ட்ரம்ப்பின் பயணத் தடைக்கு வெளிநாட்டுக் கொள்கை நிபுணர்கள் எதிர்ப்பு
12-03-2017 10:17 PM
Comments - 0       Views - 14

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள பயணத் தடை அறிவிப்பை, 130க்கும் மேற்பட்ட, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டுக் கொள்கை நிபுணர்கள், எதிர்த்துள்ளனர். இது, முன்னைய பயணத் தடையைப் போன்றே, தேசத்தின் பாதுகாப்பையும் நலன்களையும் பாதிக்கிறது என, அவர்கள் தெரிவிக்கின்றனர். 

முன்னாள் அரச அலுவலகர்களும் நிபுணர்களும் இணைந்து, கைச்சாத்திட்டுள்ள கடிதத்திலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனநாயகக் கட்சி சார்பாகவும் குடியரசுக் கட்சி சார்பாகவும், முன்னைய அரசாங்கங்களில் பணியாற்றிய இவர்கள், 134 பேர், இவ்வாறு கைச்சாத்திட்டுள்ளனர். 

“ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் பாதிக்கப்பட்டுள்ளோர், அக்குழுவை எதிர்ப்போர் உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு, அக்குழுவின் பிரசாரத்தையே மீண்டும் பிரதிபலிக்கும் செய்தியையே இத்தடை அனுப்புகிறது. இஸ்லாத்துடன் ஐக்கிய அமெரிக்கா போரிடுகிறது என்ற செய்தியே அதுவாகும்” என, அக்கடிதம் குறிப்பிடுகிறது. 

“முஸ்லிம் அகதிகளையும் பயணம் செய்வோரையும் வரவேற்பதற்கு, அதற்கு மாறாக, பயங்கரவாதிகளின் பொய்களையும் அவர்களது தவறான பார்வையையும் வெளிப்படுத்துகிறது” என, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுகிறது. 

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், “இந்தப் பணிப்புரையில் உள்ளடக்கப்பட்டது உட்பட்ட தடைகள், ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கும் அதிசிறந்த எங்களது தேசத்தின் நற்பெயருக்கும் ஆபத்தானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த பணிப்புரை, பூகோளத் தலைமை வழங்குவதற்கான நாட்டின் திறனைப் பாதிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர்கள், நாட்டின் தோழமை நாடுகள், ஏராளமான எண்ணிக்கையான அகதிகளை உட்வாங்குவதற்குத் தடுமாறிவரும் நிலையில், அவர்களுக்கான ஆதரவை வழங்காமலிருப்பதன் மூலம், நாட்டின் தேசிய பாதுகாப்பு, அச்சுறுத்தலுக்குள்ளாகும் என, அதில் மேலும் குறிப்பிடப்படுகிறது.

"ட்ரம்ப்பின் பயணத் தடைக்கு வெளிநாட்டுக் கொள்கை நிபுணர்கள் எதிர்ப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty