுள்ளனர்.

பின்னர், விசேட தடவியல் பொலிஸாரின் உதவியுடன், இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், மேலும் நான்கு புத்த சீடர்களின் சிலைகள்; தெப்பத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட இத்தெப்பத்தின் வெளியே பௌத்த கொடிகளை ஒத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், தெப்பத்தின் உள்ளே புஜைகள் நடைபெற்றமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜெமீலின் உத்தரவுக்கமைய உப பொலிஸ் பரிசோதகர் இந்திர சாந்த தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

"மிதந்து வந்த தேவாலயத்தில் புத்த சிலைகள் மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty